உலகம்

img

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு


ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. இது கடந்த 1981-ம் ஆண்டு அனிமேஷன் மற்றும் காமிக் புத்தக தயாரிப்பு ஸ்டூடியோவாக நிறுவப்பட்டது.

இந்நிறுவனம் சிறப்பான அனிமேஷன் படங்கள் மற்றும் டி.வி. தொடர்களை உருவாக்கி, ஜப்பானின் புகழ்பெற்ற ஸ்டூடியோக்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 3 தளங்களுடன் மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்ட இந்த அனிமேஷன் ஸ்டூடியோ நேற்று காலை வழக்கம் போல்  இயங்கி கொண்டிருந்தது. 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் ஸ்டூடியோவில் திடீரென தீப்பிடித்தது.

மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் ஸ்டூடியோ முழுவதும் பரவியது. வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. ஸ்டூடியோவில் தீப்பிடித்ததும் அதில் இருந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். ஆனால் நாலாபுறமும் தீ சூழந்துகொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கியோட்டோ நகர தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  ஆனால் பலர் தீயில் சிக்கி  பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலத்த தீக்காயம் அடைந்ததுடன், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய 35 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

ஸ்டூடியோவில் எப்படி தீப்பிடித்தது என்பது உறுதி செய்யப்படாத நிலையில், அடையாளம் தெரியாத  நபர் ஒருவர் ஸ்டூடியோவினுள் சுற்றி பெட்ரோலை ஊற்றி தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இது தொடர்பாக தீயில் சிக்கி காயம் அடைந்த ஒரு நபரை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு உண்மை என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

விசாரணையில் இது விபத்து அல்ல திட்டமிட்டு செய்யப்பட்டது  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  என்பது தெரியவந்துள்ளது.  
கடந்த 2008-ம் ஆண்டு ஒசாகா நகரில் ஒரு கட்டிடத்துக்கு தீவைத்து 16 பேரை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

;