உலகம்

சீனாவை புரட்டிய ‘லெகிமா’ புயல் 10 லட்சம் பேர் வெளியேற்றம்

பெய்ஜிங், ஆக.11 - சீனாவை ‘லெகிமா’ என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் அங்கு மையம் கொண்ட 9-வது புயல் இது. இந்தப் புயல் காரணமாக வெள்ளியன்று தொடங்கி ஷாங்காய் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில் கனமழை பெய்து வந்தது. ‘சூப்பர் புயல்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த புயல், சனிக்கிழமை அதிகாலை தைவான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள வென்லிங் என்ற இடத்தில் கரையை கடந்தது. அப்போது அங்கு மணிக்கு 187 கி.மீ. வேகத்தில் இடைவிடாத மழையுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது.  பலத்த காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புயல், மழை காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஷாங்காய் நகரில் இருந்து மட்டுமே 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை.  ‘லெகிமா’ புயல் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் 288 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. படகு, சாலை போக்குவரத்துகளும் முடங்கின. வென்ஜாவ் நகரில் நிலச்சரிவால் ஒரு அணை உடைந்தது. புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில்  மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. யாங்ஜியா நகரத்தைச் சுற்றிலும் சுமார் 120 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அன்குய், புஜியான், ஜியாங்சு நகரங்கள் புயலால் நிலை குலைந்துள்ளன.

;