உலகம்

img

இந்நாள் நவம்பர் 09 இதற்கு முன்னால்

1906 - வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க குடியரசுத்தலைவரானார் தியோடார் ரூஸ்வெல்ட். அமெரிக்கா விடுதலைப்பெற்றதிலிருந்து 120 ஆண்டுகளுக்கு அதன் குடியரசுத்தலைவர் பதவியிலிருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளவில்லை. 18ஆவது குடியரசுத்தலைவராக(1869-77) இருந்த யுலிசிஸ் க்ராண்ட், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று சட்டமிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தார் என்றொரு செய்தி உண்டு. உண்மையில், அமெரிக்கவர்களைப் பொருத்தவரை, தங்களது குடியரசுத்தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை செய்யக்கூடாத செயலாகவே கருதினர்.

இங்கிலாந்தின் அதிகாரத்திலிருந்து விடுபடுவதற்காகவே அமெரிக்கா உருவானது என்பதால்தான், மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதிலும், நாணயம், வெளியுறவு, பாதுகாப்பு போன்றவற்றைத் தவிர, மற்றவற்றில் இறையாண்மைகொண்ட நாடுகளுக்கிணையான அளவுக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் உண்டு என்பதிலும்  இன்றுவரை அமெரிக்கர்கள் உறுதியாக உள்ளனர். வெளிநாட்டுப் பயணங்களில், பிற நாடுகளின் (குறிப்பாக இங்கிலாந்து) அரசர்-அரசிகளை சந்திக்க நேரும்போது, தங்களுக்கும் கூடுதல் அதிகாரம் வேண்டுமென்று அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களும் எண்ணிவிடக்கூடும் என்பதே தொடக்ககால அச்சமாக இருந்தது.

பிற்காலத்தில், மற்றொரு நாட்டின் அரச குடும்பத்தினருக்குத் தங்கள் குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்துவது என்பது, அமெரிக்காவுக்கு மரியாதைக் குறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது. உள்நாட்டில் பயணம் செய்யும்போது, அமெரிக்க மக்களைச் சந்திப்பது உள்ளிட்டவை குடியரசுத்தலைவரின் கடமைகள் என்றும், வெளிநாட்டுக்குச் செல்வது, கடமை தவறுவது என்றும்கூட எண்ணமிருந்தது. தியோடார் ரூஸ்வெல்ட்டின் இந்தப் பயணமும்கூட, அமெரிக்க அரசால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த பனாமா கால்வாய் தோண்டும் பணிகளை மேற்பார்வையிட என்ற வகையில் அவரது கடமையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்ககால வெளிநாட்டுப் பயணங்கள் நீராவிக் கப்பல்களில் மேற்கொள்ளப்பட்டதால், பயணத்தில் அதிக காலம் செலவிடப்பட்டதும், கடமை தவறுவதான பார்வைக்குக் காரணமாக இருந்தது.

இதனாலேயே, முதல் உலகப்போர்  முடிவில் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற உட்ரோ வில்சனின் இரண்டு மாத ஐரோப்பியப் பயணம் விமர்சனத்துக்குள்ளா கியது. பயணத்திற்கு 9 நாட்களான இதே ஐரோப்பியப் பயணத்திற்கு, நாற்பதாண்டுகள் கழித்து ட்வைட் ஐசனோவருக்கு விமானத்தில் 9 மணிநேரமே ஆனதும், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இரண்டாம்  உலகப்போருக்குப் பிந்தைய யால்ட்டா மாநாட்டில் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஸ்டாலினுடன் பேரம்பேச முடியாமல் விட்டுக்கொடுத்துவிட்டார் என்ற கருத்தால், உறவுமுறைப் பயணமாக இருக்கவேண்டுமே தவிர, விவாதிக்கும் பயணமாக இருக்கக்கூடாது என்ற நிலையும் நீண்டகாலம் பின்பற்றப்பட்டது. ஆனால், உலகத்தை வழிநடத்தவேண்டியது தாங்கள்தான் என்ற எண்ணம் ஏற்பட்டபின், அமெரிக்கக் குடியரசுத்தலைவர்கள் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார்கள்.

அறிவுக்கடல்

;