இலக்கியச் சோலை

img

தொற்று - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

கரோனா வைரஸைப் போல சங்கரியின் சிரிப்பு அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.  அவளது படர்ந்த முகம் மேலும் விரிந்து சிரித்தது.  அவளது கண்களும், மூக்கும், காதுகளும், கழுத்து நரம்புகளும் சிரித்துக் கொண்டிருந்தன. அப்துல்லா சிரித்துக் கொண்டே தான் கேட்டார், “எதுக்கு சிரிக்கிறவ”. சங்கரியால் சிரிப்பை நிறுத்திவிட்டு பதில் சொல்ல இயலவில்லை. அதற்குள் ஜெயராமன், “அவங்க சிரிக்கிறாங்க, நீங்களும் நானும் சிரிக்கிறோம் இது எல்லாம் சந்தோசந்தானே, இதுக்கு ஒரு காரணம் கேட்கனுமா,” என சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், கற்பகம், “அப்துல்லா அண்ணே அவளோட கல்லு மூக்குத்தியப் பாருங்க அதுவுங்கூட ஜோரா சிரிக்குது,” என மூக்குத்தியை கை நீட்டிக் காட்டினாள்.  “ஆமாம் அதுந்தான் சிரிக்குது” என ஆச்சரியப்பட்ட அப்துல்லா பலமாக சிரிக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது, பிளாஸ்க்கில் காபி வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்த ஜோசப்புக்கும் சிரிப்பு ஒட்டிக்கொண்டது. “சங்கரி சிரிச்சா போச்சு அப்புறம் எல்லாருஞ் சிரிக்க வேண்டியதுதான்” என்றவாறே டம்ளர்களில் காப்பியை ஊற்றலானார். மானேஜர், கடுகடுத்த முகத்துடன் கண்ணாடிக் கதவு வழியாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மடாரென கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர், “வேலை நேரத்துல சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு” எனப் பொறிந்தார்.  மானேஜரின் கோபத்தை ஆற்றும் விதமாக, ஜோசப் காபி டம்ளரை அவரை நோக்கி சிரித்தவாறே நீட்டினான். “முதல்ல எல்லாரும் சிரிப்ப நிறுத்துங்க பெறகு காப்பி சாப்பிடலாம்” என மானேஜர் எரிச்சலுடன் உத்தரவிட்டார்.  அதைச் சற்றும் பொருட்படுத்தாத கற்பகம், “ஏன் சார் நீங்க தான் ஒரு வாட்டி எங்களுக்குச் சிரிச்சு காமிங்களேன்” என கைகூப்பி அவள் கோரிக்கையாக வைத்த விதம் எல்லோருக்கும் மீண்டும் சிரிப்பை வரவழைத்தது. மானேஜர் சிரிப்பு தனக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்ற பதட்டத்தில் அறைக்குள் சென்று தன்னை தனியாக அடைத்துக்கொண்டார்.

;