கட்டுரை

img

உளவு வேலையின் உள்நோக்கம் என்ன?

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் பெசாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகில் 1400 பேரின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்த்ததாக பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள் ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல் தலை வர்கள், மனித உரிமை ஆர்வலர்களும் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்த உளவு வேலை நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டதாகவும், அவரது செல்பேசி ஹேக் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜக வுக்காகவே இத்தகைய உளவு பார்க்கும் வேலை கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு கடந்த மே மாதமே தெரியும் என்றும் கூறப்படு கிறது. 

இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரி வித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளதும், அந்த எச்சரிக்கையில்  போதுமான விவரங்கள் இல்லாததால் பெரியதாக எடுத்துக் கொள்ள வில்லை என்று மத்திய அரசு கூறுவதும், ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இந்த உளவு வேலைக்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுக்கப்பட்டபோ தும் உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும் போது பாஜகவுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தனிநபர்களின் செல்போன்கள் மற்றும் கணினியை உளவு பார்ப்பது உச்சநீதிமன்றம் வரை யறுத்துள்ள தனிநபர் உரிமைகளை மீறுவதாகும். இஸ்ரேல் நிறுவனம் உளவு மென்பொருளை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே தாங்கள் தருவ தாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி மத்திய அரசு இந்த நிறுவனத்தை உளவு பார்க்க பயன்படுத்தியதா என்பது குறித்து பதில் சொல்லியாக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகைய உளவு மென்பொருளை தாங்கள் வாங்கவில்லை என்று மறுத்திருந்தபோ தும் மத்திய அரசின் கீழ் இயங்கும் புலனாய்வு நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தவில்லை என்று வெளிப்படையாக மறுக்கவில்லை.

பொதுமக்களின் ஆதார் உள்ளிட்ட விப ரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதை குறிப்பிட்ட தொகைக்கு விற்கவும் கூட மத்திய அரசு திட்ட மிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில் குடிமக்களின் தனிப்பட்டவிஷயங்களில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள் தலையிடுவது மிகப்பெரிய அபாய மாகும். இதைத் தடுப்பதற்கு உரிய சட்டத்தை இயற்றுவது மத்திய அரசின் கடமையாகும்.

;