உலகம்

img

இந்நாள் ஜுன் 12 இதற்கு முன்னால்

1967 - அமெரிக்க மாநிலங்களிலிருந்த இனக்கலப்புத் திருமணத் தடைச்சட்டங்கள் அனைத்தும் செல்லாதென அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரிச்சர்ட் லவிங் என்ற வெள்ளையரும், மில்ட்ரெட் என்ற கருப்பினப் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதற்காக, வர்ஜீனியா மாநிலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது மேல்முறையீட்டில்தான் அமெரிக்க உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பையளித்தது. குடியேறிகளின் நாடு என்பதால் ஏராளமான இனங்கள்(ரேஸ்), இனக்குழுக்கள்(எத்னிசிட்டி) கொண்டது அமெரிக்கா. வெள்ளையினத்தவரின் தனித்தன்மையைப் பாதுகாப்பதே இத்தடைச் சட்டங்களின் நோக்கமென்பதால், வெள்ளையர்-நிறம் கொண்டவர்(வேறினத்தவர்) திருமணங்களே தடைசெய்யப்பட்டன. உண்மையில், அரசுக்கெதிராக மக்கள் ஒன்றிணைந்துவிடாமலிருக்கவே இந்த இனப்பிரிவினை பாதுகாக்கப்பட்டது. முதல் இனக்கலப்புத் திருமணத் தடைச்சட்டம் வர்ஜீனியா குடியேற்றத்தில்தான் 1691இல் இயற்றப்பட்டது. அக்குடியேற்றத்தின் நிர்வாகத்திற்கெதிராக, பேகன் என்ற வெள்ளையர், வெள்ளையர்கள், (அடிமை முறைக்கு முன்பு)பிணைத் தொழிலாளர்களாக இருந்த கருப்பினத்தவர்கள், அமெரிக்கப் பூர்வகுடிகள் உள்ளிட்ட அனைவரையும் திரட்டி பேகன் கலகம் என்பதை நிகழ்த்தியதைத் தொடர்ந்தே அது இயற்றப்பட்டது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இருந்த இத்தடைச் சட்டங்கள், இரண்டாம் உலகப்போரில் இணைந்து பணியாற்றியபின் 1950களில் பரவலாக நீக்கப்பட்டன. நீக்கப்படாமலிருந்த மாநிலங்களின் தடைச்சட்டங்கள் இத்தீர்ப்பினால் செல்லாமற்போனாலும், சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படாத சட்டமாகத் தொடர்ந்தது. 2000இல் கடைசியாக நீக்கிய அலபாமாவுடன் இத்தடைச்சட்டங்கள் முழுமையாக முடிவுக்கு வந்தன. இத்தீர்ப்பு வெளியான ஜூன் 12, காதலிக்கும் நாளாக(லவிங் பெயரில்!) அமெரிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. அரசு ஏற்காவிட்டாலும், அமெரிக்காவில் எல்லா இனத்தவரும் கலந்து கொண்டாடும் மிகப்பெரிய விழா இதுதான்! பொதுவாக வெள்ளையர்கள் ஆக்கிரமித்த நாடுகளில்தான் இனக்கலப்புத் திருமணங்கள் ஏற்கப்படவில்லையென்றாலும், இந்தியாவில் நிலவிய தீண்டாமை உட்பட உலகின் பலநாடுகளிலும், இவ்வாறான திருமணத் தடைகள் இருந்துள்ளன. இன்றும்கூட, இஸ்ரேலில் திருமணம் என்பதே மதத்தலைமைக்குக் கட்டுப்பட்டது என்பதால் வேற்றினத்தவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது; சவூதிஅரேபிய ஆண்கள் வேற்றினப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அரசு அனுமதி பெறவேண்டும்; அந்நாட்டுப் பெண்கள் எந்தச்சூழ்நிலையிலும் வேற்றின ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது; எகிப்தியர்கள் இஸ்ரேலியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டால் குடியுரிமையை இழக்க நேரிடும் என்பன உள்ளிட்ட சட்டங்கள் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளன.

-அறிவுக்கடல்

;