உலகம்

img

வெள்ளத்தின் பிடியில் வெள்ளை மாளிகை

 வாஷிங்டன், ஜூலை 9- அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் திங்களன்று கடும் புயல்மழை பொழிந்ததில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீரில் சிக்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவில் அடித்தளத்திலுள்ள ஊடக பணிமனையில் வெள்ளநீர் புகுந்துள்ளது. உள்ளே தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெள்ளத்தால் மின் இணைப்புகள் செயலிழந்து தேசிய ஆவணக்காப்பக கட்டிடமும், அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளன. தேசிய ஆவணக்காப்பக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர அறிவிக்கை, அரசியல் சாசனம், உரிமைகளுக்கான மசோதா உள்ளிட்ட மதிப்புமிக்க ஆவணங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவற்றுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் இரண்டு மணி நேரத்தில் மழையின் தாக்கத்தால் ஃப்ரெட்ரிக்கில் 6.3 அங்குலத்திற்கும், அர்லிங்க்டனில் 4.5 அங்குலத்திற்கும், வாஷிங்டன் விமான நிலையத்தில் 3.4 அங்குலத்திற்கும் மழை பொழிந்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எலிவேட்டர்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வாகன நிறுத்தங்கள் என பல்வேறு இடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கெனால் ரோடு பகுதியில் சாலையில் வெள்ள நீர் மிகுதியாக இருந்ததால் வாகனங்களுடன் வாகன ஓட்டிகளும் சாலையில் சிக்கிக்கொண்டனர். பாதுகாப்பு நிமித்தமாக சிலர் வாகனங்களின் மீது நிற்பது போலவும், தண்ணீரில் நீந்தி தப்பிப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கும்படி சக வாகன ஓட்டிகளுக்கு ட்விட்டரில் அறிவுறுத்தி வருகின்றனர் வாஷிங்டன் வாசிகள்.

;