உலகம்

img

6 மாத சிறை தண்டனைக்கு பயந்து உயிரை விட்ட பெண்

ஈரானில் பெண் ஒருவர், 6 மாத சிறை தண்டனைக்கு பயந்து நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

ஈரானில் விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க, அந்நாட்டு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு, கால்பந்து போட்டியை நேரில் காண தெஹ்ரானை சேர்ந்த 30 வயது பெண் சஹர் கொடயாரி என்பவர், ஆண் வேடமிட்டு அப்போட்டி நடைபெறும் மைதானத்துக்கு சென்றிருந்தார். அவரை பெண் என அடையாளம் கண்ட பாதுகாவலர்கள் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு சஹர் வந்திருந்தபோது, அங்கிருந்த சிலர்  காவலர்களை அவமதித்தது மற்றும் கற்புடைமையை காக்க தவறியதற்காக சஹருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும் என பேசிக்கொண்டனர். இதனை கேட்டு அச்சமடைந்த சஹர் அங்கேயே தீக்குளித்தார். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஹர் கடந்த திங்கள் அன்று உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து  விசாரணை நடத்த அந்நாட்டு பெண்கள் மற்றும் குடும்ப விவகார துறை துணை தலைவர் மசூமெஹ் எப்டெக்கர் உத்தரவிட்டுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும்படி ஈரான் அதிகாரிகளுக்கு  ஃபிஃபா  கால்பந்து கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

;