உலகம்

img

கோவிட் -19: நோய் முதலாளித்துவ மிருகத்தின் வயிற்றுக்குள் கோரப் பசி - பிரபீர் புர்கயஸ்தா

1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சலுக்குப் பிறகு வந்திருக்கும் மிக மோசமான தொற்றுநோய் கோவிட்-19 என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் 1890களில் தொடங்கிய மூன்றாவது பிளேக் தொற்றுநோய் தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்று விட்டு, ஸ்பானிஷ் காய்ச்சலுக்குப் பின்னரும் 1950கள் வரையில் தொடர்ந்தது என்பது அனைவருக்கும் மறந்து விட்டது. அந்த தொற்றுநோய் இந்தியாவில் மட்டும் 1 கோடிப் பேரைக் கொன்றது. அதைப் பற்றி எனது குடும்பத்தினர் பேசியது எனக்கு நினைவிலிருக்கிறது.  அதேபோல் நான் படித்திருந்த ஏராளமான கதைகளிலும், சமீபத்தில் வாசித்த பம்பாய் பிளேக் பற்றிய புத்தகத்தின்  பின்னணியாகவும் அந்த பிளேக் நோய் இருக்கிறது.

ஆக இன்றைக்கு தொற்றுநோய்களைப் பற்றி பேசுகின்ற போது, அந்த நோய் ஏன் இவ்வாறு மறக்கப்பட்டுள்ளது? இன்னும் இந்த உலகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பல நோய்களைப் பற்றி  இந்த உலகம் மறந்துவிட்டதாகத் தோன்றுவதற்கான காரணம், ’மறந்து போன மக்களின்’ ’மறக்கப்பட்ட நோய்கள்’ என்று மூலக்கூறு உயிரியலாளரான  பீட்டர் ஹோடெஸ்  தனது புத்தகத்தில் அழைத்த  நோய்களிடம் இருந்த காரணத்தைப் போன்றதாக இருக்கின்றதா? ’புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்’ என்று நடுநிலையாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் நோய்களுக்கும் இதுதான் காரணமா?

இதுபோன்ற நோய்களை யார் மறந்துவிட்டார்கள் என்ற கேள்வி இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.  நிச்சயமாக மக்கள் மறந்து விடவில்லை.  100 கோடிக்கும் அதிகமான மக்கள்,  தங்களுக்கு ஏற்படுகின்ற நோய்களின்  அச்சுறுத்தலின் கீழேயே எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஹோடெஸின் மறக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் காசநோய், மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகியவற்றைச் சேர்த்தால், அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள்,  உலக மக்கள் தொகையில் 65% ஆக இருப்பார்கள். தொற்று நோய்கள் குறித்து தங்களுக்கு இனிமேல் எந்தக் கவலையும் இல்லை என்று நம்பிய பணக்கார நாடுகள்தான் அவற்றை மறந்து விட்டன. அத்தகைய நோய்களை தங்கள் நாடுகளுக்கு வெளியிலேயே வைத்திருக்க முடியும் என்று நம்பிய அந்த பணக்காரர்கள் ’மறந்து விட்டார்கள்’. மூன்றாவது பிளேக் நோய் காலனிய நாடுகளில் மட்டுமே காணப்பட்டது.  உலகில் அழுக்கு, ஈக்கள் மற்றும் எலிகளால் நிரம்பிய பகுதிகளை மட்டுமே பாதிக்கின்ற அந்த நோய்களை நாம் வென்று விட்டோம் என்ற நம்பிக்கையில் காலனித்துவவாதிகள் நிம்மதியாகி விட்டிருந்தனர்.

நோய்கள் மீண்டும் தாக்கக்கூடும் என்பதை இப்போது வந்திருக்கின்ற கோவிட்-19 தொற்றுநோய் நிரூபித்துக் காட்டியுள்ளது. புதிய தொற்று நோய் தோன்றுவதற்குத் தேவையான மரபணுப் பிறழ்வு உருவாவதற்கான நேரத் தொலைவிலேயே நாம் எப்போதும் இருந்து வருகிறோம்.  

பணக்காரர்களைப் பொறுத்தவரை, இந்த தொற்று நோய்கள் இனி கவலை தருவதாக இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையின் விளைவுகளில் ஒன்றாக, இதுபோன்ற நோய்களுக்கான புதிய மருந்துகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி  நிதிகள் மிக அதிகமாகக் குறைக்கப்பட்டன. ஆண்டுதோறும், 15 லட்சம் மக்களைக் கொன்று 1 கோடிப் பேரை (உலக சுகாதார நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டு காசநோய் அறிக்கை) காசநோய் பாதித்து வருகிறது. இந்தியாவில் மட்டும், அது 5 லட்சம் இறப்புகளுக்கும், சுமார் 27 லட்சம் நோய்த்தொற்றுகளுக்கும் காரணமாக இருக்கிறது. ஆனாலும் நாற்பதாண்டுகளுக்குப் பிறகே, காசநோய் மருந்துகளுக்கான புதிய தொகுப்பு சந்தைக்குள் நுழைந்தது! ஆண்டுதோறும் 20 கோடிக்கும் அதிகமானவர்களைத் தொற்றுகின்ற மலேரியாவிற்கான கடைசி மூன்று புதிய மருந்துகளுக்கு இப்போது 50 வயதாகி விட்டது. இந்த மூன்று மருந்துகளில் இரண்டு மருந்துகள், வியட்நாமிய விடுதலைப் படைகளுக்கு எதிரான காலனித்துவப் போரில் சண்டையிட்ட வீரர்களுக்காக அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இரண்டு காரணங்களின் அடிப்படையில், தற்போதைய மருந்துகளை உருவாக்கும் மாதிரி தொற்று நோய்களுக்குப் பலனளிக்காது என்று மாநிலங்களவைத் தொலைக்காட்சியில் நடந்த கலந்துரையாடலின் போது என்னிடம் கூறினார். ஒன்று, ஒரு சில நாட்களுக்குள் நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற மருந்தைத் தயாரிப்பதற்கான ஆர்வம் மருந்து  நிறுவனங்களிடம் எப்போதும் இருப்பதில்லை. ஏனென்றால் அவ்வாறு நடக்கும் போது, அந்த நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் அதற்கு மேல் தேவைப்படாது. இரண்டாவதாக, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் விரும்புகின்ற விலையைச் செலுத்த முடியாத ஏழை நாடுகளிலேயே இந்த தொற்று நோய்கள் அதிகம் காணப்படுகின்றன.

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் என்று எதுவாக இருந்தாலும் - இவை இரண்டுமே பொது சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வாக இருப்பதால் – பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்  பெரிய  மருந்து நிறுவனங்கள் அவற்றின் மீது மிகக் குறைந்த ஆர்வத்தையே கொண்டுள்ளன. அதனால்தான் பணக்கார நாடுகள் தொற்று நோய்களை மறந்து விட்டன. பொதுவாக தொற்றுநோய் என்பது மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினை என்று மட்டுமே கருதப்படுகிறது. இத்தகைய மருந்துகளிலிருந்து எந்த லாபத்தையும் பெரிய மருந்து நிறுவனங்களால் பெற இயலாது. முதலாளித்துவ உலகில் இருக்கின்ற மற்ற முரண்பாடுகளையும் இந்த கோவிட்-19 தொற்றுநோய் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றது: உடல்நலக்குறைவே லாபங்களை வழங்குகிறது, உடல் நலத்துடன் இருப்பவர்கள் லாபத்தை ஒருபோதும் அவர்களுக்குத் தருவதில்லை. மக்கள் மாத்திரைகள் வாங்கும் போது, அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் போது மட்டுமே நோயிலிருந்து பணத்தைச் சம்பாதிக்க முடியும். தொற்று நோய்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை, பொது சுகாதாரம் முக்கியமானதாகக் கருதப்படும். அந்த அச்சுறுத்தலை ’மறந்து’ போனதால், பணக்கார நாடுகளில் பொது சுகாதாரமும் மறந்து போய் விட்டது. மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில், தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்த வரை லாபம், பொது மருத்துவமனைகளைப் பொறுத்தவரை அவற்றின் ’செயல்திறன்’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ  அளவுகோல்களே இந்த சுகாதார அமைப்பை  இயக்கி வருகின்றன.

செயல்திறனை அதிகரிப்பதற்கான முதலாளித்துவக் கொள்கை, படுக்கைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருக்கின்றது. சரக்கு இருப்பையும், அதன் மூலம் செலவைக் குறைக்கவும் மூலதனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ’சரியான நேரத்தில் உற்பத்தி’ என்பதன் திரிக்கப்பட்ட வடிவமாக அது இருக்கிறது. மூலதனத்தின் பார்வையில் படுக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைக் குறைப்பது என்பது, உற்பத்தியை  வீணாக்காமல் செய்தல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் செயல்பாடுகளாக இருக்கிறது.

ஃப்ளூ காய்ச்சல் பருவத்தில் ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உச்சத்தில் இருந்து வந்த நிலையில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியதால், தீவிரசிகிச்சைக்கான படுக்கைகள், உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பெரும் பற்றாக்குறையை அந்த நாடுகள் சந்திக்க நேர்ந்தது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் மருந்துகளுக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட சரிவு போன்ற மற்ற பிரச்சினைகளைப்  பற்றி நாம் பேசவில்லை.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சுகாதார அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவு பெரும்பாலான பார்வையாளர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஜனவரி இறுதிக்கு சற்று முன்பாக, தொற்றுநோயைக் கையாள மிகச்சிறந்த தயார்நிலையில் இருந்த நாடுகளை ஃபோர்ப்ஸ் பத்திரிகை தரவரிசைப்படுத்தியது. அந்த தரவரிசையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை முதலிடத்தில் இருந்த இரண்டு நாடுகளாகும். இன்று, உலகிலேயே அதிக தொற்று மற்றும் இறப்புகள் அமெரிக்காவில் நடந்துள்ளன. அதே நேரத்தில் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஃபோர்ப்ஸ் பட்டியலில் சிறந்த முறையில் தயாராக இருந்த  அனைத்து நாடுகளே -  அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் - இன்று மிக மோசமான எண்ணிக்கையில் நோயாளிகளைக் கொண்டுள்ளன!

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை ஏன் இந்த தொற்றுநோய் கடுமையாகத் தாக்கியுள்ளது என்பதில், ஒரு பிரச்சினை மட்டும் மிகத் தெளிவாக உள்ளது: ஒருவேளை மிகச்சாதாரண சுகாதாரப் பிரச்சினைகள், ஆண்டுதோறும் வருகின்ற ஃப்ளூ காய்ச்சல் நோயாளிகளைக் கையாளத் தயாராக இந்த நாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அந்த நாடுகள் இதுபோன்ற புதிய தொற்று நோய்க்கு எதிரான தயாரிப்பு வேலைகளுக்கு, எந்த விதத்திலும் தயாராக இருந்திருக்கவில்லை . 2003ஆம் ஆண்டில் சார்ஸ் (இப்போது சார்ஸ்-கோவி-1), பறவை காய்ச்சலின் ஆபத்தான H5N1 பதிப்பு தந்த அனுபவங்களிலிருந்து, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முகக்கவசத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டன. முன்னேறிய நாடுகளுக்கு அத்தகைய அனுபவங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. குறைந்த வசதி படைத்த நாடுகளில், பிளேக், காலரா, பெரியம்மை, போலியோ போன்ற தொற்று நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் போது தேவைப்படுகின்ற பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த கூட்டு நினைவாற்றல் இருந்தது. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சில கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அமைப்புகள், பலவீனமாக இருந்தன என்றாலும், அவை அங்கே இருந்தன.

அமெரிக்காவில், புதிய தொற்று நோய் குறித்த அச்சுறுத்தல் மக்களின் கூட்டு ஆன்மாவின் ஒரு பகுதியாகக் கூட இருக்கவில்லை. அதனால்தான், ஊரடங்கு தவிர்க்க முடியாதது என்ற நிலையில், மருந்துகள் மற்றும் உணவைப் போலவே, துப்பாக்கிகளுக்கும், வெடிபொருட்களுக்கும் அதிகமான தேவை அங்கே ஏற்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை, அச்சுறுத்தல் என்பது மிகத்தெளிவாக மற்றவர்களிடமிருந்து வருவதாக இருந்ததே தவிர, வைரஸ் அல்லது கிருமிகளால் வருவதாக இருக்கவில்லை.

மூலதனத்துக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, லாபத்திற்கான பேராசைக்கும் (மற்றும் லாபம் ஈட்டுதல்) மருந்து பற்றாக்குறையால் இறக்கும் மக்களுக்கும் இடையே இருந்த முரண்பாடு குறித்து அமித் சென்குப்தா நியூஸ் கிளிக் மற்றும் பிற இடங்களில் விரிவாக எழுதியிருந்தார். ’சுகாதார சேவைகளை வழங்குபவர்களின் நெறிமுறையற்ற நடத்தை லாபத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், அவர்களைப் பொறுத்தவரை, அதிக லாபம் என்பது அதிகமான உடல்நலக்குறைவுடனேயே நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது!… ஏழைகள் மற்றும் மிகவும் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் தேவைகளை சுகாதார அமைப்புகள் கருத்தில் கொள்வதை அரசாங்கங்கள்தான் உறுதி செய்ய முடியுமே தவிர, சந்தைகள் அல்ல’ என்று அவர் எழுதினார்.

முன்னேறிய நாடுகளில் கோவிட்-19 ஏற்படுத்திய இறப்புகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த சமூகங்கள், ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக விலக்கப்பட்டவர்களிடையே குவிந்திருப்பது தற்செயலானது அல்ல. அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க மற்றும் ஹிஸ்பானிக் மக்களிடம்தான் அதிக எண்ணிக்கையில் இறப்புகள் மற்றும் தொற்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் குடியேறியவர்கள் பகுதிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான இறப்பு மற்றும் தொற்று காணப்படுகின்றன. ஆனால் நோய்கள் சமநிலை கொண்டவை. அவை ஏழைகள் மற்றும் விலக்கப்பட்டவர்களை அதிகம் பாதித்தாலும், பணக்காரர்களையும் விடுவதில்லை. தொற்றுகள் நிரம்பிய கடந்த காலத்தை தாங்கள் முற்றிலும் கடந்து விட்டதாக நினைத்த பணக்கார நாடுகள், உலகமயமாக்கப்பட்ட உலகில் தாங்களும் தப்பிக்க முடியாது என்பதை இந்த நேரத்தில் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.

2018ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற மக்கள் சுகாதார சபையில், அமித் சென்குப்தா எழுப்பிய கேள்வி இதுதான். மூலதனத்தின் பசி மிருகத்தின் வயிற்றில் நுழையும் போது என்ன நடக்கும்?  தொற்றுநோயை எதிர்கொள்ள சிறந்த முறையில் தயாராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் நினைத்த அந்த நாடுகளுக்குள் அந்த பசி  நுழையும்போது என்ன நடக்கும் ?

இந்த புதிய வைரஸ் – சார்ஸ்-கோவி-2 - மனிதகுலம் எதிர்கொள்கின்ற இருத்தலியல் சவால்களின் பட்டியலுக்குள் நோயின் பழைய சவாலைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. நுண்ணுயிரிகளுக்கும் நமக்கும் இடையிலான போட்டி தொடர்ச்சியான போர் என்பதை நாம் அறிவோம். நமக்கான பாதுகாப்பை நாம் உருவாக்கும்போது, தங்கள் தாக்கும் தன்மையை நுண்ணுயிரிகள் வளர்த்துக் கொள்கின்றன. உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையை பாழ்படுத்துவதால், நம்மை இன்னலுக்குள்ளாக்குகின்ற பருவநிலை மாற்றம் ஏற்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். இடதுசாரிகளைத் தவிர, இந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகின்ற மனிதகுலத்திற்கான பாதையைப் பட்டியலிடுவதற்கு முதலாளித்துவர்களும், அவர்களுடைய பேராசையுமே மிகப்பெரிய தடையாக இருக்கின்றன  என்பது வேறு யாராலும் பரவலாகப் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது.

தொற்றுநோய்கள் மரணத்தையும், அழிவையும் பரப்பியது மட்டுமல்லாமல், அடிப்படை வழிகளில் சமூகங்களையும் மாற்றி விட்டன. திரள் நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றுகள் மூலமாக, கோவிட்-19 தொற்றுநோய் முடிந்த பிறகு, இந்த உலகம் இப்போதிருந்ததைப் போன்று நிச்சயமாக இருக்காது என்றாலும், மக்களின் வாழ்க்கைக்கு எதிரான மூலதனத்தின் பேராசையை எதிர்கொள்ளும் வகையில் சமூகத்தை அது வழிநடத்துமா? இது நம் அனைவருக்கும் முன்னால் உள்ள சவால்;
இப்படித்தான் வரலாறு நம்மைப் பற்றி எடை போடுகிறது. 

https://peoplesdispatch.org/2020/05/10/disease-capitalism-and-covid-19-hunger-in-the-belly-of-the-beast/

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

;