உலகம்

img

ரஷ்யாவில் நடைபெற்ற  தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி

மாஸ்கோ, செப். 11-

சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநில  அளவிலான தேர்தல்களில் ரஷ்யன் சம்மேளன கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்திருக்கிறது.

செப்டம்பர் 8 அன்று ரஷ்யாவின் பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் ரஷ்யன் சம்மேளன கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Russian Federation), குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளைக் குவித்திருக்கிறது. விளாடிமீர் புடின் தலைவராக உள்ள ஐக்கிய ரஷ்யக் கட்சி (United Russia Party) பல மாநிலங்களில் முன்பிருந்ததைவிட வாக்கு சதவீதத்தைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு இழந்திருக்கிறது.

மாஸ்கோ நகர டூமாவிற்கான தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி தன் இடங்களை 5 இலிருந்து 13ஆக அதிகரித்துள்ள அதே சமயத்தில், ஐக்கிய ரஷ்ய கட்சியோ முன்பிருந்த இடங்களில் 13 இடங்களை இழந்து 25 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. முன்பு, ஆகஸ்ட் மாதத்தின்போது, மாஸ்கோ டூமாவிற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்தது தொடர்பாக தில்லுமுல்லுகள் நடந்ததாகக் கூறி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புடின் வாக்களித்த தொகுதியிலேயே கூட, கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நிகோலாய் குபென்கோ 58.29 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார்.

தேர்தல்கள் நடைபெற்ற பல மாநிலங்களில், முன்பு 2014இல் நடைபெற்ற தேர்தலின்போது பெற்ற வாக்குகளைவிட மேலும் அதிகமாக வாக்குகளைப் பெற்று கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார்கள்.

கிரிமியா, ரஷ்யாவுடன் இணைந்தபின் கிரிமியா (செவஸ்டோபோலில்) நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி, அங்குள்ள கவுன்சிலில் மூன்று இடங்களைப் பெற்றிருக்கிறது.

தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டபின்னர், ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், கென்னடி ஜூகனாவ் (Gennadi Zyuganov) பத்திரிகையாளர் மத்தியில் கூறியபோது, அனைத்து நாடாளுமன்றங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன் நிலையை உறுதிப்படுத்தி வலுப்படுத்தி இருப்பதாகக் கூறினார்.

(ந.நி.)

;