கட்டுரை

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 : ஆசிரியர் பணியிடங்களில் உள்ளூர் ”கதாநாயகர்கள்”

27

ஆசிரியர் பணியிடங்களில் உள்ளூர் ”கதாநாயகர்கள்”

image.png

”உள்ளூர் சமூகத்திலிருந்து உதவிகள் மேலும் அதிக அளவில் வர வேண்டும். இந்த நெருக்கடியில் உதவும் வகையில், கற்பிப்பதில் ஆர்வமுள்ள உள்ளூர் சமூகத்தில் உள்ள படித்தவர்கள் மாணவர்களின் நிலைக்கு ஏற்ப குழுக்களை அமைத்து, பள்ளி நடக்கும் போது அல்லது பள்ளி முடிந்த பிறகு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் கீழ் குறைதீர் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மொழிரீதியான இடைவெளி இருந்தால், அதைக் குறைப்பதற்கும் இந்த உள்ளூர் சமூகத்தினர் உதவ முடியும். இத்தகைய உள்ளூர் பயிற்றுனர்கள் உண்மையான உள்ளூர் ஹீரோக்களாக இருப்பார்கள். அதிக அளவில் மாணவிகள் பங்கேற்பை உறுதிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உதவும் பொருட்டு, இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் தாய்மார்களாக இருப்பது நோக்கமாக கொள்ளப்படும்” (பக்கம் 57) என்ற பரிந்துரை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பை உள்ளூர் ‘ஆசிரியர்கள்’ ஏற்றுக் கொள்வார்கள் என்பதை, பெண்களுக்கு அதுவும் குறிப்பாக தாய்மார்களுக்கு முக்கியத்துவம் தருவதின் மூலமாக, மறைமுகமாக அழகான வார்த்தைகளில் பொதிந்து வைத்து ஆசிரியர்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கிறது. தரத்தின் அடிப்படையில் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, பள்ளி நடக்கும் போதே இந்த ‘ஆசிரியர்கள்’ பாடம் நடத்துவது என்பது முடிவான பின், அங்கே இருக்கின்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதல், ஆலோசனைகளுக்கு என்ன மதிப்பு இருந்து விடப் போகிறது?

1980களின் மத்தியிலேயே நாட்டின் கல்வி முறை மீதான அக்கறையின்மை துவங்கி விட்டது. மாணவர் – ஆசிரியர் விகிதத்தை சரிக்கட்டிக் காட்டுவதற்காக, ஆசிரியர் காலிப் பணியிடங்களில் உள்ளூர்காரர்கள், பஞ்சாயத்துகளின் மூலம் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்று ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டதற்கு இந்த அக்கறையின்மையே காரணமாயிற்று. ஆனாலும் உலக வங்கி மற்றும் பிற கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களைப் பொறுத்த வரை இந்த மாணவர் – ஆசிரியர் விகிதம் மிகச் சரியான அளவில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக, தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் நியமனம் என்பதற்கான முக்கியத்துவம் அற்றுப் போய் கல்வி அமைப்பின் முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டது. 1968 கோத்தாரி குழு, 1986 புதிய கல்விக் கொள்கைகள் என்று அனைத்து கல்விக் கொள்கைகளுமே தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்த போதிலும், ஆசிரியர்களை நியமனம் செய்யும் இவ்வாறான நடைமுறைகள் சமூக நீதிக்கு எதிரானதாகவும் மாறிப் போயின. இவ்வாறான முறையற்ற வழியில் தற்காலிக ஆசிரியராகும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், தலித், பழங்குடி சமூகத்தினர், பிற்படுத்தப்படவர்கள் என்று பல்வேறு சமூகத்தினரிடம் அவர்களிடமிருந்த வாய்ப்புகள் அனைத்தும் தட்டிப் பறிக்கப்பட்டன. 

ஆசிரியர்கள் அல்லாத, அவர்களுக்கு இணையாக உள்ளவர்களை தற்காலிகமாக நியமனம் செய்கின்ற போக்கை உறுதிப்படுத்தி அதிகப்படுத்துகின்ற வகையில் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று வகைப்படுத்தி ஆசிரியராவதற்கான தகுதி இல்லாதவர்களிடம் கல்வியை முழுமையாக ஒப்படைக்க இந்த வரைவு பரிந்துரைக்கிறது. ஆனாலும் இத்தகைய பரிந்துரை தனியார் பள்ளிகளுக்கும் செல்லுபடியாகுமா என்பதைக் கூற இந்த வரைவறிக்கை மறுத்து விடுகிறது. 

 

 

28

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019

பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

 

ஆழ உழுதலின் அகல உழுதலே மேல்???

image.png

பாடங்களைத் தேர்வு செய்வதில் நெகிழ்வுத் தன்மையை வழங்கி மாணவர்களுக்கான முழு அதிகாரம் அளித்தல் என்ற தலைப்பில் ”விளையாட்டு, யோகா, நடனம், இசை, ஓவியம், வண்ணம் பூசுதல், சிலை வடித்தல், மட்பாண்டம் செய்தல், தச்சு வேலை, தோட்ட வேலை, மின்சாரம் தொடர்பான வேலை உள்ளிட்ட அனைத்து பாடங்களும் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட அல்லது பாடத்திட்டத்திற்கு இணையான பாடங்கள் என்பதாக அல்லாமல், இவையனைத்துமே பாடத்திட்டம் என்பதாக மட்டுமே இனிமேல் கருதப்படும்” என்று வரைவறிக்கை குறிப்பிடுகிறது. தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை இந்த பரிந்துரை ஒட்டு மொத்த கல்வியையும் திறன் சார்ந்த கல்வி என்பதாக குறைத்து விடுகிறது. மனித வாழ்வியல், அறிவியல், சமூக அறிவியல் என்றில்லாமல் அனைத்து பாடங்களையும், கல்வி சார்ந்த, தொழிற்கல்வி சார்ந்த என்ற பிரிவினை இல்லாமல் பல்துறை சார்ந்த படிப்புகளையும் அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் எனும் பரிந்துரை துறைசார்ந்த தெளிவுடன் மாணவர்கள் ஆழமாகப் பயில்வதை அறவே ஒதுக்கி வைத்து விடுகிறது. அகல உழுதலின் ஆழ உழுவதே சிறப்பு என்ற முதுமொழி இனிமேல் செல்லாது என்று சொல்லும் இந்தப் பரிந்துரை. மாணவர்களின் முதுகில் இருக்கும் சுமையை கீழிறக்கி வைப்பதாக கூறி விட்டு, அதனைச் செய்து முடிக்காமல் தோள்களிலும், தலையிலும் அதிக சுமையை ஏற்றுகின்ற வேலையை கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.

image.png

”மேனிலைப் படிப்பு நான்காண்டு பல்துறை சார்ந்த படிப்புகளை உள்ளடக்கியது. அது இடைநிலைக் கல்வியில் கற்றுக் கொண்ட பொருள் சார்ந்த  கல்வி மற்றும் பாடத்திட்டங்களின் மீது கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். ஆனாலும் ஆழம் அதிகம் உள்ளதாக, அதிக விமர்சன சிந்தனை, வாழ்க்கை மீதான நாட்டம் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்துவதாக, மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். மேனிலைப் படிப்பின் ஒவ்வொரு ஆண்டும் 2 செமஸ்டர்களாக, மொத்தம் 8செமஸ்டர்கள் இருப்பதாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டருக்கும் 5 முதல் 6 பாடங்களை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வகையில் சில முக்கியமான பாடங்கள் இருக்கும். அதே நேரத்தில் தங்களுடைய தனிப்பட்ட ஆவல், திறமைகளுக்கேற்றவாறு (கலை, தொழிற்கல்வி மற்றும் உடற்கல்வி உட்பட) விருப்பப் பாடங்களைத்  தேர்ந்தெடுத்துக் கொள்வதில்  பெருமளவில்  நெகிழ்வுத்தன்மை  இருக்கும்” (பக்கம் 75-76) என்று இந்த வரைவறிக்கை பரிந்துரைக்கின்றது.

image.png

”மேனிலைப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவனும் கணிதம், அறிவியல் பாடங்களில் இரண்டு செமஸ்டர் தேர்வுகள், உலக வரலாறு, சமகால இந்தியா, நெறிமுறைகள் மற்றும் தத்துவம்,  பொருளாதாரம், வணிகம், டிஜிட்டல் கல்வியறிவு/ கணக்கீட்டு சிந்தனை, கலை, உடற்கல்வி, ஆகியவற்றில் தலா ஒரு செமஸ்டர் தேர்வு, தொழிற்கல்வி சார்ந்து இரண்டு செமஸ்டர் தேர்வுகள் எழுத வேண்டும் என்ற முன்மாதிரி பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர கூடுதலாக, ஒவ்வொரு மாணவரும் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மூன்று மொழிகளில் அவரிடமிருக்கின்ற அடிப்படைத் திறன்களை மதிப்பிடும் வகையில் மூன்று தேர்வுகளையும், இந்திய மொழி ஏதாவது ஒன்றில் இலக்கிய தரத்தில் குறைந்தபட்சம் ஒரு தேர்வையும் எழுத வேண்டும்” (பக்கம் 108) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செமஸ்டருக்கும் 5 முதல் 6 பாடங்கள் என்பதைக் கொண்டால், 8 செமஸ்டர்களில் ஒவ்வொரு மாணவரும் ஒட்டு மொத்தமாக 40 முதல் 48 பாடங்களைப் படித்து தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும். இவ்வளவு பாடங்களை நான்காண்டுகளுக்குள் படித்து தேர்ச்சி பெறுவது என்பது நடைமுறையில், இந்த வரைவறிக்கையின் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “மனப்பாடக் கல்விக்கு மாற்றாக முழுமையான வளர்ச்சி, 21ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான திறன்களில் முக்கியமானவையாக இருக்கின்ற  சிந்தனை, படைப்பாற்றல், அறிவியல் மனோபாவம், தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, பன்மொழிவாதம், சிக்கல்களைத் தீர்க்கும் நெறிமுறைகள், சமூகப் பொறுப்பு, மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற வகையில் 2022ஆம் ஆண்டிற்குள் கலைத்திட்டமும், கற்பித்தல் முறைகளும் மாற்றப்படும்” என்ற நோக்கங்களுக்கு முற்றிலும் மாறாக வெறுமனே அடிப்படை அறிவை அல்லது திறனை வழங்கக் கூடிய வகையிலான படிப்புகளை மட்டுமே மாணவர்கள் பெறும் வகையிலான மாற்றமாகவே இருக்கும்.  

கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்.

 

;