உலகம்

img

இந்நாள் ஜுன் 11 இதற்கு முன்னால்

1955 - கார்ப்பந்தய வரலாற்றில் மிகமோசமான விபத்தாக இன்றுவரை குறிப்பிடப்படுகிற லே-மான்ஸ் விபத்து நிகழ்ந்தது. ஒரு போட்டியாளரும், 83 பார்வையாளர்களும் உயிரிழந்த இந்த விபத்தில், சுமார் 180 பேர் படுகாயமுற்றனர். லே-மான்சின் 24 மணிநேரம் என்பது உலகின் மிகமூத்த கார்ப்பந்தயங்களுள் ஒன்றாகும். இது 1923இலிருந்து இன்றுவரை நடைபெற்றுவருகிறது. மோட்டார் காரின் உருவாக்கத்துடனேயே கார்ப்பந்தயமும் உருவாகி, பிரெஞ்ச் மொழியில் பெரிய பரிசு என்று பொருள்படும் க்ராண்ட் பிரிக்ஸ் (பிரெஞ்ச் பிரிக்ஸ் - ஆங்கில பிரைஸ் - பரிசு) பந்தயமும் 1901இல் தொடங்கி, பந்தயக் கார்கள் என்ற தனிப்பிரிவும் உருவாகியது. இதைத் தொடர்ந்து, வழக்கமான மக்கள் பயன்படுத்தும் கார்களின் வேகம், நீடித்து உழைக்கும் திறன், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த, ஓட்டுநர், கார் ஆகியோரின் தாங்குதிறனுக்கான எண்ட்யூரன்ஸ் போட்டிகள் உருவாயின. இவை ஆயிரம் கி.மீ., ஆயிரம் மைல், 12 மணிநேரம், 24 மணிநேரம் என்ற அளவுகளில் நடத்தப்பட்டன. லே-மான்சின் 24 மணிநேரம் என்பது அப்படியான 24 மணிநேரப் பந்தயமாகும். முதல்நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கி, 3 ஓட்டுநர்கள் மாறிமாறி, எரிபொருள் நிரப்புதல், டயர் மாற்றுதல் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட சில பராமரிப்புகளை மட்டும் காருக்குச் செய்துகொண்டு மறுநாள் மாலை 4 மணிவரை ஓட்டவேண்டும்.  இப்போதிருக்கிற பாதுகாப்பு ஏற்பாடுகள் அக்காலத்தில் இல்லையென்பதுடன்,  விபத்துக்குள்ளானால் காருடன் ஓட்டுநர் எரிந்துபோகாமல் தூக்கிவீசப்படவேண்டும் என்பதற்காகவே சீட்பெல்ட்டும் இருக்காது. இப்போட்டியில் ஒரு ஓட்டுநர் பராமரிப்புக்காக ஒதுங்க முயற்சித்தபோது, அவரோடு மோதாமலிருக்க மற்றொரு கார் அடுத்த பாதைக்குள் நுழைய, அப்பாதையில் வந்த மெர்சிடஸ் மோதி, பறந்துசென்று பார்வையாளர் பகுதிக்கருகில் வெடித்துச் சிதறியது. தூக்கிவீசப்பட்ட அதன் ஓட்டுநர் தலைநசுங்கி இறக்க, வெடித்துச்சிதறிய காரின் பாகங்கள், பறந்துசென்ற பானெட், தீ ஆகியவற்றால் மற்றவர்கள் இறந்தனர். பின்னர் நடந்த வேறு இரு போட்டிகளில் வென்றாலும், 1987வரை கார்ப்பந்தயங்களிலிருந்து மெர்சிடஸ் விலகிக்கொண்டது. உடனடியாகப் பல நாடுகளிலும் கார்ப்பந்தயங்கள் தடைசெய்யப்பட்டு, பாதுகாப்பு அமைப்புகள், விதிகள் உருவாக்கத்திற்குப்பின் பின்னாளில் அனுமதிக்கப்பட்டன.

-அறிவுக்கடல்

;