உலகம்

img

இந்நாள் ஆகஸ்ட் 14 இதற்கு முன்னால்

1893 - மோட்டார் வாகனங்களுக்கான பதிவெண் பலகை(நம்பர் ப்ளேட்) உலகிலேயே முதன்முறையாக பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாளில் இயற்றப்பட்ட பாரீஸ் காவல்துறை அவசரச்சட்டம், ‘உரிமையாளரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாக எழுதப்பட்ட ஓர் உலோகப் பலகை ஒவ்வொரு மோட்டார் வாகனத்திலும் இடதுபுறத்தில் பொருத்தப்படவேண்டும். வாகனத்திற்கான அனுமதிக்குரிய விண்ணப்பித்ததில் குறிப்பிடப்பட்ட எண்ணும் எழுதப்படவேண்டும். இப்பலகையை எச்சூழலிலும் மறைக்கக் கூடாது’ என்று அறிவித்தது. நாடு முழுமைக்கான பதிவெண் பலகையை முதலில் அறிமுகப்படுத்தியதுடன், வாகனத்திற்கான உரிமம் என்பதையும் முதலில் அறிமுகப்படுத்திய நாடு நெதர்லாந்து. 1898இல் அங்கு இம்முறை தொடங்கியபோது 1இலிருந்து வரிசையாக எண்கள் அளிக்கப்பட்டாலும், 1906இல் அது மாற்றியமைக்கப்பட்டது.

அமெரிக்காவில் நியூயார்க் மாநிலம்தான் முதன்முதலில் பதிவெண் பலகையை அறிமுகப்படுத்தியது. அங்கு, 1901இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வாகன உரிமையாளர் பெயரின் முதலெழுத்துகள் பலகையில் எழுதப்படவேண்டும் என்றிருந்து, 1903இல் வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துகளில் பதிவெண் எழுதப்படவேண்டும் என்று மாற்றப்பட்டது. தொடக்கத்தில் எண்கள் மட்டுமாக இருந்த பதிவெண் பின்னாளில் எண்கள், எழுத்துகள் ஆகியவை கொண்டதாக மாற்றப்பட்டது. ஓ, 0 ஆகியவையும், எல், 1 ஆகியவையும் வேறுபடுத்தச் சிரமமாக இருப்பதால் ஓ, எல் ஆகியவை பல நாடுகளில் தவிர்க்கப்படுகின்றன.

1960இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு மேற்கொண்டு, 4 எழுத்துகள், 3 இலக்கங்கள் கொண்டு, ‘ஓ’வைத் தவிர்த்துவிட்டு, 13.67 கோடி மாறுபட்ட பதிவெண்களை உருவாக்கலாம் என்று அறிவித்தது. வாகன உரிமையாளர்கள் பதிவெண் பலகையை உருவாக்கிக்கொள்ளும் நடைமுறை மாறி, பல நாடுகளிலும் அரசே அதை வழங்கிவிடும் முறை ஏற்பட்டது. மாறுபட்ட அளவுள்ள பலகைகள் பயன்படுத்தப்பட்டதால், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது, வாகனத்தில் புதிதாகத் துளையிட்டு பலகையைப் பொருத்த வேண்டியிருந்தது. 1957இல் இது சீர்தரப்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் பொதுவாக 3 அளவுகளில் பதிவெண் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் மாறுபட்ட அளவிலான பலகைகளும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளன. சில நாடுகளில் வாகனத்தின் முன்புறம் பதிவெண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை. தொடக்கத்தில் தோல், அட்டை, பீங்கான் உள்ளிட்ட பொருட்களில் பதிவெண் பலகைகள் உருவாக்கப்பட்டு, பின்னாளில் உலோகத்துக்கு மாறி, தற்போது, வாகனத்தைப்பற்றிய தகவல்களையும், இருக்குமிடத்தையும் தெரிவிக்கும் மின்னணு பதிவெண் பலகைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

;