என்ன சொல்லியிருக்காங்க

இந்நாள் இதற்கு முன்னால் பிப்.17

1972 - உலகின் மிக அதிகம் விற்பனையான காராக விளங்கிய, ஃபோர்ட் மாடல்-டி காரின் விற்பனையை, பீட்டில் கார் கடந்துவிட்டதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்தது. செல்வந்தர்களுக்கு மட்டுமானதாக இருந்த காரை, நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றியவர் ஹென்றி ஃபோர்ட்தான். 1908இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்-டி, வாங்கக்கூடிய விலை, அனைத்துப் பகுதிகளிலும் கிடைப்பதற்கான ஏற்பாடு ஆகியவற்றுடன், கோப்பு வரிசை(அசெம்ப்ளி லைன்) போன்றவற்றின்மூலம், உலகின் முதல் பெருவீத உற்பத்தி செய்யப்பட்ட காராகி, 1914இல் உலகில் விற்பனையாகியிருந்த கார்களில் 90 சதவீதமாக இருந்தது. 1927இல் மாடல்-டியின் 15 மில்லியனாவது காருடன்(ஒன்றரைக்கோடி), 1927இல் உற்பத்தியை நிறுத்துவதாக ஃபோர்ட் அறிவித்திருந்ததால், அதை பீட்டில் கடந்துவிட்டதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்தது. ஆனால், உண்மையில் மாடல்-டி 1.65 கோடி விற்பனையாகியிருந்தாகப் பின்னாளில் சுட்டிக்காட்டப்பட்டாலும், 1990களில் அதையும் கடந்த பீட்டில், 2003ல் உற்பத்தி நிறுத்தப்படும்போது 2.15 கோடியைக் கடந்திருந்தது. 1966இல் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரை உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் டொயோட்டோ கொரால்லா இவையனைத்தையும் கடந்து, தற்போது உலகின் மிக அதிகம் விற்பனையான காராகக் குறிப்பிடப்படுகிறது. கொரால்லா சுமார் 4.5 கோடி விற்பனையாகியிருந்தாலும்கூட, முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட காரில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘13 தலைமுறைகளாக’ அது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொரால்லா என்ற பெயரிலேயே 13 மாடல்களை விற்பனை செய்துள்ளது என்று கொள்ளலாம். 1920களில் ஒரு பூரித நிலையேற்பட்டபோது, மீண்டும் மீண்டும் கார் வாங்க வைப்பதற்காக, புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்தான் தொடங்கிவைத்தது. 1966இல் சோவியத் ஒன்றியத்தால் தொடங்கப்பட்ட ஆட்டோவாஸ் நிறுவனம், 1970-2012வரை தயாரித்த லடா கிளாசிக் என்ற கார்தான், பெரிய மாற்றங்களின்றி, மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்ட காராகும். தொகுத்துச் சொன்னால், அதிக விற்பனையான கார்களில், 1966இலிருந்து இன்றுவரை 4.5 கோடி கடந்துள்ள கோரால்லா முதலிடத்திலும், 1938-2003வரை 2.15 கோடி கடந்த பீட்டில் இரண்டாமிடத்திலும், 1970-2012வரை 1.77 கோடி விற்பனையான லடா கிளாசிக் மூன்றாமிடத்திலும், 1908-1927வரை உற்பத்தியாகி 1.65 கோடி விற்பனையாகி, அடுத்த 45 ஆண்டுகளுக்கு(1972வரை) அசைக்க முடியாத முதலிடத்தைக்கொண்டிருந்த ஃபோர்ட் மாடல்-டி நான்காமிடத்திலும் உள்ளன.

;