என்ன சொல்லியிருக்காங்க

img

அடி முதுகுவலி

மனிதன் தோன்றிய காலம் தொட்டுச் சிறுவர் முதல் பெரியவர் வரை எக்காலத்திலும் வரக்கூடிய ஒரு நோய் அடிமுதுகுவலி. பழங்கால ஓவியம், சிற்பகம் ஆகியவற்றிலும் கிறிஸ்தவ வேதத்திலும் இந்நோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அடி முதுகு வலி வராதவர்கள் யாராவது இருப்பார்களா? என்றால் சந்தேகம்தான். இவ்வலி வருவதற்கு ஆண், பெண், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமே கிடையாது.

இவ்வலி இடுப்பு, சுளுக்கு, வாய்வு, மூச்சுப்பிடிப்பு என்று பல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இவ்வலி முதலில் பொறுத்துக் கொள்ளும் அளவு இருந்தாலும் பிறகு அடிக்கடி தொந்தரவு கொடுப்பதாக மாறி, கடைசியில் பொறுக்க முடியாத வலியாகக் கூட ஆகிவிடும். மூட்டை போன்ற கனமான பொருளை திடீரென்று தூக்கும் பொழுதோ, அலமாரி போன்ற பொருளை தள்ளும் பொழுதோ, இவ்வலி வரும். ஏன்? தண்ணீர் குடத்தைத் தூக்கும் பொழுது கூட வரலாம். குழந்தை பிறக்கும் பொழுது இடுப்பில் வலி வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சில சமயம் பிள்ளை பிறந்த பிறகு இவ்வலியே ஒருதொடர்கதையாவதும் உண்டு. சிலருக்கு இருமிக் கொண்டிருக்கும் பொழுது கூட, திடீரென்று அடி முதுகு வலி வந்து இரண்டு மூன்று நாட்கள் படுக்கையில் படுக்க வைத்துவிடும். பின்பு வலி நிவாரணிகளை, நாடி ஓட வைத்து விடுகிறது. இந்நோய் சாதாரண வேலை செய்பவர்களிலிருந்து கடின வேலை செய்பவர் வரை வரலாம்.

மனிதனுக்கு வரும் நோய்கள், அதிக தொந்தரவு கொடுக்கும் பொழுதுதான் பெரும்பாலும் முக்கியத்துவம் பெறுகின்றன, இல்லையேல் அவை அசட்டை செய்யப்படுகின்றன. இதுபோலவே இந்நோயும் முதலில் வலி குறைவாக இருக்கும்பொழுது கவனிக்காமல் இருந்து வலி தொடரும்பொழுது அல்லது அதிகரிக்கும் பொழுதுதான், மருத்துவம் பெற நினைக்கிறோம். பெரும்பாலும் மூட்டை தூக்குபவர்கள், இரயில் பயர்மேன்கள் போன்ற கடின வேலை செய்பவர்களுக்குத்தான் இவ்வலி அதிகம் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் சுவீடனில் எடுத்த விஞ்ஞான் கணக்குப்படி சாதாரணமாக அல்லது கனமான வேலை செய்யும் எல்லாத் தொழிலாளிகளுக்கும், இந்நோய் ஏறத்தாழ ஒரே சதவிகிதத்தில் தான் வருகிறது எனத் தெரிய வந்துள்ளது. இவ்வலி ஒருமுறை வந்தால் மறுமுறையும் வர வாய்ப்பு உண்டு. இடுப்பு வலி உள்ளவர்களில் பாதிப்பேருக்கு மேல், கழுத்து வலியும் நடு முதுகு வலியும் சேர்ந்து வரும். அடி முதுகுவலி வரும் வகை மூன்று: (1) இடுப்பில் மட்டும் வரும் சாதாரண வலி (2) பொறுக்க முடியாத இடுப்பு வலி (3) இடுப்பு வலியுடன் தொடை கெண்டைக் கால் வரை பின்புறமோ அல்லது தொடையின் முன்புறமோ வரும் வலி.

இந்நோய் வரக்காரணம் என்ன? மனிதன் மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் நிமிர்ந்து நிற்கின்ற உடம்பைப் பெற்ற காரணத்தினால் பல நோய்கள் வருகின்றன. அதில் ஒரு வகைதான் இந்த அடி முதுகுவலி என்பது, மனித உடலமைப்பில் காலிலிருந்து இடுப்பு எலும்பு வரையுள்ள பகுதி அதற்கு மேலுள்ள உடலைத் தாங்கும் பீடமாக அமைந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வது அடி முதுகே ஆகும். முதுகின் நடுவில், எலும்புகள் வரிசையாகச் சங்கிலி போல் தசை நார்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த எலும்பு வரிசையில் ஓர் எலும்புக்கும் மற்றோர் எலும்புக்கும் நடுவில் புரதத்தால் ஆன ஒரு பொருள் உள்ளது. இந்தப் புரதமே முதுகு எலும்புகள், ஒன்றுக்கொன்று நசுங்காது பாதுகாக்கவும் முதுகு வளையவும் உதவுகிறது. மேலும் புரதப் பொருள் நடுவில் பஞ்சு போன்றும், அதைச் சுற்றிச் சற்று கடினமாகவும் இருக்கும். முதுகு எலும்புகளில் திடீரென்று அழுத்தம் அதிகம் ஆகும் பொழுது இந்தப் பஞ்சுப் போன்ற பாகம் முதுகு எலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தையோ அல்லது அதிலிருந்து பிரிந்து செல்லும் நரம்பையோ அழுத்துகிறது. இந்தப் பிதுங்கிய புரதப் பொருள் தண்டுவடத்தை நடுவில் அழுத்தினால் இடுப்பின் இரு புறமும் வலி வந்து இரண்டு காலிலும் பரவும். பக்கவாட்டில் ஒருபுறமும் வலி வந்து இரண்டு காலிலும் பரவும். பக்கவாட்டில் ஒருபுறமாக அமுக்கினால் அந்தப் பக்க இடுப்பும் காலும் வலிக்கும். சுமார் 80சதவிகிதம் நோயாளிகள் இவ்வலி வந்த நேரத்தையும் காரணத்தையும் சரியாகக் கூறுவார்கள். உதாரணமாக, காலையில் நெல் மூட்டையைத் திடீரென்று தூக்கினேன்: அப்பொழுதுதான் இடுப்பு பிடித்துக் கொண்டு வலி வந்தது என்பது போன்ற காரணத்துடன் வலி வந்த விதத்தை விளக்குவார்கள்.

இவர்கள் வலி வந்தவுடன், அப்படியே இடுப்பைப் பிடித்துக் கொண்டு, நகர முடியாமல் படுத்துவிடுவார்கள். மேலும் நடக்க ஆரம்பிக்கும்பொழுது சற்று சாய்ந்து குனிந்தபடி கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மெதுவாக நடப்பார்கள். இருமினாலும், தும்பினாலும், சிரித்தாலும் வலி அதிகமாகும். வலி உள்ள இடத்தில் உணர்ச்சிகள் வேறுபட்டு ஊசி குத்துவதைப்போல் இருக்கும். வலி கால்வரை பரவினால் தசைகள் கடுகடுக்கும். முதுகு எலும்பு அசைவைக் குறைப்பதற்காக அதன் பக்கத்தில் உள்ள தசைகள் விரைப்பாக இருக்கும். இதனால் முதுகில் நடுப்புறம் பள்ளமாக இருக்கும். வயிறும் புட்டமும் முன்னும் பின்னும் தள்ளியது போல் இருக்கும். இவர்கள் குனிந்து நிமிர முடியாது. படுத்திருந்தால் காலை மடக்கியே படுத்திருப்பார்கள். ஏனெனில் காலை நீட்ட வலி அதிகரிக்கும். இந்நோய் நாட்பட்டிருக்க, நோயினால் பாதிக்கப்பட்ட தசைகள் வலுவிழந்துவிடும். இவர்கள் தங்கள் வலியைக் குறைத்துக் கொள்ள ஒருக்களித்து உட்கார்ந்து கொள்வார்கள். இல்லையேல் இடுப்பை வளைத்துப் படுத்துக் கொள்வார்கள். புரதம் நசுக்கம் இன்றி, மற்ற எத்தனையோ காரணங்களாலும் அடி முதுகுவலி வரலாம். அவைகளாவன, சாதாரணமாக இடுப்பு முக்கோண எலும்புடன் வரிசையாக இருக்கும். இவை இயற்கைக்கு மாறாகப் பிறவியிலேயே சிறிது நகர்ந்திருந்தாலும், பக்கவாட்டு இடுப்பு எலும்புடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது அடி நடு முதுகு எலும்புடன் ஒட்டி இருந்தாலும், இதன் பக்கத்தில் செல்லும் நரம்புகளை இவ்வெலும்புகள் நசுக்குவதால் வலி வரும். இதைத் தவிர முதுகின் நடுவில் பலத்த அடிபடும்பொழுதோ அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே குதிக்கும்பொழுதோ, விலா எலும்புகளுடன் சேர்ந்து இருக்கும் முதுகு எலும்புகளுக்குக் கீழ் உள்ள முதுகு எலும்புகள், நசுங்கியோ அல்லது ஒடிந்தோ போனால் வலியைக் கொடுக்கும். மேலும் இவ்வலி முதுகு எலும்பு அழற்சி, காசநோய், கிரந்தி, காளான், எலும்பில் சீழ், காரணமாகவும் வரலாம்.

இவைகளையெல்லாம் விட, எலும்பு, தண்டுவடம் ஆகியவற்றில் கட்டியிருப்பினும், அல்லது மார்பு தைராய்டு, சிறுநீரகம், பிராஸ்டேட் போன்றவற்றில் புற்றுநோய் இருந்து, இரத்தம் மூலம் முதுகு எலும்பில் பரவி அவ்வெலும்பு நசுக்குவதாலும், ஒடிவதாலும் பொறுக்க முடியாத வலி ஏற்படும். இம்மாதிரி கொடிய நோய்களைத் தவிர சிறுநீரகக் கல், பெண்களுக்கு அடிவயிற்றில் இரத்த நாளங்கள் சுருண்டு புடைத்துக் கொள்ளுதல், மாதவிடாய்க் கோளாறு, பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் நோய் ஆகியவற்றினாலும் வலி வரலாம். ஆகவே இடுப்புவலி நாள்பட இருந்து குணமாகவில்லையென்றால், மேலும் வலி அதிகரித்துக் கொண்டே சென்றால் எலும்பில் புற்று அல்லது தொற்று நோய் உள்ளதா என்று அறிய வேண்டும். இதற்கு வலி உள்ள இடத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். எக்ஸ்ரே மூலம் எலும்பு நசுங்கியிருத்தால், ஒடிந்திருத்தல், புற்று முதலிய நோய்களைக் கண்டறியலாம். இதிலும் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் எம்.ஆர்.ஐ சோதனை மூலம் துல்லியமாக அறிய முடியும். இந்நோய்களில் நோயாளிக்கு பெருமளவில் துன்பத்தைக் கொடுக்கும் இடுப்புவலி, முதுகு புரதப்பிதுக்கு இடுப்பு வலியாகும்.

இவ்வலி வராமல் தடுப்பது எப்படி?

ஒவ்வொரு பள்ளி மாணவருக்கும் உடற்பயிற்சி அளிக்கும் பொழுது முதுகின் தசைகள் பலம் பெறப் பயிற்சி அளிப்பது அவசியம். கனமாக பொருள்களைத் தூக்கும் பொழுது முதுகை மட்டும் வளைக்காது முழங்காலையும் மடக்கித் தூக்கப் பயிற்சி அளித்தல் வேண்டும். இதைப் போல, தொழிற்சாலைகளில், தொழிலாளிகளுக்கு முன்னங்காலை மடித்து உட்கார்ந்து, சுமை தூக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் பொழுது முதுகை வளைத்து உட்கார்ந்து படிக்காமையும், கார் ஓட்டுகையில் முதுகு வளையாது இருக்கத் தக்க வண்ணம் இருக்கையை அமைத்தலும் இவ்வலியைத் தடுக்க உதவும் முறைகள் ஆகும். இதை முக்கியமாக கணினியை பயன்படுத்துபவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் வேலை செய்யும்பொழுது உட்காரக்கூடாது. உதாரணமாக சினிமாப் பார்க்கும்பொழுது, கார் ஓட்டும் அல்லது உட்கார்ந்து வேலை செய்யும் பொழுது, 1 மணி நேரத்திற்கு மேலாக கணினியில் உட்கார நேர்ந்தால், சிறிது நேரம் எழுந்து நடந்த பிறகு மறுபடியும் உட்கார்ந்து கொள்வது நல்லது. உட்காரும் இடத்தில் உள்ள குஷன், அமுக்கும் அளவு இல்லாது இருப்பது நல்லது. தூங்கும் பொழுது குப்புறப்படுத்துத் துங்கக் கூடாது. பக்கவாட்டில் முழங்காலை மடித்து ஒரு தலையணையுடன் உறங்குவது நல்லது.

வலி வந்தவர்கள் இவ்வலி மீண்டும் வராது இருக்க, முதலில் முதுகு தசைகளுக்கான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியின்பொழுது குப்புறப்படுத்துக் கொண்டு தலையைத் தூக்கிப் பறவை போல் கையைத் தூக்கி முழங்கையை மடித்து, பின்புறம் வைத்தபடி 10 வினாடிகள் இருக்க வேண்டும். பிறகு 5 வினாடிகள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 20 தடவைகள், காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உட்கார்ந்து கொண்டு குனிந்து காலைத் தொட்டுச் செய்யும் உடற்பயிற்சிகளை இவ்வலியால் வாடியவர்கள் செய்யக்கூடாது. தொந்தி உள்ளவர்கள் உடற்பயிற்சியுடன் தங்கள் உடல் எடையையும் குறைக்க வேண்டும். இவர்கள் குப்புறப்படுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வது கடினம். எனவே மல்லாக்கப் படுத்திருந்து காலை 45 முதல் 70 வரை உயரத் தூக்கி தாழ்த்த வேண்டும். இப்பயிற்சியைக் காலையிலும் மாலையிலும் செய்வது நல்லது.

இவ்வலி வந்த பின் மருத்துவமாக, வலி நிவாரணிகளைக் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு 2லிருந்து 4 வாரம் வரை பூரண ஓய்வு தேவை. இத்துடன் மின் ஒத்தடங்கள் வலியைக் குறைக்கலாம். நோய் குறையவில்லையென்றால், படுத்திருக்கும் கட்டிலின் கால்புறத்தைச் சற்று உயரமாக வைத்திருந்து தொடையிலிருந்து கால் வரை பிளாஸ்திரி ஒட்டி அதைக் கட்டிலில் கட்டி இருக்க, வலி குறையும், பிறகு, வலி குறைந்தவுடன் சில சமயம் இடுப்பில் பட்டையான பெல்ட் அணிந்து இடுப்பு அசைவைத் தடுக்க வேண்டும். இவைகளில் எல்லாம் குணமாகவில்லை, என்றால், அறுவைச் சிகிச்சை செய்து பிதுங்கிய புரதத்தை எடுத்து விடுவது சிறந்தது. அடி முதுகு வலி என்பது சாதாரணமானதுதான். ஆனால் இவ்வலியே தொடர்ந்து அதிகரித்ததால்,  தொற்றா அல்லது புற்றா  என்பதை அறிந்து தகுந்த மருத்துவம் செய்து கொள்வதுதான் அறிவுடைமை.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1

 

;