உலகம்

img

இந்நாள் நவம்பர் 07 இதற்கு முன்னால்

1492 - பிரான்சின் (அப்போது ஆஸ்திரியாவின்) என்சிஷெய்ம் என்ற இடத்தில் 127 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் விழுந்து, மூன்றடி விட்டமுடைய ஆழமான பள்ளமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வே தேதி பதிவு செய்யப்பட்ட முதல் விண்கல் வீழ்ச்சியாகும். விண்கல் என்பது புவிக்கு வெளியிலிருந்து புவியில் விழும் பொருட்களைக் குறிப்பதாகும். கற்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், உலோகங்கள் உள்ளிட்டவற்றின் கலவையாகவும் இவை உள்ளன.  உயரத்தில் என்ற பொருள்கொண்ட மீட்டடியராஸ் என்ற கிரேக்கச்சொல்லிலிருந்து உருவான மீட்டியராலஜி என்பது வளிமண்டல நிகழ்வுகளை(காலநிலை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், மீட்டியோர் என்பது புவிக்கு வெளியிலுள்ள பொருட்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் விண்கல் மீட்டியோரைட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

சிறுகோள்கள், வால்நட்சத்திரம் போன்றவற்றின் சிதறல்கள் ஏராளமாக விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை புவியீர்ப்புவிசையால் ஈர்க்கப்படுமளவுக்கு புவிக்கு நெருக்கமாக வரும்போது புவியில் விழுகின்றன. வளிமண்டலத்திற்குள் நுழைந்தவுடன் உராய்வால் இவை தீப்பற்றி எரிந்துகொண்டே விழுவதால் எரிநட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன. விழுபவற்றில் பெரும்பாலானவை, முழுமையாக எரிந்து காற்றில் கலந்துவிட்டாலும், பெரிய கற்கள் புவியில் விழுந்து பள்ளங்கள் மட்டுமின்றி, பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

210 கோடி ஆண்டுகளுக்குமுன் விழுந்த ஒரு மிகப்பெரிய விண்கல் ஏற்படுத்திய 600 கி.மீ. விட்டமுள்ள பள்ளம் கனடாவின் கியூபெக் பகுதியில் உள்ளது. மெக்சிகோ வளைகுடாவில் காணப்படும் 2,000 கி.மீ. விட்டமுள்ள பள்ளம் 30 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு விண்கல்லால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆதாரங்கள் இல்லை. இத்தகைய மிகப்பெரிய விண்கற்களின் வீழ்ச்சியினால், டைனோசர் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிந்த சில இன அழிவுகளும் நிகழ்ந்திருக்கின்றன.

விண்கல் விழும்போது பார்க்கப்பட்ட நிகழ்வுகள் விண்கல் வீழ்ச்சி என்றும், எப்போது விழுந்தது என்று தெரியாமல் புவியில் விண்கற்கள் கண்டுபிடிக்கப்படுவது விண்கல் காணல் என்றும் அழைக்கப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 1,180 விண்கல் வீழ்ச்சிகளும், 59,200 விண்கள் காணல்களும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விழுந்த இடத்தையொட்டி விண்கற்களுக்குப் பெயரிடுவது வழக்கமாக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள்(சிதறல்கள்) ஒரே இடத்தில் கிடைக்கும்போது, அவற்றின் பெயருடன் எண்களும் சேர்க்கப்படுகின்றன. அறிவியலாளர்கள், சேகரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மீட்டியோரிட்டிக்கல் சொசைட்டி என்ற அமைப்பு இந்தப் பெயரிடும் பணியைச் செய்கிறது.

- அறிவுக்கடல்

;