உலகம்

img

இந்நாள் செப்டம்பர் 12 இதற்கு முன்னால்

1857  எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா என்ற அமெரிக்கக் கப்பல்,  மத்திய அமெரிக்கப்பகுதியிலிருந்துகொண்டுவரப்பட்ட, 14 டன் தங்கத்துடன், சூறாவளியில் சிக்கி மூழ்கியது. 477 பயணிகளும், 101 பணியாளர்களுமிருந்த இந்தக் கப்பலிலிருந்து, உயிர்காக்கும் படகுகள்மூலம் தப்பித்த பெண்கள், குழந்தைகள், கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்ட சுமார் 150 பேர், ஒரு வாரம் கழித்து மீட்கப்பட்ட 3 பேர் என்று  மொத்தம் 153 பயணிகள் மட்டுமே உயிர்பிழைத்தனர். எஞ்சிய 425 பேரின் உயிரிழப்பு, அமெரிக்காவின் கடற்பயன வரலாற்றில் அதுவரை இல்லாத பேரழிவாகப் பார்க்கப்பட்டது. கப்பலிலிருந்த தங்கத்தின் அன்றைய மதிப்பு சுமார் 80 லட்சம் டாலர்கள். தற்போதைய மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள்! நெருக்கடியிலிருந்த அமெரிக்க வங்கிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட இந்தத் தங்கம் கைவிட்டுப்போனதால், அமெரிக்காவின் 1857இன் பொருளாதார நெருக்கடிக்கும் இது முக்கியக் காரணியாகியது. ஒகையோவின் கொலம்பஸ்-அமெரிக்கா டிஸ்கவரி க்ரூப் என்ற நிறுவனத்தால், பேயசியன் தேடுதல் முறையைப் பயன்படுத்தி, டாம்மி கிரிகோரி தாம்சன் என்பவர் தலைமையிலான அணியால், கடலுக்கடியில் கப்பலின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைவிலிருந்து இயக்கும் வாகனம்(ஆர்ஓவி) ஒன்றின்மூலம்,

1988இல் 15 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டது. 80 லட்சம் டாலருக்கு விலைபோன 36 கிலோ எடையுள்ள மிகப்பெரிய ஒற்றைத் தங்கக்கட்டியும் அதில் அடக்கம். ஆனால், மூழ்கிய தங்கத்திற்கு தாங்கள் இழப்பீடு வழங்கியிருப்பதால், கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தங்களுக்கே சொந்தம் என்று 39 காப்பீட்டு நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன! கைவிடப்பட்ட தங்கத்தையே தாங்கள் தேடி எடுத்துக்கொண்டதாக, கண்டுபிடித்தவர்கள் வாதாட, எட்டு ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப்பின், கண்டுபிடிக்கப்பட்டதில் 92 சதவீதம் கண்டுபிடித்தவர்களுக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது! ஆனால், தேடுதல் பணிக்காக தாம்சனுக்கு அளித்த ஒன்றேகால் கோடி டாலருக்கு உரிய பங்கை அவர் தரவில்லை என்று அவருக்கு நிதியுதவி அளித்தவர்கள் 2005இல் வழக்குத் தொடர, தாம்சன் தலைமறைவாகிவிட்டார்! 2015இல் கண்டுபிடிக்கப்பட்ட தாம்சன், 500 தங்க நாணயங்களைத் தருவதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு விட்டு, பின்னர் அவற்றைக் காண வில்லை என்று கூறிவிட்டார். அதைத்தொடர்ந்து, நிதியுதவி அளித்த நிறுவனங்களுக்கு கோடிக்கான டாலர்கள் இழப்பீடு வழங்குமாறு 2018இல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- அறிவுக்கடல்

;