உலகம்

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஆகஸ்ட் 1

1965 - வெளியாகி 38 ஆண்டுகளுக்குப்பின், அதிக விற்பனையாகும் நூலாகச் சாதனைபடைத்த, 'ட்யூன்ஸ்'(மணற்குன்றுகள்) என்ற அறிவியல் புதினம் வெளியானது. இரண்டு கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, இதுவரை அதிகம் விற்பனையான அறிவியல் புதினங்களுள் ஒன்றாகப் பின்னாளில் மாறிய இதனை வெளியிட எந்தப் பதிப்பகமும் அப்போது தயாராக இல்லை! 23 பதிப்பகங்கள் நிராகரித்தபின், வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கான கையேடுகளை மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு நிறுவனம்தான், இதனை வெளியிட்டது. சில விருதுகளைப் பெற்றாலும், விற்பனையில் பெரிய வரவேற்பையெல்லாம் அப்போது பெறாத இது, ஃப்ராங்க்ளின் ஹெர்பர்ட் என்ற அமெரிக்க எழுத்தாளரால் எழுதப்பட்டது.

அமெரிக்காவின் ஆரகான் மாநிலக் கடற்கரைப் பகுதியில் காணப்படும் மணற்குன்றுகளை அடிப்படையாகக்கொணடே அவர் இதனை எழுதினார். கடல் மட்டத்திலிருந்து 500 அடிகள் உயரமுள்ள மணற்குன்றுகளைக்கொண்ட இப்பகுதி, உலகிலேயே மிகப்பெரிய கடற்கரை மணற்குன்றுப் பகுதிகளுள் ஒன்று. இவற்றிலிருந்து காற்றில் அடித்துச் செல்லப்படும் மணல், அருகாமை பகுதிகளில் சேதங்களை விளைவிப்பது வாடிக்கையாக இருந்ததால், ஃப்ளாரன்ஸ் கடற்கரையில், வழக்கத்தைவிட நீண்ட வேர்களைக்கொண்ட ஒரு புல் வகையை வளர்த்து, இந்த மணற்புயல்களைத் தடுக்க அமெரிக்க விவசாயத்துறை 1950களின் பிற்பகுதியில் முயற்சிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கடல் அலைகளைப்போன்று இவை சாலைகளையும், ஏரிகளையும் மூழ்கடிக்கலாம் என்று இவர் எழுதிய கட்டுரை 2005இல்தான் வெளியானது. ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 5 ஆண்டுகள் இவற்றைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட அவர், 1963இன் இறுதியில் அனலாக் என்ற இதழில் எழுதிய மூன்று பகுதிகளும், நீண்ட இடைவெளிக்குப்பின் 1965ன் தொடக்கத்தில் எழுதிய ஐந்து பகுதிகளும்தான் ட்யூன்ஸ் என்ற புதினமாக வெளியிடப்பட்டன.

எதிர்காலத் தொழில்நுட்பங்களைப் பற்றியதாக இன்றி, எதிர்காலச் சமூகத்தைப் பற்றியதாக எழுதப்பட்ட இந்த நூல், இத்தகைய 'சாஃப்ட் சைன்ஸ் ஃபிக்சன்' வகையில் முக்கிய மைல்கல்லாகக் கொண்டாடப்படுகிறது. பின்னாளில் வெளியான பெரும்பாலான அறிவியல் புதினங்கள், திரைப்படங்கள் முதலானவற்றில் இது தாக்கம் ஏற்படுத்தியது. இந்தப் புதினத்தில் இடம்பெற்றுள்ள கோள்களின் பெயர்கள், சனி கோளின் நிலவான டைட்டனின் பகுதிகள் உள்ளிட்ட பலவற்றுக்குச் சூட்டப்பட்டுள்ளன. பதிப்பகங்கள் நிராகரித்த இந்த முதல் வெளியீட்டுப் பிரதிகள் இன்று சேகரிப்பாளர்களால் பல்லாயிரம் டாலர்களுக்கு வாங்கப்படுகின்றன.

===அறிவுக்கடல்===

;