உலகம்

img

இந்நாள் செப்டம்பர் 10 இதற்கு முன்னால்

1937 நில நடுக்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதி ராக, நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்பட்ட நியான்(ந்யான்) மாநாடு, ஸ்விட்சர்லாந்தின் நியான்
நகரில் தொடங்கி யது. கடற்கொள்ளை என்பது, மனிதன் கடலில் பயணிக்கத் தொடங்கிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆவணப்படுத்தப்பட்டுள்ள, உலகின் முதல் கடற்கொள்ளைகள் கி.மு.14ஆம் நூற்றாண்டிலேயே நடைபெற்றுள்ளன. இக்காலகட்டத்தில் ஏஜியன் கடல், நிலநடுக்கடல் ஆகிய பகுதி மக்களின் கலங்களை, கடல் மக்கள் என்று குறிப்பிடப்படுகிறவர்கள் கொள்ளையடித்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடற்கொள்ளையை (பிற கொள்ளைகளையும், தற்போது அறிவுசார் திருட்டு முதலானவற்றையும்) குறிக்கும் பைரசி என்ற ஆங்கிலச்சொல், 14ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவாகியுள்ளது. தாக்குபவர் என்ற பொருளுடைய பெய்ரேட்டஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான, கடலில் திருடுபவர் என்ற பொருளுடைய பைரேட்டா என்ற லத்தீன்  சொல்லிலிருந்து பைரேட், பைரசி ஆகிய ஆங்கிலச் சொற்கள் உருவாயின. மிக அதிகத் தொலைவு பயணித்தவர்களும், அதிகம் அறியப்பட்டவர்களும் ஸ்காண்டிநேவியாவைச்சேர்ந்த வைக்கிங் எனப்படுபவர்களே.

இவர்கள் கடல்கள், ஆறுகளில் மட்டுமின்றி, நீண்ட கடற்பயணங்களை மேற்கொண்டு பிறநாடுகளுக்குள்ளும் கொள்ளையடித்துள்ளனர். அட்லாண்ட்டிக், கரீபியன் கடல் பகுதிகளில் 16-19ஆம் நூற்றாண்டுகளில், பார்பாரி கடற்கொள்ளையர்கள் என்பவர்கள் வேறு எந்தக் கடற்கொள்ளையர்களையும்விட மிக அதிகக்கொள்ளைகளைச் செய்தனர். இவர்களை அடிப்படையாகக் கொண்டே ‘கரீபியக் கடற்கொள்ளையர்கள்’ திரைப்படங்கள், வீடியோ கேம்கள், புதினங்கள் முதலானவை உருவாக்கப்பட்டன. இவர்கள் 1530-1780 காலத்தில் சுமார் 12.5 லட்சம் கடற்பயணிகளைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்கினர். நெப்போலியப் போர்களுக்குப்பின் இவர்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்றும் (புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளும்) கடற்கொள்ளையர்களால் ஆண்டுதோறும் சுமார் ரூ.ஒரு லட்சம் கோடியளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் மேலே சொன்ன நியான் மாநாடு, உண்மையில் கடற்கொள்ளையர்களுக்கு எதிராகக் கூட்டப்படவில்லை. 1936இல் ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் அழிவுகளைக் குறைக்க, 24 நாடுகள் இணைந்து தலையிடாமைக்குழு என்ற பெயரில், போரிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்தின. (ஹிட்லர் தலைமையிலான) ஜெர்மனியின் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக்குழுவிலிருந்து (முசோலினி தலைமையிலான) இத்தாலி விலகிக்கொண்டாலும், அப்பகுதியில் நீர்மூழ்கிகளைக்கொண்டு கட்டுப்பாடற்ற தாக்குதல்களை(போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, அனைத்துவகைக் கப்பல்களையும் தாக்குவது) நடத்தியது. இதற்கெதிராகவே இம்மாநாடு கூட்டப்பட்டாலும், தாக்கியது இத்தாலி என்பதை நிரூபிக்க முடியாது என்பதால், கடற்கொள்ளைகளைத் தடுக்க ஒத்துழைப்பு என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

- அறிவுக்கடல்

;