உலகம்

img

இந்நாள் அக். 14 இதற்கு முன்னால்

1979 - சமூகத்தில் சமமான  உரிமைகள் கோரி,  ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓரினச்சேர்க்கை யாளர்கள், பாலின முரண்பாடு கொண்டவர்கள் உள்ளிட்டோரின் முதல் தேசியப் பேரணி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. இயற்கைக்கு அல்லது பொதுவாக ஏற்கப்பட்டுள்ள பாலுறவுக்கு முரண்பட்டவை, தற்காலத்திய பண்பாட்டுச் சீரழிவாக (கலி முற்றிவிட்டது!) பொதுவாகப் பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. கி.மு.9000களில் ஆண் தன்பாலினப் புணர்ச்சியைச் சித்தரிக்கும், கற்களில் செதுக்கப்பட்ட உருவங்கள் கிடைத்துள்ளன. கி.மு.7000களின் ஓவியங்கள், இருபால் பாலுறுப்புகளையும்கொண்ட மூன்றாம் பாலினத்தைச் சித்தரித்துள்ளன. கி.மு.2900களில் பெண் உடையுடன் புதைக்கப்பட்டுள்ள ஆண் பிணம், மாற்றுப்பாலின உணர்வுகள் அக்காலத்திலேயே இருந்ததை நிரூபிக்கிறது.

முதல் ஒரே பாலின (ஆண்) இணையர் கி.மு.2400இல் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஒரே கல்லறையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரலாறு முழுவதும் காணக் கிடைக்கும் இத்தகைய பாலின முரண்பாடுகள் பற்றிய செய்திகள், இவை இயல்பான மனித உணர்வுகள் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. மிருகங்களிடையேயும் காணப்படும் இத்தகைய தன்பாலின, இருபாலின உறவுகள், இவை தவறான ‘சிந்தனையால்’ ஏற்படுபவையல்ல என்பதை உணர்த்துகின்றன. மிருகத்தனம் என்று நாம் குறிப்பிடும் வன்புணர்வு என்பது விலங்குகளிடம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பொதுவாக ஏற்கப்பட்டுள்ளவற்றிற்கு மாறானவர்கள் என்பதாலேயே பல சமூகங்களும் இத்தகையோருக்கு மரணம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கியுள்ளன. சமூக சீர்திருத்தவாதியான ஜெரோமி பெந்தம், மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத இவ்வுறவுகளை எப்படிக் குற்றமென்று கூறலாம் என்று 1785இல் எழுதியதே இவர்களுக்கான முதல் ஆதரவுக்குரல் என்றாலும், அவர் அதை வெளியிடவே இல்லை!

பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, 1792இல் தன்பாலினச் சேர்க்கையை அங்கீகரித்து, சமவுரிமை வழங்கிய முதல் நாடாக பிரான்சு ஆனது. வளர்ந்த நாடுகள் பலவும் தற்போது அங்கீகரிக்கத் தொடங்கியிருந்தாலும், உலகின் பல பகுதிகளிலும், மனிதர்களாக ஏற்கக்கோரி போராடிக் கொண்டிருக்கிற இவர்களைக் குறிப்பிட எல்ஜிபிடி - லெஸ்பியன்(பெண் தன்பாலினச் சேர்க்கை), கே(ஆண் தன்பாலினச் சேர்க்கை), பைசெக்சுவல்(இருபாலரிடமும் உறவு), ட்ரான்ஸ்ஜெண்டர்(திருநங்கை, திருநம்பி) - என்ற பதம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. தன்பாலின உறவைப்போற்றி எழுதிய கிரேக்கப் பெண் கவிஞர் சாஃபோ பிறந்த லெஸ்போஸ் தீவின் பெயரிலிருந்தே லெஸ்பியன் என்ற சொல் உருவானது. பிற உறவுகளைக் குறிக்க வரலாறு முழுவதும் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், எல்ஜிபிடி என்ற பதம் 1980களில்தான் உருவானது. பெயர் என்னவானாலும், அவர்கள் மனிதர்கள் என்பதை ஏற்றால் மட்டுமே நாம் நாகரிகமடைந்த மனிதர்களாவோம்!

- அறிவுக்கடல்

;