கட்டுரை

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019: தரம் பார்த்து வாங்குங்கள் – பொறுப்பு உங்களுடையது

29

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019

பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

 

தரம் பார்த்து வாங்குங்கள் – பொறுப்பு உங்களுடையது

image.png

அனைத்து தகவல்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்துதல் என்ற தலைப்பில் (பக்கம் 190), ”தங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள், கிடைக்கின்ற தகவல்களைக் கொண்டு பள்ளிகளைத் தேர்வு செய்ய முடியும். பெற்றோர்கள் இதைப் பெறும் வகையில் பள்ளியோடு தொடர்புடைய அனைத்து தகவல்களும் பொதுக்களத்தில் வெளியிடப்பட வேண்டும். பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குகின்ற நடைமுறைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகக் கிடைக்கும் தகவல்கள் தவிர, கட்டணம் பற்றிய விவரங்கள், வசதிகள், கற்றல் முடிவுகள், ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றோடு பள்ளியைத் தேர்ந்தெடுப்பது குறித்து முடிவெடுப்பதற்கு பெற்றோருக்குத் தேவைப்படும் பிற விஷயங்களும் இதில் அடங்கும்” என்று குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கல்விக் கொள்கை வரைவறிக்கை பரிந்துரைக்கிறது.

உலகமயமாக்கலுக்குப் பிறகு, சந்தையில் விற்பனைக்கு வரக்கூடிய அனைத்துப் பொருள்களுக்கும், நுகர்வோர்களுக்கு அளிக்கப்படக் கூடிய அனைத்து சேவைகளுக்கும் தரம் என்பது நிர்ணயிக்கப்படல் வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட தரம் உத்தரவாதப்படுத்தப்படுதல்வேண்டும், உத்தரவாதப்படுத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துகள் சந்தைப் பொருளாதாரத்தின் அடிநாதமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தாங்கள் பெறுகின்ற/வாங்குகின்ற பொருள் குறித்த அனைத்து ஞானமும் மிகத் தெளிவாக நுகர்வோரிடம் இருக்க வேண்டும், இது தொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டு எப்போதும் அவர்கள் விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டும், நுகர்வோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி நுகர்வோர் அமைப்புக்கள் உதவ வேண்டும், உற்பத்தியாளர் / விற்பனையாளர் மற்றும்நுகர்வோர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகள் நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று மிக வலுவாகப் பிரச்சாரங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு  வருகின்றன.

எடுத்துக்காட்டாக பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை எடுத்துக் கொண்டால், கல்வியை பொருளாக்கி, மாணவரை நுகர்வோக்கி வைத்திருக்கின்ற இந்த வித்தை நன்றாகப் புரிய வரும். பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தவுடனே பத்திரிகைகளில் வெளியாகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளில் அறிவுரைகள் பெருக்கெடுத்து ஓடத் துவங்கி விடும். மாணவர் சேர்க்கை குறித்து செய்தித்தாளில் வெளியான கட்டுரையொன்றில், “ஒரு கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு முன்பு அந்தக் கல்லூரி NAAC,NBA போன்ற தேசிய அங்கீகாரம் பெற்றதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கல்லூரிகளுக்குமான கட் ஆஃப் மதிப்பெண்களை பார்த்து விட்டு விருப்பப் பட்டியலை தயார் செய்ய வேண்டும். தேசிய தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே, கல்வி கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் மாணவர்கள் அந்த கல்லூரியை நேரடியாக ஒருமுறை நேரில் சென்று பார்த்து விடுவது சிறப்பானது. கவரும் வகையில் ஒரு கல்லூரியின் பெயர் இருக்கிறது என்பதற்காகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு ஊரில் இருக்கிறது என்பதற்காகவோ அந்த கல்லூரியில் சேர்ந்து விட்டால் பின்பு மாணவர்கள் கடுமையான நெருக்கடிகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். கல்லூரியில் படிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த மாணவர்களிடம் விவரங்களைக் கேட்டு அதனையும் சரிபார்த்து கல்லூரியை தேர்ந்தெடுப்பது நல்லது” என்று சுமார் 25க்கும் மேற்பட்ட வசதி வாய்ப்புகள் கல்லூரிகளில் உள்ளதா என்று நேரடியாகச் சென்றோ அல்லது விசாரித்தோ அறிந்து கொள்ள வேண்டும் என்று பொறுப்பு மாணவர் என்ற நுகர்வோரிடம் தள்ளி விடப்படுகிறது. இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றியே மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகமும்  அறிக்கைகளை பத்திரிக்கைகளின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் அளிப்பதன் மூலம், கல்லூரிகளின் தரத்தை சோதித்து அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பை  ”நுகர்வோரிடமே” தள்ளி விடுகிறது. கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி அவற்றின் தரத்தை உறுதிப்படுத்த  வேண்டிய  அதிகாரத்தை தன்வசம் வைத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் பெரும்பாலும் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறது.   இவ்வாறு நடத்தப்படும் மாணவர்சேர்க்கைகள் மிகத் தரம் வாய்ந்தவையாக, மானவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் துணை புரிபவையாக  இருப்பதான தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.  முதலாவது நாளில் கல்லூரிகளைத் தேர்வு செய்கிறவர்கள் பாக்கியசாலிகள். அதற்கடுத்து வரும் நாட்களில்மாணவர்கள்படும் பாடு யாரும் இதுவரையில் பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்ளாத அவலம். 

மாணவர் சேர்க்கை கலந்தாலோசனைக்கு மாணவர்கள் எப்படித் தயாராக வேண்டும்? என்று மற்றொரு பத்திரிக்கையில் வெளியான கட்டுரை இந்த நடைமுறையின் பின்னணியில் நடப்பதை மறைமுகமாக வெளிக்கொண்டு வருகிறது. அல்லது மறைமுகமாக மாணவர்களை அவ்வாறு இருக்கத் தூண்டுகிறது எனலாம். அந்தக் கட்டுரை என்ன சொல்கிறது? ”வெளியூரில் ஒரு வேலை. ரயிலில் பயணம் செய்ய வேண்டும். என்ன செய்வோம்? முதலில் எந்த ஊர் என்று தீர்மானிப்போம். பிறகு, எந்த ரயில், எந்தப் பெட்டியில் பயணம் செய்வது என்று ஆராய்வோம். நமது பொருளாதார பலம், கால அவகாசம், அவசரத் தேவை எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு ரயில் டிக்கெட் பதிவு செய்து, பயணம் மேற்கொள்வோம். கல்வியும் ஒரு பயணம்தான். வழக்கமான பயணத்தில் ஓர் ஊரைச் சென்றடைவோம். கல்விப் பயணத்தில் ஒரு படிப்பைப் பூர்த்தி செய்வோம். மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்படிப்புகளில் சேருவதற்கு மேல்நிலைப் படிப்பில் நல்ல மதிப்பெண்ணைப் பெறுவது முதல் படி”. இந்தக் கட்டுரை, “கையில் இருக்கும் காசுக்கேற்ற பயணம் என்று சொல்லி வசதி  உள்ளவனுக்கும், ஏழைக்கும் வெவ்வேறு கல்வி கிடைக்கும் என்பதை நேரடியாகச் சொல்கிறது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல நீ ஒருபோதும் ஆசைப்பட்டு விடக் கூடாது. உன் நிலைமைக்கு ஏற்றதுதான் உனக்கு கிடைக்கும். உனக்கு கிடைப்பதைத்தான் நீ தேர்வு செய்து கொள்ள வேண்டும். உனக்கு என்ன வேண்டும் என்று நீயே தேர்ந்தெடுத்ததைத்தான் நீ படிக்கப் போகிறாய். எனவே அதை நோக்கி உன்னுடைய பயணம் உன் வசதிக்கேற்றவாறு இருக்கட்டும்” என்கிறது.  நமது நிலைமைக்கு ஏற்றவாறு நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கல்வி, இதில் யாரையும் குறை சொல்ல ஒன்றுமில்லை என்பதான விஷக் கருத்துக்கள் மறைமுகமாகப் புகுத்தப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது வல்லுநர்கள் ஒன்றுகூடி தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி இந்த அராஜகத்தை பள்ளிக் கல்விக்கும் விரித்து வைக்கிறார்கள்.  அன்றாடம் காய்ச்சிகள் கல்வியை மறந்து விட வேண்டியதுதான் அவர்களுக்கு எழுதி வைத்திருக்கும் விதி போல!!!

 

 

30

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019

பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

 

மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி குறித்து மௌனம் காக்கும் வரைவறிக்கை

”ஐந்து வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளில் 75 சதவிகிதத்தினர் எந்தவொரு கல்வி நிலையத்திற்கும் செல்வதில்லை, ஐந்து முதல் பத்தொன்பது வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகளில் 25% பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை” என்று இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் கல்வி நிலைமை குறித்த 2019ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ அறிக்கை குறிப்பிடுகிறது. கல்வியில் அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும் போது குறைவாக இருக்கின்ற மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை இன்னும் கணிசமாகக் குறைந்து கொண்டே செல்கிறது என்று மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் குறிப்பிடுகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக தற்போது இருந்து வருகின்ற பாகுபாட்டைத் தொடர்ந்து நிலை நிறுத்த முயற்சிக்கிற இந்த புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை மிகவும் பிற்போக்குத்தனமாக, ஜனநாயக விரோதமாக இருப்பதுடன், நடைமுறையில் இருந்து வருகின்ற பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து விலகி நின்று மாற்றுத்திறன் குறித்து காண மறுப்பதுடன் உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையை மாற்றுத் திறனாளிகளுக்குத் தரத் தவறியும் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். 

'அணுகல்' என்பதை முக்கிய "வழிகாட்டும் கொள்கை"யாகக் கொண்டிருப்பதாக இந்த வரைவறிக்கை குறிப்பிட்டாலும், மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய விதத்தில் பரிந்துரைகள் எதுவும் தரப்படவில்லை. தங்களுடைய மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைக்கப் போகின்ற முக்கியமான ஆவணத்தின் மீது கருத்து சொல்லுகின்ற வாய்ப்பை பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு தருவதற்கு இந்த வரைவறிக்கை மறுத்திருக்கிறது. வெறுமனே இந்த வரைவறிக்கையின் பிடிஎஃப் பதிப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி அல்லது ஆடியோ பதிப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. அரசாங்க வட்டாரங்களுக்குள் செய்யப்பட்டு வருகின்ற ’அணுக ஏதுவான இந்தியா’ என்ற பிரச்சாரத்தின் தாக்கத்தை அளவிடுவதற்கான மானியாக அமைச்சகத்தின் இதுபோன்ற செயல்பாடுகளை நாம் கருதலாம்!

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முன்னாள் அமைச்சர் ஜவடேகர் தன்னுடைய தொடக்க செய்திக்குறிப்பில், முன்னெப்போதுமில்லாத வகையில் அனைவரையும் கலந்தாலோசித்து இந்த வரைவு தயாரிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் இந்த வரைவறிக்கையின் பின்னிணைப்பு அமைச்சரின் அந்தச் சொல்லாடலை முழுமையாக நிராகரிப்பதாகவே இருக்கிறது இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளிகளுக்கான எந்தவொரு அமைப்பின் பெயரையும் அது பட்டியலிடவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கன தேசிய அறக்கட்டளை ஆகியவை கூட அந்தப் பட்டியலில் இருந்து விடுபட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவது, கண்காணிப்பது, அவர்களுக்கான பாடத்திட்டங்களை தரப்படுத்துவது, புனர்வாழ்வு மற்றும் சிறப்புக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்களின் புனர்வாழ்வு குறித்த பதிவேட்டைப் பராமரிப்பது போன்ற செயல்பாடுகளைச் செய்ய வேண்டிய இந்திய மறுவாழ்வு குழு கூட அந்தப் பட்டியலுக்குள் இடம் பிடிக்க முடியவில்லை என்பது வருத்தமளிப்பதாகவே இருக்கிறது.  

image.png

 

”சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி என்ற தலைப்பில் (பக்கம் 154) ”மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படுவதைப் போன்ற கல்வியை சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளும் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2005 மற்றும் தேசிய அறக்கட்டளைச் சட்டத்தில் உள்ளதைப் போன்று 2012 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டத் திருத்தமும்   கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைச் சேர்த்துக் கொள்வதை ஏற்றுக் கொண்டு, சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. உண்மையில், பள்ளி கல்வியின் ஆரம்ப கட்டம் நிறைவடையும் வரை அல்லது 18 வயது வரை சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வியை கல்வி உரிமைச் சட்டம் உறுதி செய்கிறது” என்று இந்த வரைவறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இந்தியா ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் (யுஎன்சிஆர்பிடி) மரபு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் - 2016 ஆகியவை குறித்து இந்த வரைவு கருத்தில் கொள்ளவில்லை என்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் தொடர்பான விஷயங்களில் இந்த வரைவறிக்கை தயாரிப்புக் குழுவிடம் இருந்த குறைபாடுள்ள அணுகுமுறை அம்பலப்பட்டு நிற்கிறது. கல்வி குறித்து ஏராளமான பிரிவுகளைக் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் - 2016 நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், நடைமுறையில் இல்லாமல் போன மாற்றுத்திறனாளிகள் சட்டம் – 2005ஐப் பற்றி இந்த வரைவு பேசுவது விந்தையாக இருக்கிறது!

பொருளாதார ரீதியாக மோசமான பின்னணியில் இருந்து வந்து அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பான்மையான மாற்றுத் திறனாளிகளை மேலும் பின்தங்கிய நிலையிலேயே வணிகமயமாக்கலுக்கான உந்துதலைக் கொண்டிருக்கும் இந்த வரைவறிக்கை வைத்திருக்கப் போகிறது. பள்ளி வளாகங்களை உருவாக்கும் வகையில் பள்ளிகளை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது என்ற பரிந்துரை, பள்ளிகளை வெகுதொலைவில் வைத்து அந்த பள்ளி வளாகங்களை மாற்றுத் திறனாளி மாணவர்கள் அணுக முடியாதவாறு மாற்றி அவர்களை மிக மோசமாகப் பாதிப்பிற்குள்ளாக்கி விடும்.  

அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்ற போது, “சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகள்” என்ற மாற்றுத் திறனாளிகளால் நிராகரிக்கப்பட்டு விட்ட வார்த்தையை இந்த வரைவறிக்கை ஏறத்தாழ 25 இடங்களில் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறது. இந்த வார்த்தையை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் - 2016 பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  பல்வேறு காரணங்களுக்காக உயர்கல்வி என்பது மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து அணுக முடியாததாக இருந்து வரும் நிலைமையில், பள்ளிக் கல்வியைப் பற்றி மட்டுமே இந்த வரைவறிக்கை பேசுகிறது. உயர்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைப் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்து விடுகிறது,

image.png

2016ஆம் ஆண்டைய மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தில் கல்வி குறித்த ஏராளமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், இந்த வரைவறிக்கை கல்வி நிறுவனங்களை “அணுகல்” என்பதை வெறுமனே சாய்தளம், கைப்பிடிகள், கழிப்பறைகள் ஆகியவற்றை வழங்குவதாக மட்டுமே புரிந்து வைத்திருக்கிறது. உடல்ரீதியிலான இவ்வாறான அணுகல் விஷயத்தையே எடுத்துக் கொண்டாலும், 22.4 சதவிகித பள்ளிகள் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதி கொண்ட கழிப்பறைகளை கொண்டுள்ளன, சாய்தளங்கள் தேவைப்படும் பள்ளிகளில் 20 சதவிகித பள்ளிகளில் அவை இருக்கவில்லை என்பதாகவே அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

image.png

”சமூக சேவகர்கள் தங்கள் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை அடையாளம் காண்பது,  நிர்வகிப்பது, அவர்களது குடும்பங்கள், சமூகத்துடனுனான உறவுகளை நிர்வகிப்பது போன்ற பணிகளில் ஆசிரியர்களுக்கு உதவுவார்கள். பள்ளி வளாகம் இருக்கின்ற சமூகங்களில் உள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்தவும் அவர்கள் உதவுவார்கள்” என்று மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிவதோடு, அவர்களுடைய ஆசிரியர்களுக்கும் இந்த சமூக சேவகர்கள் உதவுவார்கள் என்று இந்த வரைவறிக்கை பரிந்துரைக்கின்றது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர் தகுதி இல்லாத “உள்ளூர் ஹீரோக்களை” பயன்படுத்துவது போன்ற சிக்கல்களுடன், “குறைதீர் போதனை உதவி திட்டம்” போன்ற சொற்களைப் பயன்படுத்துவது, தங்களுடன் படிக்கின்ற பிற மாணவர்களைப் போல கல்வி ரீதியாக நடந்து கொள்ள முடியாத மாணவர்களை ஒரு வகையில் இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. சமத்துவம், அனைவரையும் உள்ளடக்குதல் போன்ற கொள்கைகளுக்கு எதிரானதாக இருக்கின்ற இத்தகைய போதனாமுறைகள் மாற்றுத் திறனாளி மாணவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்கவே வழிவகுக்கும். சிறப்பு ஆசிரியர்கள் இல்லாத நிலைமையை. குறைந்தபட்சம் அந்த ஆசிரியர்களின் பற்றாக்குறையைக்கூட ஒப்புக் கொள்வதற்கு இந்த வரைவறிக்கை தவறி விட்டது.

மாற்றுத் திறனாளி குழந்தைகளே, பள்ளிகளில் இருந்து இடைவிலகுகின்ற குழந்தைகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தெரிவிக்கின்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் தரவுகள், 2014ஆம் ஆண்டில் இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 28.07 சதவீதமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், மாற்றுத் திறனாளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கான எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் இந்த வரைவறிக்கை முன்வைக்கவில்லை என்பதே உண்மை.

image.png

பிரிவு 3.12இல் பல்வேறு வகையான பள்ளிகளை அனுமதிப்பது மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளில் சேருவதில் உள்ள தடைகளைத் தளர்த்துவது என்ற தலைப்பில் (பக்கம் 71), அரசாங்கம் மற்றும் கொடையுள்ளம் கொண்ட அரசு சாரா நிறுவனங்கள் பள்ளிகளைத் துவக்குவதை எளிதாக்குவது, கலாச்சாரம், நிலம், மக்கள்தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு குருகுலங்கள், பாடசாலைகள், மதரசாக்கள், வீட்டுப் பள்ளி முறை போன்ற மாற்று கல்வி முறைகளை ஊக்குவிப்பது, கல்வி உரிமை சட்டத்தில் உள்ள பள்ளிகள் தொடர்பான விதிகளை அதிகம் கட்டுப்படுத்தாத வகையில் மாற்றுவது போன்ற பரிந்துரைகளை அளிக்கிறது.  ஆனால் மாற்றுத் திறனாளி மாணவர்களின் சேர்க்கை குறித்து மௌனம் சாதிக்கும் இந்த வரைவறிக்கை மறுபுறத்தில் விளிம்புநிலை பிரிவினருக்காக கல்வி உரிமைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 25 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கி விட முயற்சிக்கின்றது.

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் அத்தகைய பள்ளிகளின் பங்கு பற்றி முற்றிலும் மறந்து விட்டது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற இத்தகைய பள்ளிகளின் நிலை குறித்து எதுவும் குறிப்பிடப்படாமல் இருக்கிறது. கல்வி அமைச்சகத்தின் கீழ் அவை கொண்டுவரப்படுமா என்பது குறித்தும், அவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்தும் இந்த வரைவில் குறிப்பிடப்படவே இல்லை. மனநலச் சுகாதாரச் சட்டம் - 2017 என்ற சட்டம் இருப்பதையே இந்தக் கொள்கை வரைவறிக்கை ஏற்றுக் கொள்ளத் தவறியிருக்கிறது.  இந்தச் சட்டத்தின்படி, மருத்துவ உளவியலாளர்களின் தகுதி எம்ஃபில் பட்டம் என்பதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், இந்த வரைவறிக்கை எம்ஃபில் பாடத்தையே முற்றிலும் நிறுத்தி விடப் போவதாகப் பரிந்துரைத்திருக்கிறது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மாற்றுக் கல்வி முன்மாதிரிகளால் தரமான கல்வியை மாற்றுத் திறனாளி குழந்தைகள் இழக்க நேரிடும். அறிவியல்பூர்வமான மனநிலையை வளர்ப்பதற்கு மாறாக பிற்போக்குத்தனமான கருத்துக்களையும், மூடநம்பிக்கை நம்பிக்கைகளையும் ஊக்குவிப்பதாகவே இந்தப் பரிந்துரைகள் இருக்கின்றன. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த உத்திகளை செயல்படுத்துவது உட்பட தற்போது நடைமுறையில் இருக்கின்ற கொள்கைகள் குறித்த மறுஆய்வு எதுவும் வழங்கப்படவில்லை. புதிதான கொள்கையை கட்டாயம் உருவாக்கத் தேவையான காரணங்களும் இந்த வரைவறிக்கையில் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்படவில்லை. 

 

கட்டுரையாளர்

முனைவர் தா.சந்திரகுரு

;