உலகம்

img

இந்நாள் டிச. 03 இதற்கு முன்னால்

1967 - ஒரு மனிதரின் இதயத்தை மற்றொரு மனிதருக்குப் பொருத்திய உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை, தென்ஆப்ரிக்கா வின் கேப்டவுன் நகரிலுள்ள க்ரூட் ஷூர் மருத்துவமனை யில், கிறிஸ்ட்டியன் பர்னார்ட் என்ற மருத்துவர் செய்தார். மனித உடல் குறித்த முழுமையான அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே, உறுப்பு மாற்று சிகிச்சைகள் முயற்சிக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்பொருட்களை அனுமதிக்காத உடலின் நோயெதிர்ப்பு இயக்கம்பற்றி அறியாமல் செய்யப்பட்ட இச்சிகிச்சைகள் தோல்வியில் முடிந்தன.

இதயம்தான் மனம், துணிவு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது என்று நம்பிய காலத்தில், கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பியன் சியாவோ என்ற சீன மருத்துவர் பலவீனமான உடலும், மனோதிடமும்கொண்ட ஒருவர், இதற்கு எதிர்மறையாகக்கொண்ட ஒருவர் ஆகியோரின் இதயங்களை மாற்றி அறுவைசெய்து, உடல், மன வலிமைகளைச் சமன்செய்ய முயற்சித்ததாக ஒரு குறிப்பு உள்ளது! ஒரே மனிதரின் திசுக்களை மாற்றும் சிகிச்சையை, கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் ஒருவரின் மூக்கை மாற்றியமைக்க இந்திய மருத்துவர் சுஷ்ருதா செய்ததாகவும் குறிப்பு உள்ளது.

இத்தகைய சிகிச்சைகளின் வெற்றி குறித்து பதிவுகள் இல்லை. நவீன மருத்துவத்தின் தொடக்க காலங்களில் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, தோல்வியில் முடிந்துள்ளன. ஒருவரின் சொந்தத் தோலை வேறிடத்தில் பொருத்தும் சிகிச்சை 1869இல் வெற்றிகரமாகியது. கருவிழிப்படலம் மாற்று சிகிச்சை 1905இல் வெற்றிபெற்றது. மற்றொருவரின் தோலைப் பொருத்தும் சிகிச்சை 1908இல் வெற்றியடைந்தது. உள்ளுறுப்புகளை மாற்றும் சிகிச்சைகளில் வெளிப்பொருள் ஏற்காமை என்பது 1900களின் தொடக்கத் தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவரின் சிறுநீரகத்தைப் பொருத்தும் முதல் சிகிச்சை 1930இல் செய்யப்பட்டாலும், தோல்வியுற்றது.

1954இல் ஜோசப் முர்ரே செய்த சிறுநீரக மாற்று அறுவை, இரட்டையர்களிடையே என்பதால், ஏற்காமை எழவில்லை. ஏற்காமை என்பது நோயெதிர்ப்பியக்கத்தின் விளைவு என்பது 1940இலும், நோயெதிர்ப்புக்குறைப்பு மருந்துகள்மூலம் இதனைத் தவிர்க்கலாம் என்பது 1951இலும் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதற்கான மருந்து 1970ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ள முதல் இதயமாற்று சிகிச்சையிலும், 18 நாட்களில் நோயாளி இறந்துபோனார். நோயெதிர்ப்புக்குறைப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்த 1980களுக்குப்பின், உறுப்பு மாற்று சிகிச்சைகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டின.

;