உலகம்

img

இந்நாள் நவம்பர் 08 இதற்கு முன்னால்

1973  பணயத் தொகை கேட்கும் குறிப்புடன், ஜான் மூன்றாம் பால் கெட்டியின் வலது காது, ஒரு செய்தித்தாள் அலு வலகத்துக்கு அஞ்ச லில் வந்தது. அப்போது 17 வயதான இவரின், தாத்தா ஜீன் பால் கெட்டி, அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் மிகப்பெரிய எண்ணெய் வணிகராக இருந்தவர். கெட்டி ஆயில் கம்பெனியைத் தொடங்கிய இவரை, 1957இல் ஃபார்ச்சூன் இதழ், அமெரிக்கர்களில் மிகப்பெரிய செல்வந்தர் என்றும், 1966இல் கின்னஸ் சாதனைப் புத்தகம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர் என்றும் அறிவித்திருந்தன.

அப்படியானவரின் பேரனுக்கு 16 வயதானபோது, இத்தாலியின் ரோம் நகரில் கடத்தப்பட்டார். கடத்தியவர்கள் கேட்ட 1.7 கோடி டாலர்கள் (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.700 கோடி!) பணயத்தொகையை, கடத்தப்பட்டவரின் தந்தையான ஜான் பால் கெட்டி ஜூனியர், தன் தந்தையான (தாத்தா)கெட்டியிடம் கேட்க, தனக்கு 14 பேரக்குழந்தைகள் இருப்பதாகவும், பணயத்தொகைக்காகப் பிற குழந்தைகளையும் கடத்தத் தொடங்கிவிடுவார்கள் என்றும் அவர் மறுத்துவிட்டார். தன்னைக் கடத்தியதாக நாடகமாடி, குடும்பத்தினரிடமிருந்து பணம் பெறலாம் என்று ஒருமுறை (பேரன்)கெட்டி கூறியதை, அவரின் பெண் நண்பர் தெரிவித்திருந்ததால், அவரே நாடகமாடுகிறாரோ என்றும் சந்தேகித்தனர். இந்நிலையில்தான் காது வந்ததுடன், ஒவ்வொரு உறுப்பாக அனுப்பப்படும் என்ற எச்சரிக்கையும் வர, தாத்தா பேரம்பேசி, பணயத்தொகையை 29 லட்சம் டாலர்களாகக் குறைத்தார்.

அதிலும், வரிவிலக்குப் பெறத் தகுதியான 22 லட்சம் டாலரை வழங்கிவிட்டு, மீதமுள்ள 7 லட்சம் டாலரை, 4 சதவீத வட்டிக்குக் கடனாக மகனிடம் அளித்தார். இங்கு கவனிக்கவேண்டிய செய்தி வரிவிலக்குதான்! இப்படியான பணயத்தொகையை, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஏற்படும் இழப்பிற்கு இணையாகக் கருதி, அத்தொகைக்கு வரிவிலக்குப் பெறமுடியும் என்று பல நாடுகளிலும் சட்டமிருக்கிறது. இந்தியாவிலும்கூட, 2012இல் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அப்படியான தீர்ப்பளித்துள்ளது! பணயத்தொகை கொடுக்கப்பட்டதற்கு, காவல்துறை ஆவணங்கள் போன்ற சான்று சமர்ப்பிக்கவேண்டும்! 1973 டிசம்பரில் (159 நாட்களுக்குப்பின்) விடுவிக்கப்பட்டபோது, வெட்டப்பட்ட காது வலிக்காமலிருக்க போதை மருந்துகள் தரப்பட்டதில், அவற்றுக்கு அடிமையாகியிருந்தார் கெட்டி. 1974இல் (17 வயதிலேயே) திருமணமும் செய்துகொண்டாலும், போதை மருந்துகளால் 1981இல் பக்கவாதம் ஏற்பட்டு, உடலின் பல பாகங்கள் செயல்படாத நிலையிலேயே வாழ்ந்து, 2011இல் 54 வயதில் இறந்து போனார்!

;