உலகம்

img

இந்நாள் செப்டம்பர் 11 இதற்கு முன்னால்

1792 -உலகப் புகழ்பெற்ற வைரங்களுள் ஒன்றான ‘ஹோப்’ வைரம், பிரெஞ்சுப் புரட்சியின்போது, பதினாறாம் லூயி அரசரும் குடும்பத்தினரும் டெம்பிள் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, அரச குடும்பத்தின் பொருட்களைப் பாதுகாக்கும் கிடங்கிலிருந்து திருடர்களால் திருடப்பட்டது. பொதுவாகவே, வைரம் எல்லாக் காலங்களிலும் மதிப்புமிக்க பொருளாகக் கருதப்பட்டுள்ளதுடன், 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்த, மாற்றியமைக்க முடியாதது என்ற பொருள்கொண்ட அடமாஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து டயமண்ட் என்ற ஆங்கிலச்சொல் உருவானது. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களிலேயே மிகவும் உறுதியானவையாகவும், மிகஅதிக வெப்பக்கடத்துதிறன் கொண்டவையாகவுமுள்ள வைரங்கள், வெட்டுதல், மெருகேற்றுதல் உள்ளிட்ட பணிகளுடன் தொழிற்துறை யில் முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கை வைரங்கள் 100இலிருந்து 350 கோடி ஆண்டுகளுக்குமுன், தரைக்கடியில் 150இலிருந்து 250 கி.மீ. ஆழத்தில் உருவாகியதாக கணிக்கப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்புகளின்மூலம் புவியின் மேற்பரப்பிற்குவந்து, தீப்பாறைகளில்(உறைந்த எரிமலைக் குழம்பு) படிந்த இவற்றை, சுமார் 3-6ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தனர். 1700களில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்படும்வரை, உலகில் வைரம் கிடைக்கும் ஒரே இடமாக இந்தியா விளங்கியது. 1860களில் தென்னாப்பிரிக்காவில் உருவான பெரிய சுரங்கங்கள், வெட்டுதல், மெருகேற்றுதல் ஆகியவற்றில் வந்த புதிய தொழில்நுட்பங்கள், பொருளாதார வளர்ச்சி, விளம்பரம்  ஆகியவற்றால் வைரம் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. அதற்குமுன்பு அரச குடும்பங்கள் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களின் சொத்தாக மட்டுமே இருந்த வைரங்கள், சாபம், திருட்டு என்று புகழ்பெற்றவையாகவே விளங்கின. ஹோப் வைரத்தின் மூல வைரம், (இராமாயண) சீதை சிலையிலிருந்து திருடப்பட்டதாகவும், அதனால் அது சபிக்கப்பட்டதென்றும் ஒரு கதை உண்டு! அந்த வைரத்தின் சாபத்தாலேயே, அரசர் பதினாறாம் லூயியும், அவரது மனைவி அரசி மேரி அண்டாய்னெட்டும் கில்லட்டினால் தலை துண்டிக்கப்பட்டதற்கு இந்த வைரத்தின் சாபமே காரணம் என்றெல்லாம் கூறப்பட்டாலும்கூட, மேரி அண்டாய்னெட் ஒருமுறைகூட அந்த வைரத்தை அணியவில்லை என்பதுதான் உண்மை. திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட இந்த வைரம், பல கைகள் மாறி, லண்டனில் தாமஸ் ஹோப் என்ற வணிகரிடமிருந்தபோது இதன் பெயர் ஹோப் ஆனது. தற்போது வாஷிங்டனிலுள்ள ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இது, சுமார் ரூ.2,000 கோடிக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது!

;