உலகம்

img

இந்நாள் பிப். 14 இதற்கு முன்னால்

1400 - பத்து வயதில் இங்கிலாந்தின் அரசராகி, 22 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எட்வர்ட், பட்டினியால் இறந்துபோனார். தந்தை இறந்ததால், தாத்தா மூன்றாம் எட்வர்டின் நேரடி வாரிசான நிலையில், அவருக்கு 10 வயதானபோது, தாத்தா இறந்துவிட, அரசரானார் ரிச்சர்ட். தொடக்கத்தில், அவரது உறவினர்களின் ஆதிக்கத்துடன்கூடிய குழுக்களே ஆட்சி நடத்தினாலும், விரைவிலேயே பொறுப்புகளை ஏற்ற ரிச்சர்ட், பிரபுக்களின் அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு, ‘அரச தனியுரிமை’ என்ற குழுவை ஏற்படுத்தி, ஆட்சியை நடத்தினார். 1381இல் விவசாயிகள் கலகம் ஏற்பட்டு, வன்முறைகள் நடந்தபோது, அவர்களை நேரடியாகச் சந்தித்த 14 வயது அரசர் ரிச்சர்ட், பண்ணையடிமைமுறை ஒழிப்பு உள்ளிட்ட அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றார்.

அதன்பின்னும், கலகக்காரர்கள் லண்டன் கோபுரத்திற்குள் நுழைந்து, உயராட்சித் தலைவர், கருவூலத் தலைவர் ஆகியோரைக் கொலைசெய்தபோது, கலகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த வாட் டைலரையே நேரடியாகச் சந்தித்தார் ரிச்சர்ட். அப்போது ஏற்பட்ட மோதலில் டைலர் கொல்லப்பட்டதும் வன்முறை பரவியதால், கலகத்தை ஒடுக்கினார். ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றது, முதலானவை, ஏற்கெனவே அதிகாரத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பிரபுக்களை அவருக்கு எதிராக்கின. கலைகளுக்கு முக்கியத்துவமளித்த ரிச்சர்ட், அவர் காலத்தில் எழுந்த பல பிரச்சனைகளை தீர்த்திருந்தாலும், பிரபுக்கள் ஒரு குழுவாக 1387இல் ஆட்சியைக் கைப்பற்றினர். 1389இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய ரிச்சர்ட், அடுத்த 8 ஆண்டுகளுக்கு, எதிர்த்தவர்களுடனும் சுமுகமான உறவுடன் ஆட்சி நடத்தினாலும், 1397இல் அவர்களுக்கு மரண தண்டனையளித்தும், நாடு கடத்தியும் உத்தரவிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகள் ரிச்சர்டின் கொடுங்கோண்மை என்று குறிப்பிடப்படுகின்றன. மூன்றாம் எட்வர்டின் மற்றொரு பேரனும், நாடுகடத்தப்பட்டிருந்தவருமான (பின்னாளைய நான்காம்) ஹென்றியை அழைத்துவந்த பிரபுக்கள், ஆட்சியைக் கைப்பற்றி அவரை அரசராக்கி, ரிச்சர்டை சிறையிலடைத்தனர். அச்சிறையில்தான், உணவளிக்காமல் ரிச்சர்ட் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடல், மார்ச் 6இல் ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் கிராமத்திலுள்ள அரண்மனையின் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ரிச்சர்ட் உயிருடன் இருப்பதாக உலவிய வதந்திகளுக்கு முடிவுகட்டவும், தன் தந்தைமீதான கொலைப் பழிக்குப் பரிகாரமாகவும், ஐந்தாம் ஹென்றி அரசர், 1413இல் ரிச்சர்டின் உடலைத் தோண்டியெடுத்து, வெஸ்ட்மின்ஸ்ட்டர் மடத்தில் ரிச்சர்ட் ஏற்கெனவே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார்.

- அறிவுக்கடல்

;