உலகம்

img

இந்நாள் ஆகஸ்ட் 13 இதற்கு முன்னால்

1918 - பிஎம்டபிள்யூ நிறுவனம், பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாகப் பதிவுசெய்து தொடங்கப்பட்டது. விமானங்களைத் தயாரிக்க 1910இல் கஸ்டவ் ஓட்டோ தொடங்கிய கஸ்டவ் ஓட்டோ பிளக்மெஷினென்பேப்ரிக், விமான என்ஜின்களைத் தயாரிக்க 1911இல் கார்ல் ராப் தொடங்கிய ராப் மோட்டரென்வெர்க்கே ஆகிய பவேரிய நிறுவனங்கள், 1916 மார்ச் 7இல் ஒன்றிணைக்கப்பட்டன. பவேரியாவின் கொடியிலுள்ள வெள்ளை-நீலக் கட்டங்களே, பிஎம்டபிள்யூவின் சின்னமாக இன்றுவரை தொடர்கின்றன. இந்நிறுவனத்தைவிட்டு, 1917இல் ராப் விலகியதைத் தொடர்ந்தே, இந்நிறுவனம் பேயரிஸ்ச் மோட்டாரென் வெர்க்கே(பி.எம்.டபிள்யூ.) என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனாலும், இணைப்பு நடைபெற்ற 1916 மார்ச் 7ஐ நிறுவப் பட்ட நாளாக பிஎம்டபிள்யூ குறிப்பிட்டுக்கொள்கிறது. முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம், ஜெர்மனி விமானப்படை வைத்துக்கொள்ளவும், விமானங்களை உற்பத்தி செய்யவும் தடைவிதித்ததால், விமானம் தொடர்பான உற்பத்திகளை நிறுத்திவிட்டு, 1918இல் பிஎம்டபிள்யூ ஏஜி (ஜெர்மனியில் ஏஜி என்பது பப்ளிக் லிமிட்டெட்) நிறுவனமாகப் பதிவு செய்துகொண்டு, உழவுக்கருவிகள், ரயில்வே பிரேக் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது.

தொழிற்சாலைகளுக்கு பிஎம்டபிள்யூ தயாரித்துக்கொடுத்த என்ஜின்களை சில நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, 1923இல் தானே மோட்டார்சைக்கிளை உற்பத்திசெய்யத் தொடங்கியது. டிக்சி கார்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த பார்ஸ்யூக்பேப்ரிக் எய்சனேச் நிறுவனத்தை 1928இல் வாங்கியதைத் தொடர்ந்து கார்களை  உற்பத்தி செய்யத்தொடங்கியது பிஎம்டபிள்யூ. 1930களில் ஹிட்லர் மீண்டும் ஜெர்மனியில் விமானப்படையைத் தொடங்கியதையடுத்து, விமான என்ஜின் தயாரிப்பை மீண்டும் தொடங்கிய பிஎம்டபிள்யூ, ஜெட்  என்ஜின்கள் உட்பட, முப்பதாயிரத்திற்கும் அதிகமான விமான என்ஜின்களைத் தயாரித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜெர்மனி பிரிந்துவிட, கிழக்கு ஜெர்மனியிலிருந்த இதன் தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்பட்ட கார்களை பிஎம்டபிள்யூ பெயரில் விற்பனை செய்ததால், அத்தொழிற்சாலைகள் தங்களுடையதல்ல என்று சட்டப்பூர்வமாகக் கைவிட்டது பிஎம்டபிள்யூ. மேற்கு ஜெர்மனியிலிருந்த அதன் தொழிற்சாலைகள் போரில் மிகமோசமாகச் சேதமடைந்திருந்தன. விமான என்ஜின்கள் மட்டுமின்றி என்ஜின்களையே தயாரிக்க நேச நாடுகள் பிஎம்டபிள்யூவுக்குத் தடைவிதித்திருந்ததால், சமையல் கருவிகளை உற்பத்தி செய்த பிஎம்டபிள்யூ, 1940களின் இறுதியில் மோட்டார்சைக்கிள்களையும், 1950களின் தொடக்கத்தில் கார்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. உலகின் மிகச்சிறந்த கார்  என்றழைக்கப்படுகிற ரோல்ஸ்-ராய்சின் வணிகச் சின்னத்தை 2003இல் வாங்கியதன்மூலம், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களையும் தற்போது பிஎம்டபிள்யூவே உற்பத்தி செய்கிறது.

;