அறிவியல்

img

இன்று பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது

இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar eclipse) இன்று நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.47 மணி வரை நிகழ உள்ளது. 

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அதனை மறைக்கிறது. இன்று நடைபெறும் சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பகுதி அளவு நேர்கோடாக வருவதால் இந்த பகுதி சந்திர கிரகணம் நடக்கிறது. 

இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்கூட பார்க்க முடியும். சில நாடுகளில் ஜூலை 16ஆம் தேதி (இன்று) இரவு இந்த கிரகணம் ஏற்படும். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் ஜூலை 17-ஆம் தேதி நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கி, மெல்ல மெல்ல வளர்ந்து அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடையும். பின்னர், சிறிது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீது இருந்து விலகிக்கொண்டே வந்து, அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்து, காலை 5.47 மணிக்கு சந்திரன் முழுமையாக மறைந்துவிடும்.  இந்த பகுதி சந்திர கிரகணம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் 56 வினாடிகள் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில், சந்திரன் அடர்ந்த ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்த சிவப்பு நிறமாகவும், பின் அடர்ந்த சாம்பல் நிறமாகவும் மாறும். எனவே இதனை ’அரை இரத்த நிலவு’ என்றும் அழைக்கலாம். வரும்  ஆண்டுகளில் நான்கு சந்திர கிரணம் நிகழ்ந்தாலும், நம்மால் பார்க்கக் கூடிய அடுத்த சந்திர கிரணம் வரும் 2021-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி அன்று தான் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;