உலகம்

img

இந்நாள் ஜுலை 10 இதற்கு முன்னால்

1913 - அமெரிக்காவிலுள்ள மரணப் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் 134° ஃபாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது. புவியில் இதுவரை பதிவானதிலேயே மிக அதிக வெப்பநிலையான இது அமெரிக்கக் காலநிலை அமைப்பால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அளவீட்டு முறைகளின் நம்பகத்தன்மை குறித்து சிலரால் எழுப்பப்பட்ட ஐயத்தை, உலக வானிலை அமைப்பு நிராகரித்துவிட்டது. தரையிலிருந்து ஒன்றரை மீட்டர்(சுமார் 5 அடி) உயரத்தில், நேரடியாக வெயில்படாமல், நிழலில்தான் புவியின் வெப்பநிலையை அளக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. நேரடியாகத் தரையின் வெப்பநிலையை அளந்தால் இன்னும் 54°இலிருந்து 90°வரை கூடுதலாக இருக்கும்.  வறண்ட, கருமையான நிலப்பகுதிகளில், தரை வெப்பநிலை 100° செல்சியசை எட்டலாம் என்று அறிவியல் கூறினாலும், இதே மரணப் பள்ளத்தாக்குப் பகுதியில், 1972 ஜூலை 15இல் பதிவான 201°(செல்சியசில் 93.9°, ஒப்பீட்டுக்கு -  நீரின் கொதிநிலை 100°!) என்பதே உலகில் இதுவரை பதிவான மிக அதிக தரை வெப்பநிலையாகும். மரணப் பள்ளத்தாக்கில் இந்த இரு வெப்பநிலைகளும் பதிவான பகுதிக்குப் பெயரே உலை ஓடை(ஃபர்னஸ் க்ரீக்)! இப்பகுதியில் 2001இல் தொடர்ச்சியாக 154 நாட்களுக்கு 100°க்கும் அதிகமான வெப்பநிலையும், 1917இல் 52 நாட்களுக்கு(43 நாட்கள் தொடர்ச்சியாக!) 120°க்குக் குறையாத வெப்பநிலையும் நிலவியுள்ளது. பல நேரங்களில் இரவிலும் 100°க்கும் அதிகமான வெப்பநிலை நிலவும் இப்பகுதியில், 1918 ஜூலை 5 இரவில் பதிவான 110°யே உலகின் அதிகமான இரவுநேர வெப்பநிலையாக 2017வரை இருந்தது. 2017 ஜூன் 17 இரவில் ஓமனின் கசாப் என்ற இடத்தில் 111.6° பதிவானது! 2010 ஆகஸ்ட் 10இல் அண்டார்ட்டிக் பகுதியில் பதிவான மைனஸ் 135.8°தான் உலகில் இதுவரை பதிவானதிலேயே மிகக்குறைவான தரை வெப்பநிலையாகும். அப்போது இப்பகுதியில், காற்றின் வெப்பநிலை இன்னும் குறைவாக இருந்திருக்கும் என்று கருதப்பட்டாலும், பதிவு செய்யப்படவில்லை. செய்தித்தாள்கள் வெயில் அளவை ஃபாரன்ஹீட்டில் வெளியிடுவதால் ஒப்பிட வசதியாக வெப்பநிலைகள் இப்பதிவில் (செல்சியஸ் என்று குறிப்பிடப்பட்டவைதவிர) ஃபாரன்ஹீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் பதிவானதிலேயே மிக அதிக வெப்பநிலை 2016 மே 19இல் ராஜஸ்தானின் ஃபலோடியில் பதிவான 123.8°தான்!

;