உலகம்

img

இந்நாள் ஜுன் 17 இதற்கு முன்னால்

1987 - கடைசி ‘கரிய கடற்பகுதிக் குருவி’ இறந்தது. இதைத்தொடர்ந்து, அந்த இனம் அழிந்துவிட்டதாக டிசம்பர் 1990இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன உயிரினங்களில் மிகச்சிலவற்றுக்கே அழிவின் தேதி தெரியும். புவி உருவான காலத்திலிருந்து இன்றுவரை, இப்புவியில் தோன்றிய-வாழ்ந்த உயிரினங்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டன. பல்வேறு காலகட்டங்களிலும் புவியில் 500 கோடி வகையான உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன. ஒன்றிலிருந்து 1.4 கோடி வகையான உயிரினங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. அவற்றிலும் வெறும் 12 லட்சம் உயிரினங்களுக்குத்தான் ஆவணப்படுத்தப்பட்ட விபரங்கள் உள்ளன. அதாவது, 86 சதவீதத்துக்கும் அதிகமான உயிரினங்கள் பற்றிய விபரங்கள் மனிதர்களுக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் உண்மையில் தற்போது புவியிலுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம். ஒரு மனித உடலில் ஒரு கோடி கோடி(1,00,00,000,00,00,000) பாக்டீரியங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலத்திய கணித முறைகளைப் பயன்படுத்தி, நுண்ணுயிரிகள் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் கோடி உயிரினங்கள் தற்போது புவியில் வாழக்கூடும் என்று 2016இல் அறிவியலாளர்கள் அறிவித்தனர். அதனால், அழிந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் பின்னாளில் இன்னும் அதிகமாகக் கண்டுபிடிக்கப்படலாம். இன்றைக்கு 45 கோடி ஆண்டுகளுக்குமுன் முதலாவதும், 6 கோடி ஆண்டுகளுக்குமுன் ஐந்தாவதுமாக இதுவரை ஐந்து பெரும் இனஅழிவுகள் நிகழ்ந்துள்ளன. 20 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நான்காவதில்தான் டைனோசர்கள் அழிந்தன. ஏதாவதொரு பகுதியில் மொத்தமாக இனங்கள் அழிவது சிறிய அளவில் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தற்போது மனிதர்களால் ஆறாவது பெரும் இனஅழிவு நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தாவர, விலங்கு உயிரினங்களில் பாதியளவு 2100ஆம் ஆண்டில் அழிந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உயிரினங்களின் அழிவை ஆவணப்படுத்துதல் அருகாமை காலத்தில்தான் தொடங்கியது. ஓர் உயிரினத்தின் கடைசி விலங்கு (அல்லது தாவரம்) உயிரிழப்பதே அதன் அழிவாகப்பதிவு செய்யப்படுகிறது. உண்மையில், அதற்கு முன்பாகவே(இணை இல்லாமற்போதல் முதலான நிகழ்வுகளின்போதே) அவ்வினம் புவியில் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு முடிவுக்குவந்துவிடுகிறது.

;