கட்டுரை

img

கர்சன் பாதையில் கஸ்தூரிரங்கன் குழு -வீ.மாரியப்பன்

கல்வி என்பது எந்த காலத்திற்கும் எந்த சமூ கத்திற்கும் பயன்படும் வகையில், நாகரீகத்தை தகவமைப்பதோடு, தன்னைத்தானே, தகவ மைத்துக் கொண்டு சமூக அவலங்களில் இருந்து தனது இலக்கை தீர்மானித்துக் கொள்ளும். ஆகவே கல்வி ஒரு அலங்காரப் பொருளல்ல. அறிவியல் பூர்வமான கல்வி, விடுதலையை பெற்றுக்கொடுக்கும். பகுத்தறிவு தருவதோடு, எதிர்த்து நிற்கும் ஆற்றலை, கேள்வி கேட்கும் துணிவை தரும். மனிதர்களுக்கிடையில் உள்ள பாகுபாட்டை, திறமைகளை அடையாளம் காட்டுவதோடு, மனிதனை அறியாமையிலிருந்து, அடக்கு முறைகளி லிருந்து, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கும். ஆகவேதான் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு கல்வியை பரிந்துரைத்தார்.  அத்தகைய கல்விக் கொள்கையை வரையரைக்கும் மத்திய அரசு, ஏற்கனவே இருக்கும் கல்விக் கொள்கையை விட மேம்பட்டதாக உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் மாறாக கல்வியில் இருந்த குறைந்தபட்ச வாய்ப்புகளையும், கல்வி உரிமைகளையும் மறுப்பதோடு சமூகநீதி, மாநில உரிமை, கூட்டாட்சித் தத்துவம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கங்களை சிதைத்து, அடுத்த தலைமுறைக்கு கல்வி கிடைப்பதை முற்றிலும் பறிக்கும் விதமாக மத்திய பிஜேபி அரசு இவ் அறிக்கையை தயார் செய்துள்ளது.

எதிர்கால சந்ததியின் மூளைகளை மாசுபடுத்த வேண்டுமானால் கல்வியை பயன்படுத்த வேண்டும். ஆகவே இளமையில் அவர்களை கைப்பற்ற வேண்டும் என்ற உத்தியை ஹிட்லர் மேற்கொண்டார். அவ்வாறே மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் அதன் தலைவர்கள் வெளிப்படையாகவே பாடத்திட்டங்களை மாற்ற அதற்கான கல்வியை வகுப்போம் என வெளிப்படையாக பேசி வந்தனர். மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்துப் பேசும் போது பள்ளி பாடத் திட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். ஸ்மிரிதி ராணி ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரதிய மதிப்பீடுகளுடன் கல்வி முறையை மாற்றி அமைத்தல் என்ற தலைப்பில் பேசும்போது தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை உருவாக்க வேண்டும் என்றார். ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சீசா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பின் தேசிய தலைவர் தீனநாத் பத்ரா இந்துத்துவாவிற்கும், தேசியத்துக்கும் உண்மையாக இருக்கும் அடுத்த தலைமுறையை வளர்க்க ஒரு தேசிய கல்வித் திட்டம் உருவாக்க வேண்டும் என கூறினார். தொடர்ச்சியாகவே ஆர்எஸ்எஸின் கூச்சலாகவே இருந்தது. அதன் அடிப்படையிலேயே டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை பிஜேபி அமைத்தது. அது சில உள்ளீடுகளை 2016 வெளியிட்டது. அக்கொள்கை கடும் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது 2017 ஜூன் 26ல் கஸ்தூரிரங்கன் தலைமையில் கல்வி குழு உருவாக்கப்பட்டது. இக்குழு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியின் அறிக்கையின் நகலோடு இன்னும் மாணவர்களுக்கு எதிரான பல அம்சங்களோடு வெளிவந்திருக்கிறது.

அரும்பிலே அறுத்தெறியும் திட்டம்

தொடக்க நிலை வகுப்புகளில் தக்கவைத்தல் முன்பருவ கல்வியின் தாக்கம் என்ற தலைப்பில் 30 ஆயிரம் குழந்தைகளை வைத்து என்சிஇஆர்டி மேற்கொண்ட ஆய்வில் முன்பருவ மழலையர் கல்வி என்பது வருமானம் குறைந்த  வேலைவாய்ப்பின்மை குற்றம், கைது, ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. என்று முதல் அத்தியாயத்திலேயே பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மிகச் சிறந்த முதலீடாக இசிசிஇ திட்டம் இருக்கும். அது ஒரு ரூபாய் முதலீட்டில் பத்து ரூபாய் லாபம் தரக் கூடியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் முதலீட்டில் பத்து ரூபாய் லாபம் என பார்த்தால் அது எவ்வளவு பெரிய குற்றம் என உணராமல், அதற்கு ஒழுக்கமான, நம்பகத்தன்மை மிக்க ஆக்கப்பூர்வ முதலீடு என விளக்கம் சொல்கிறது. கல்வி கொள்கையை உருவாக்கும் போது ஏற்கனவே உள்ள கொள்கையில் உள்ள குறைபாடுகளை களைந்து, மாநில கல்வி அமைச்சர்களை கொண்டு மாநிலங்களில் பரிந்துரைகள் மீது ஒரு விவாதம் நடத்தி குறிப்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை அறிய இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாகவே வெளிவந்திருக்கிறது. 3 வயது குழந்தைக்கு செய்தித்தாள்கள் மூலம் தொப்பி, படகு, செய்யக் கற்றுக்கொடுப்பது. சாக்லேட் குச்சிகளிலி ருந்து கிலுகிலுப்பை செய்வது என குழந்தைகளை வதைப்பதற்கான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது, மேலும் ஒரு இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுப்பது என குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நசுக்கும் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர். கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து, மகிழ்ச்சியான கல்வி தரும் ஸ்காண்டினேவியா, மருத்துவ கல்வி வரை இலவசமாக கொடுக்கும் கியூபா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கல்வி என்பது பொதுப் பள்ளிகளில் ,அருகாமை பள்ளிகளில், 6 வயதிற்கு மேல் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உலக நாடுகளின் அனுபவங்க ளை உள்வாங்காமலேயே மூன்று வயதில் குழந்தைகள் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது இவ்வறிக்கை.

கல்விக் குழுக்கள்

 கோத்தாரிக் கல்விக் குழு, யஷ்பால் கல்விக்குழு, பரிந்துரைகளை இடையிடையே குறிப்பிடும் அறிக்கையில் அறிவியல் பூர்வமான செயலாக்கம் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்தாமல் அதற்கு நேர்மாறாக பள்ளிக்கல்வி 12 ஆண்டுகளாக இருந்ததை,15 ஆண்டுகளாக மாற்றி தலைகீழ் மாற்றத்தைச் செய்துள்ளது. 3, 5, 8ம் வகுப்புக ளுக்கு பொதுத்தேர்வு. 9 முதல் 12 வகுப்பு வரை நான்கு ஆண்டுகள் செமஸ்டர் முறையில் எட்டு தேர்வுகள் என  தேர்வுக்கு 24 பாடங்களை எழுத வேண்டும் என குறிப்பிட்டுள் ளது.  ஏற்கனவே தேசிய தகுதித் தேர்வுகள் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் உட்பட அரசின் செயல்பாட்டால் மரணத்திற்கு உள்ளாகக் கூடிய சூழலில் மேலும் அதீத தேர்வுகள் மூலம் மாணவர்களை அரசுகாவு வாங்க துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

வர்ணாசிரம கல்விமுறை
2015 ஆம் ஆண்டு தேசிய அளவில் 6.2 கோடி மாணவர்கள் பள்ளியை விட்டு ஆறு வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் விலகி உள்ளனர். ஆகவே அதை தடுக்க இந்தியாவில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள எண்ணற்ற சிறப்புமிக்க மரபுகள் இசிசிஇமூலம் பாடத்திட்டத்திலும் கற்பிக்கும்  கட்டமைப்பிலும் இணைக்கப்பட வேண்டும். மேலும் குருகுலம், பாடசாலை, மதரசாக்கள், திண்ணைப் பள்ளிகள் அங்கீகரிக்கவேண்டும். வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் தோட்டக்கலை, மண்பாண்டம் செய்தல், மர வேலை செய்தல், எலக்ட்ரிஷியன் வேலை செய்தல் உள்ளிட்டவற்றை மூன்று வயது முதல் 8 வயது வரை உள்ளோருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறி குலக்கல்வியை, வருணாசிரம கல்வியைப் போதிக்க அறிக்கையில் முற்படுகிறது.

மொழித் திணிப்பு

வளர்ந்த நாடுகளைப் போன்று பன்மொழிக் கொள்கை இந்தியாவிற்கு தேவை.பல மொழி பேசுபவர் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்துள்ளார்கள். ஆகவே மும்மொழிக் கொள்கை அவசியம். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பிற்குள் மூன்று மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தி பேசாத மாநிலங்கள் மூன்றாவது மொழியாக ஹிந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும். இதற்கு அரசு நிதி உதவி செய்யும் என்றும் அறிவுக்களஞ்சியம் என சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்து மேலும் சமஸ்கிருத மொழி கலாச்சார ஒற்றுமைக்கு உதவுகிறது என அறிக்கை கூறுகிறது. உதவும். ஆகவே வரலாற்றைப் புரட்டிப் போடும் வகை யில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை பள்ளிப்பாடங்களில் எங்கு, எங்கு புகுத்த முடியுமோ அங்கெல்லாம் புகுத்தி அவற்றை கற்பிக்க வேண்டுமெனவும். சமஸ்கிருதம் இந்தியை திணிக்க பல்வேறு பரிந்துரைகள் இவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள்

நாட்டின் எதிர்காலத்தை, குழந்தையின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் வடிவமைக்கின்றனர் என சொல்லிவிட்டு. பத்து லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதை பூர்த்தி செய்வது குறித்துப் பேசாமல் அனுபவம் மூலம் பதவி உயர்வு, ஊதியமோ கொடுக்கப்பட மாட்டாது. அவர்க ளுக்கும் தகுதி திறமை என்ற அடிப்படையில் தேசிய தேர்வு நடத்தப்படும். எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு சோதனை திரையிடல், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் மேலும் தன்னார்வலர்களை ஆசிரிய ராக பணியில் அமர்த்தவும் அறிக்கையில் யோசனை கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தன்னார்வலர்கள் பள்ளி வகுப்பு களுக்கு அனுப்பினால் அந்த வளாகங்கள் ஆர்எஸ்எஸின் பாசறையாக மாறுமே தவிர அறிவார்ந்த மாணவர் உருவாக்கும் இடமாக நிலையம் இருக்காது.

பெண் கல்வி

வறுமையை, வன்முறையை ஒழிக்க பெண்கள் எளிதாக கல்வி பெறுவதால் மட்டுமே மாற்ற முடியும் என சொல்லிவிட்டு. வறுமையை ஒழிக்கவும் வன்முறையை தடுக்கவும் அறிவியல் பூர்வமான எந்த அம்சமும் இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத பரிந்துரைகளை முன்வைக்கிறது. பெண்கள் கல்வியை ஊக்குவிக்க குறிப்பாக வீடு களிலிருந்து கல்வி நிலையங்களுக்கு வரும் பெண்க ளுக்கு காவலர்கள் நியமிக்கப்படும் என்கின்றனர். பல்லா யிரக்கணக்கான மாணவிகள் பயிலும் மகளிர் பள்ளி கல்லூரிகளில் வாயில் கதவுகளை திறந்து விடுவதற்கு கூட காவலர்கள் இல்லாத போது எப்படி ஒவ்வொரு மாணவிக்கும் காவலர் நியமிக்க முடியும். மேலும் மாணவிகளுக்கு நடமாடும் இயங்கும் கழிப்பறைகளை ஏற்பாடு செய்யப்படும் என்கின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே மாணவிகள் பயிலும் 6,350 கல்வி நிலையங்களில் கழிப்பறை வசதிகள் இல்லை என மனிதவள மேம்பாட்டுத்துறை சுட்டிக் காட்டிய பின்பும் கழிப்பறைகளை உருவாக்கி கொடுக்காத அரசுகள். எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத பரிந்துரைகளை முன்மொழிகிறது என தெரியவில்லை. இதன்மூலம் ஒருபோதும் பெண் கல்வி ஊக்கப் படுத்த முடியாது.

அரசு பள்ளிகளை மூட திட்டம்

தொடக்கப்பள்ளி 28 சதவீதம், மேல்நிலை தொடக்கப் பள்ளி 11.8 விழுக்காடு 30க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகளில் 14 மாண வர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 303 ஓராசிரியர் பள்ளிகளை உள்ளன என அறிக்கை யில் சொல்லிவிட்டு அதை சரி செய்ய மாணவர் எண் ணிக்கையை உயர்த்த ஏற்பாடு செய்யாமல், மாணவர் குறைவாக  உள்ள பள்ளிகளை ஐந்து முதல் பத்து மைல் சுற்று வட்டாரத்தில் ஒருங்கிணைந்து, பள்ளி தொகுதிகளாக மாற்றவும். மாணவர் இல்லாத பள்ளிக்க கூடங்களை முடி நூலகமாகவும், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆக மாற்றவும் பரிந்துரைப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடும் அபாயம் காணப்படுகிறது.

கட்டணக் கொள்ளைக்கு முழுச் சுதந்திரம் 

தனியார் பள்ளிகளின் நோக்கம் தரமான கல்வி வழங்குவதாக மட்டுமே உள்ளது. ஆகவே அவை ஊக்கு விக்கப்படவேண்டும். மேலும் சந்தேகப் பார்வையோடு அதன் செயல்பாட்டை குறைக்கக்கூடாது. ஆகவே தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை தாங்களே நிர்ணயம் செய்ய சுதந்திரம் உண்டு என கஸ்தூரி ரங்கன் பரிந்து ரைத்துள்ளது. மேலும் தனியார் கல்லூரிகள் தாங்களாக பட்டங்களை கொடுக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க மாசிலா மணி தலைமையில் ஒரு கமிட்டி, கல்லூரி கட்டணங்களை நிர்ணயம் செய்ய பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டி ,அமைத்து அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்ட ணங்களை வசூல் செய்ய வேண்டும் என சொல்லியும் தனியார் கல்வி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து வரும் இச்சூழலில் தனியார் கல்வி நிறுவனங்களை கட்டணங்களை தாங்களே நிர்ண யிக்கலாம் என்ற பரிந்துரை தனியார் பள்ளி கல்லூரி முதலாளிகள் கொள்ளையடிக்க வாய்ப்பாகவே இது அமையும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஊக்குவிப்பு 

பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி வழங்குவது.  வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிக்க ஊக்கத்தொகை அளிப்பதோடு குறிப்பிட்ட காலம் வரை வேலை வாய்ப்பு பெற உத்தரவாதம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்பட இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதமும் கொடுக்காத இந்த அரசு வெளிநாட்டு பல்கலைக் கழ கத்திற்கும், மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதி லிருந்து இந்த அரசு யாருக்கான அரசு என்பதை அறிய முடிகிறது.

ஆராய்ச்சி படிப்பு 

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் லட்சத்திற்கு 15 பேர் மட்டுமே ஆராய்ச்சியாளராக இந்தியாவில் உள்ளனர். சீனாவில் லட்சத்திற்கு 15 பேரும், இஸ்ரேலில் 875 பேரும் ஆராய்ச்சியாளர்களாக வெளி வருகின்றனர். இந்தச் சூழலில் மாநில அரசுகளுக்கு தேவைப்படும் ஆய்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கூட வெறும் ஏழு சதவீத நிதி மட்டுமே அரசு செலவு செய்தால் எப்படி ஆராய்ச்சி யாளர்களை உருவாக்க முடியும். ஏற்கனவே ஆய்வு மாணவர்கள் கொத்தடிமைகளாக ஒரு சில வழிகாட்டிகளால் நடத்தப்படும் இந்த சூழலில், அவர்கள் பேராசிரியர்களுக்கு உதவியாக இருக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலிருந்து இது மேலும் சிக்கலை உருவாக்கும். 

மாநில உரிமை பறிப்பு

மாநில உரிமைகளை பறித்து கல்வியை மத்திய படுத்தும் நோக்கத்தோடு ஒரு புதிய உச்சபட்ச குழுவாக இராஷ்டிரிய சிக்சா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம் பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் என்கிற  மிகப்பெரிய ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது. 1904இல் பிறப்பிக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டம் இந்தியர்களிடையே தேசியவாத உணர்வைத் தூண்டியது. ஆகவே  கர்சன் பிரபு இந்தியர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படி யான கல்வி தங்கள் அரசாங்கத்தை அச்சுறுத்தும் என முடிவெடுத்து பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக்கழ கங்களில் கட்டணங்களை உயர்த்துவது, கல்வி நிறுவனங்களை மூடுவது என கல்வி உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நூறாண்டுகளுக்குப்   பின் அதே நிலைப்பாட்டை பாசிச பிஜேபி அரசு எடுத்திருக்கிறது.  ஆகவேதான் இந்தக் கல்விக் கொள்கையை தூக்கி எறிய இந்திய மாணவர் சங்கம் தேசம் முழுக்க கல்வி உரிமைப் பறிப்புக் கொள்கைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்தியாவின் விடுதலை, அதன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, உலகத்தின் பாதுகாப்புக்கே அவசியம்.

‘நாசிசம், பாசிசம், ராணுவ சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் போன்ற மக்களுக்கு எதிரான சக்திகளை வலுவோடு எதிர்கொள்ள வேண்டுமானால் இந்திய விடுதலை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து இந்தியாவின் விடுதலையை நனவாக்குவோம் அல்லது அந்த முயற்சியில் மடிவோம்’ என செய் அல்லது செத்துமடி  எனத் துவங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்ட தினமான ஆகஸ்ட் 9-இல் இத்தேசத்தின் அடுத்த தலைமுறைக்கான கல்வியை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை என்ற பெயரில் வந்திருக்கும் காவி கொள்கையை வெளியேற்ற அனைத்து மாணவர்களும் போர் முழக்கம் செய்துள்ளனர்.

கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர்

  

;