உலகம்

img

இந்நாள் நவம்பர் 06 இதற்கு முன்னால்

1947 தொலைக் காட்சி வரலாற்றில் மிக நீண்டகாலமாக(72 ஆண்டுகளாக) ஒளிபரப்பப் பட்டுக்கொண்டி ருக்கும் நிகழ்ச்சியான ‘மீட் த பிரஸ்’ முதன்முறையாக ஒளிபரப்பானது. தொலைக்காட்சி நிலையத்திற்கு முக்கிய மனிதர்களை அழைத்து நடத்தப்படும் ‘காஃபி வித்...’ போன்ற நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள், செய்தியறிக்கையின்போது முக்கியச் செய்திக்குத் தொடர்புடையவர்களை அழைத்து கருத்துக் கேட்பது உள்ளிட்ட இன்றைய பல நிகழ்ச்சிகளுக்கு இதுவே முன்னோடி என்று கூறமுடியும். என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இது உண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியாகும்.

(நேஷனல் பிராட்காஸ்ட்டிங் கம்பெனி என்னும் என்பிசி என்பது நமக்கு அறிமுகமான சிஎன்பிசி-யின் தாய் நிறுவனம்! சிஎன்பிசி என்பது கன்ஸ்யூமர் நியூஸ் அண்ட் பிசினஸ் சேனல் என்பதன் சுருக்கம்!) த அமெரிக்கன் மெர்க்குரி என்ற இதழை 1935இல் வாங்கிய லாரன்ஸ் ஸ்பைவேக் என்பவர், அதன் விற்பனையை மேம்படுத்துவதற்காக, ‘அமெரிக்கன் மெர்க்குரி பிரசண்ட்ஸ் மீட் த பிரஸ்’ என்ற நிகழ்ச்சியை, மிச்சுவல் பிராட்காஸ்ட்டிங் சிஸ்டம் என்ற வானொலியில் 1945இலிருந்து ஒலிபரப்பிவந்தார். அதனால் இந்நிகழ்ச்சியை உருவாக்கியவராக அவர் குறிப்பிடப்பட்டாலும், உண்மையில், அந்த வானொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மார்த்தா ரவுண்ட்ரீ என்ற பெண்மணியே இந்நிகழ்ச்சியை வடிவமைத்தார். வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தபோதே, 1947இல் இந்நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி உரிமையை ஜெனரல் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் வாங்கி, ‘மீட் த பிரஸ்’ என்று  பெயரைச் சுருக்கி, என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பத்தொடங்கியது.

அதைத்தொடர்ந்து, வானொலி நிலையம், தங்கள் நிகழ்ச்சிக்கு வேறு பெயர் சூட்டிக்கொண்டது. தொடக்கத்தில் 30 நிமிட பேட்டியாக இருந்த இந்நிகழ்ச்சிக்கு முதல் அழைப்பாளராக, முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும், குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டின் பரப்புரை மேலாளருமான ஜெம்ஸ் ஃபேர்லி அழைக்கப்பட்டார். அடிப்படையில், ஒருவரை மட்டும் பேட்டிகாணும் நிகழ்ச்சியான இதில், பின்னாளில் இருவர் அல்லது, பலரின் நேரடி விவாதங்களும் இடம்பெற்றன.

1980களில், பிற தொலைக்காட்சிகளின் இத்தகைய நிகழ்ச்சிகளின் (குறிப்பாக ஏபிசி தொலைக்காட்சியின் திஸ் வீக் வித் டேவிட் பிரிங்க்லி) போட்டியால் பாதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, அதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த  ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்திலிருந்து, காலை 9மணிக்கு மாற்றப் பட்டதுடன், 1992இல் 60 நிமிடங்களாவும் நீட்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் குடியரசுத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் அனைவரும் ஒருமுறையாவது இந்நிகழ்ச்சியில் தோன்றிவிடுவார்கள் எனுமளவுக்கு முக்கியத்துவத்துடன், இன்றுவரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

- அறிவுக்கடல்

;