கட்டுரை

img

உலகின் நுரையீரல் முதலாளித்துவத்தால் எரிக்கப்படுவது முறையா?

உலகின் நுரையீரல் என்று, இயற்கை ஆர்வலர்களாலும், ஆய்வாளர்களாலும் அன்போடு அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் நம் கண்முன்னே  தீக்கிரையாகிக் கொண்டுள்ளது. புவி வெப்பமையமாதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் கரிவாயுவின் பெருமளவை, அதாவது 90 பில்லியன் டன்  கரிவாயுவை, ஒளிச்சேர்க்கை முறையின் அடிப்படையில் தன்னுள் சுவாசித்துக் கொண்டு, மனிதனுக்கு தேவையான 20 சதவிகித பிராணவாயுவை இந்த  பூமிக்கு தருவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் 350 இனக்குழுக்களின் இருப்பிடமாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தின் ஆணி வேராகவும்  திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க இயற்கையின் கொடையான அமேசான் காடுகளை பேணிப் பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு, அதன் பசுமை  குன்றாமல் விட்டுச் செல்வது நமது கடமை. ஆனால் அத்தகைய காடுகள் நம் காலத்திலேயே பெரும் முதலாளிகளின் லாபமெனும் கோரப் பசியால்  அழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தங்கள் காடுகளை பாதுகாக்க போராடிய 600க்கு மேற்பட்ட இனக்குழு  மக்களும், சமுக செயற்பாட்டாளர்களும் முதலாளித்துவ கோரப் பற்களால் கிழித்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மனிதர்கள் நிலை இதுவெனில் அமேசான்  காட்டின் நிலையோ அதனினும் கொடியது. சுமார் இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வளர்ச்சி என்ற பெயரால் குறைந்தபட்சம் 1,330 சதுர மைல் பரப்பளவிலானகாடுகள் அழிக்கப்பட்டு, தனியார் பெரும் முதலாளிகளின் வணிக ஆளுமையின் கீழ் உள்ளது.

இப்போது எரியும் காட்டுத் தீ, வணிக நோக்கில் பெரும் முதலாளிகள் செயற்கையாக உருவாக்கியது என்று உலக ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும்  உலகளாவிய வனக் கண்காணிப்பு துறையின் மேலாளர் மிக்கேலா வெயிஸ், தன் வசம் உள்ள செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம்  சுட்டிக் காட்டுகிறார். இவரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வாதத்தை அழுத்தமாக பதிவிடுகிறார், ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சூழலியல் பேராசிரியர் தாமஸ்லவ்ஜாய். இயற்கையாக, தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலையில், மரங்கள் உரசுவதால் இந்தளவு பெரிய காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர்  கூறுகிறார். இந்த தீ மனிதர்களால் வணிக நோக்கில் செயற்கையாக எற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம், என்று தன் துறைசார்ந்த அறிவியலின்  அடிப்படையில் கூறுகிறார். அங்குள்ள பூர்வ குடிகளோ, இந்த தீ காடுகளை அழிக்க பெரும் முதலாளிகள், அரசியல் துணையோடு, துணிந்து செய்யும் பாவ  காரியம் என்று நம்புகின்றனர். அந்த மக்கள் அப்படி நினைப்பதற்கு வலுவான காரணம் இருப்பதாக பலர் கருதுகின்றனர். காடுகளை நாட்டின் வளமாக  பார்க்க வேண்டிய பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, அவற்றை பெரும் முதலாளிகள் தங்கள் பணத்தை அதிகரித்துக் கொள்ளும் இடமாக பார்ப்பதே மக்களின் ஐயப்பாட்டிற்கு காரணம் என்று சமூக செயல்பாட்டாளர்கள் பலர் ஆதாரத்தோடு கூறுகின்றனர். மேலும்  ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ காட்டினுள் சுரங்கங்கள் பல அமைத்து, அங்கு கிடைக்கும் வளங்களையும் ஒரு முதலாளியின் வசமாக்க விரும்புவது மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.

இந்த அமேசான் காட்டை வணிக களமாக்கும் சூதாட்டத்தில் முதலிடத்தை வகிப்பவராக, அம்மக்களாலும், சமுக செயற்பாட்டாளர்களாலும்  கைகாட்டப்படுபவர், பிளாக்ஸ்டோன்(BlackStone) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன். இவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிக நன்கொடை கொடுத்த அவரின் சிறந்த நண்பராவார்.  ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேனின் சொத்து மதிப்பை கேட்டால்  நம்மில் பலருக்கும் தலைச் சுற்றும், அவரின் நிறுவனத்திற்கு மட்டும் 500 பில்லியன் டாலர் சொத்துகள் உள்ளது. இத்தகைய பெரும் செல்வந்தரான இவர்  பெருமளவில் அமேசான் மழைக்காடுகளில் வேளாண் வணிகம் செய்கிறார். காட்டின் நடுவே,அந்நிறுவனத்தின் வேளான் பொருட்களை பிற நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்ய சுலபமாக இருக்கும் பொருட்டு, அம்மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அகல சாலைகளை அமைத்துள்ளார். சமுக  செயற்பாட்டாளர்கள் அவரின் வணிகம் குறித்தும், அகல சாலைகள் குறித்தும் வினவியமைக்கு, அவை அனைத்தும் மக்களின் மேம்பாட்டிற்கும், கரிவாயு  அதிகரிப்பை தடுப்பதற்கு மட்டும் என்று , தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறியதுப் போலவே, குழந்தை  கூட நம்பாத பெரும் பொய்யை,  சிறிதும் தயக்கமின்றி உதிர்க்கிறார்.

இப்படியாக உலகமெங்கும் முதலாளித்துவ அரசுகளின் பெரும் துணையோடு, அரமற்ற லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட முதலாளி வர்கம், சாமானிய மனிதனின் சொத்தான இயற்கை வளங்களைச் சுரண்டி, தங்களின் வங்கி கணக்குகளை, அளவில்லாத தொகைக் கொண்டு நிரப்புகின்றனர். மக்கள் நலம் சாரா, மக்களை இயந்திரமாக மட்டுமே பார்க்கும் முதலாளித்துவ அரசுகளோ, இந்த முதலாளிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. உழைக்கும்  வர்கமோ, நவீன கால அடிமைகளாக மாறியுள்ளனர். இந்த நிலை மாறுமா? மாற்ற வழி உள்ளதா என்று மக்கள் நலம் விரும்பும் கல்வியாளர்கள் பலர்  தேடிய போது, அவர்களுக்கு கிடைத்த பதில் மார்க்ஸின் கம்யூனிஸம். பெரும் முதலாளிகளாலும், முதலாளித்துவத்தால் பயனடையும் சிறு குழுக்களால்  மட்டுமே, கம்யூனிஸம் இந்த நவீன காலத்திற்கு ஏற்றதல்ல என்ற தவறான கருத்து, தங்களிடம் உள்ள பணபலத்தாலும், ஊடக பலத்தாலும் மக்கள் மனதில் 
பரப்பப்படுகிறது.

கம்யூனிஸம் என்றால் என்ன என்பதை நாம் உணர்ந்தால், நாம் எதிர்பார்க்கும் அரசியல், அதுதான் என்பதையும் நம்மால் உணர முடியும். கம்யூன் என்றால்  சமூகம் என்று பொருள். சமூகத்தில் வாழும் அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையை கொண்டது கம்யூனிஸம். சமூகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த சமூக மக்களுக்கு சொந்தமானது. அந்த சமூக மக்கள் ஒன்றாக உழைத்து, வரும் பலனை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.  தொழிற்சாலை அரசின் கண்காணிப்பில் இயங்கும். அங்கு உழைக்கும் அனைத்து தொழிலாளிக்கும் அதன் லாபம் பகிர்ந்தளிக்கப்படும். கம்யூனிஸ  முறையில் முதலாளி என்ற தனி நபர் லாபம் முழுவதையும் தன் சட்டை பைக்குகள் மறைக்க முடியாது. உழைக்கும் வர்கம் எனும் முதலாளிகளின்  அடிமைகளாய் ஒரு வர்கம் இராது. உழைப்பு சுரண்டலோ, இயற்கை வளங்களின் சுரண்டலோ இருக்காது. உயர்வு தாழ்வற்ற, அனைத்து மக்களின்  அடிப்படைகள் பூர்த்தி செய்யப்பட்ட உயர்ந்த நிலையே கம்யூனிஸம்.

சாமானியனின் மொழியில் கம்யூனிஸத்தை விளக்க வேண்டுமாயின், எவன் ஒருவன் தனக்கு கிடைக்கும் தரமான அடிப்படை வசதிகள், இந்த தரணியில்  வாழும் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறானோ அவன் ஒரு கம்யூனிஸ்ட்.மக்களின் உழைப்பை சுரண்டி ஒருவன் மட்டுமே செல்வம்  கொழிப்பதை தவறு என்று உணர்ந்தால் அவன் ஒரு கம்யூனிஸ்ட். இந்த அடிப்படையில் நோக்கும் போது பெரும்பான்மை மக்கள் அடிப்படையில் ஒரு  கம்யூனிஸ்ட். மக்கள் தங்களுக்குள் இருக்கும் கம்யூனிஸத்தை இனம் காணும் போது, மக்களுக்கான பொதுவுடமை சமுதாயம் பிறக்கும். அத்தகைய  பொதுவுடமை ஆட்சியில் மனிதர்கள் மட்டுமின்றி, அமேசான் காடுகள் போன்ற இயற்கையின் பொக்கிஷங்களும் பாதுகாக்கப்படும்.

-பூங்குழலி

;