அறிவியல்

img

நிலா நிலா ஓடி வா...

சந்திரனின் மீதான அன்பும், காதலும் அதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையும் மனிதகுலத்திற்கு மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. கோப்பர் நிக்கஸ், கலிலியோ, கெப்ளர், ஐசக் நியூட்டன், எல் பராடே, மேக்ஸ்வெல், ஐன்ஸ்டீன் என வரலாறு நெடுகிலும் சந்திரனைப் பற்றியும், அதன் இயக்கத்தை பற்றியும் வான் இயற்பியல் பற்றியும் இன்றைக்கு மனிதகுலம் அறிந்திருக்கும் அதிகபட்ச அறிவுக்கு வித்திட்ட மகத்தான விஞ்ஞானிகள் பலர்.  

சந்திரனில் மனிதன் இறங்கிய அந்த முதல் நிகழ்வு 1969 ஜூலை 16ல் நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்றைக்கும், அந்த அற்புதம் நம்மை ஈர்க்கிறது. மீண்டும் மீண்டும் சந்திரனின் மர்மங்களையும், அதில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வளங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்கு உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளன.

அந்த வரிசையில் இந்தியாவும் தனது ஆய்வின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. சந்திரயான் 1 தனது இலக்கை துல்லியமாக எட்டியது. அடுத்ததாக சந்திரயான் 2 தனது பயணத்தை ஜூலை 23 அன்று வெற்றிகரமாக துவக்கி, சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்து சுழலத் துவங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில் சந்திரனில் மனிதன் இறங்கியதன் அரை நூற்றாண்டு குறித்து அறிவியலாளர் ரகுநந்தன் எழுதியுள்ள கட்டுரையை அறிவியல் கதிருக்காக தமிழில் தருகிறார் ரமணன்.

நிலவில் காலடி வைத்து 50 ஆண்டுகள் 

மனிதன் நிலவில் காலடி எடுத்தவைத்த அந்த மகத்தான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் வாழ்ந்த நல்வாய்ப்புக்காரர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்ட கேள்வி “அப்பொழுது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?”. அந்த மயிர் கூச்செறியும் தருணத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக பார்த்தவர்களுள் இந்தக் கட்டுரையாளராகிய நானும்  ஒருவன்.1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் கென்னடி விண்மய்யத்திலிருந்து ஏவப்பட்டஅப்போல்லோ விண்கலத்திலிருந்து ஜூலை 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவின் தளத்தில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார். அவரைத் தொடர்ந்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். அதைப் பார்த்தவர்கள் எவரும் அந்தக் காட்சியையோ முதுகுத்தண்டை சில்லிடவைத்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் வார்த்தைகளையோ மறக்கமுடியாது.”மனிதனின் சிறிய காலடி;ஆனால் மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்”. தான்‘ஒரு மனிதனின் சிறிய காலடி’ என்றுதான் சொன்னதாக ஆர்ம்ஸ்ட்ராங் கூறுகிறார். ஆனால் ஒலி சமிக்கை பலவீனமாக இருந்ததால் ‘மனிதனின்சிறிய காலடி’ என்று பொருளையே மாற்றி எடுத்துக்கொள்ளப்பட்டது.அவர்மேன்கைண்ட்’என்று சொன்னதற்குப் பதிலாக ஹ்யூமன்கைண்ட்’என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நாம் சொல்லலாம். இந்த வாரம் உலகம் முழுவதும் அந்த பெரும் சாதனை நிகழ்வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.இந்தக் கட்டுரையும் அந்த நிகழ்வைப் பின் நோக்கிப் பார்த்து மனிதனின் விண்வெளி ஆய்வில் அதன் முக்கியத்துவத்தையும் தேசங்களின் விவகாரங்களில் அது ஆற்றும் பங்கையும் விவாதிக்க விரும்புகிறது.

பனிப் போரின் பின்புலத்தில்... 

மனிதன் நிலவிலோ அல்லது வேறெந்த கிரகத்திலோ காலடி எடுத்து வைத்தது எவ்வளவு அற்புதமான தருணமாக அன்றும் இன்றும் இருந்தாலும் அந்தகுறிக்கோளை அடையும் திட்டம் செலுத்தப்பட்டது மக்கள் நலன் அல்லது அறச்சிந்தனையாலோ அல்ல என்பதுதான் கொடுமையான யதார்த்தம். 1961ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் ஜான் எப் கென்னடி தன்னுடைய உரையில் அபோல்லோ திட்டத்தை அறிவித்தார். அன்று என்ன நிலைமை? கியூபா நாட்டில் பிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா செய்த பிக் வளைகுடாப் போர் தோல்வியடைந்து அதன் விளைவாக எழுந்த தீவிரமான பிரச்சினைகளும் தங்கள் இருப்பு குறித்து அவர்களுக்கு ஏற்பட்ட பதட்டமும் ஒருபுறம்; வளர்ந்து கொண்டே போன வியட்நாம் யுத்தம்; அது குறித்து இரண்டு பக்கங்களாக பிளவுபட்டு நிற்கும் அமெரிக்கமக்கள்; குடியுரிமைகள் மற்றும் இனப் பாகுபாடு குறித்து வளர்ந்து வந்த அதிருப்தி; தன் எதிரியான சோவியத் யூனியன் விண்வெளியில் அடைந்த அடுக்கடுக்கான வெற்றிகள்.இந்த சூழ்நிலையில் அமெரிக்க மக்கள் விரும்பியதெல்லாம் முற்றிலும் செதுக்கப்பட்ட விண்வெளிக் கதாநாயகர்களே.   சோவியத் நாட்டினர் ‘ஸ்புட்னிக்’ என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோளை 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் செலுத்திவிட்டார்கள்; 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யூரி ககாரின் என்பவரை பூமியின்  சுற்றுவட்டப் பாதையில்அனுப்பிவிட்டார்கள்;அதற்கு முன் லைக்கா என்ற நாயையும் முதலாவதாக அனுப்பினார்கள்;கெடுவாய்ப்பாக அது இறந்துவிட்டது.இவ்வாறாக அவர்கள் செய்த முயற்சிகள்  எல்லாம் இன்னுமொரு முதல் சாதனையாக இருந்தது.சோவியத் யூனியனின் இந்த தொடர் சாதனைகளின் மீதும் பெருகிவரும் தன்னம்பிக்கை குறைபாட்டின் மீதும் ஒவ்வொரு துறையிலும் தன் எதிரி வல்லரசைவிட பின்தங்கியிருப்பதன் மீதும் தன் விரக்தியை ஒரு கடிதத்தில் கொட்டியிருந்தார். தன்னுடைய துணை ஜனாதிபதி லிண்டன் ஜான்சனுக்கு எழுதிய இக்கடிதத்தில் இதை மாற்றுவதற்கு என்னென்ன விண்வெளி திட்டங்களைப் போடலாம் என்று கேட்டிருந்தார். பின்னர் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை தேர்ந்தெடுத்தார்.

கென்னடிஅறுபதுகளின் இறுதிக்குள் அந்த திட்டத்தை முடிக்கவேண்டும் என்று கெடு விதித்ததோடலல்லாமல் அவரும் அவருக்குப் பின் வந்த நிர்வாகமும் விண்வெளி  திட்டத்தில் பணத்தை கொட்டியது.ஒரு கட்டத்தில் மைய அரசின் (பெடரல் அரசு) நிதி ஒதுக்கீட்டில் 4.6% நாசாவிற்கு அளிக்கப்பட்டது. இன்று அது அரை சதவீதமாக இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்போலோ திட்டத்திற்கு மட்டும் அந்த பத்தாண்டுகளில் 25பில்லியன் டாலர்கள் (1960ஆம் ஆண்டு விலைவாசியில்)ஒதுக்கப்பட்டன. அது அமெரிக்க அரசின் ஒரு ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் 2.5சதமாகும்.1962ஆம் ஆண்டு ஜான்கிளென் சென்றஆளுள்ள முதல் விண்வெளிப்பயணம்தொடங்கி 1969ஆம் ஆண்டு நிலவில் இறங்கியது வரை நடைபெற்ற துரிதமான முன்னேற்றங்களுக்கு இந்த பிரம்மாண்டமான பணச் செலவே நெம்புகோலாகியது.  இந்த சாதனையானது உலக சரித்திரத்தின் போக்கினை மாற்றியது என்று அமெரிக்காவிலும் வேறு இடங்களிலும் உள்ள பலர் நம்பினர்.இந்த குறிப்பிடத்தக்க ‘வெற்றி’யை அமெரிக்கா எட்டியிருக்காவிட்டால் பனிப்போர் வேறு திசையில் போயிருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இருந்தபோதிலும்அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் விண்வெளி திட்டம் பரந்த ஆதரவைப் பெறவில்லை.நிலவில் இறங்கிய உடன் மட்டுமே இது ஐம்பது சதவீதத்தை தாண்டியது. அப்போலோ11 தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த நிலவு இறக்கங்கள் அமெரிக்காவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் குறைவான ஆர்வத்தையே ஏற்படுத்தின.1972ஆம் ஆண்டு நடந்த அபோல்லோ 17வரை 12வெள்ளை இன ஆண் விண்வெளி வீரர்கள் நிலவில் இறங்கியுள்ளனர். இதற்குள் திரும்பத் திரும்ப ‘அங்கே போனோம் அதை செய்தோம்’ என்ற பல்லவியைக் கேட்டு அமெரிக்க மக்கள் சலிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.அமெரிக்க அரசும் அதற்கு மூடுவிழா நடத்தியது. பூமியின் தாழ் சுற்று வட்டப் பாதையில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதும் அங்கே நீண்ட காலம் தங்குவதும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட விண்கலன்களைக் (space shuttle ) கூட ஓரங்கட்டிவிட்டனர். ரஷ்யா எப்பொழுதுமே இதைப்போல மிகுந்த பணத்தையோ முயற்சிகளையோ பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால்ஆளுள்ள விண்வெளி ஆய்வுகளில் முதலீடு செய்யவில்லை. ஆகவே மற்ற கிரகங்களை ஆய்வு செய்வதற்கு முதல் படி என்று கருதப்பட்ட ‘நிலவில் இறங்குவது’ முடிவுக்கு வந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஆனாலும் முதன் முதலாக மனிதன் நிலவில் இறங்கியது மொத்த உலகத்தையும் உற்சாக மூட்டியது மட்டுமல்லாமல்  மனிதனின் சாதனைகளையும் முன்னேற்றங்களையும் கண்டு வியப்பில் ஆழ்த்தியது. உள்நாட்டில் வெற்றிக் களிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அந்தக் குழுவில் இருந்த மைக்கேல் காலின்ஸ் கூறியது போல அவர் எங்கு சென்றாலும் அந்த சாதனையை அமெரிக்காவின் வெற்றியாக இல்லாமல் மொத்த மனித குலத்தின் சாதனையாகவே மக்கள் பார்த்தனர். 

அப்போல்லோ11-சிலஅம்சங்கள்

அப்போல்லோ11இலும் அதற்கு முன்னும் பின்னும் ஏவப்பட்ட திட்டங்களிலும்இருந்த பொதுவான சில அம்சங்களை நினைவு கூரலாம்.முன்னோடி விண்வெளி வீரர்களை   சுமந்து சென்ற சாட்டன்V (SaturnV) ராக்கெட் ஒரு ராட்சச ராக்கெட் ஆகும். இதை 1967 முதல் 1973வரை நாசா பயன்படுத்தியது. மொத்தம் 13பயணங்களை எந்தவித விபத்தும் இல்லாமல் அது செய்தது. இந்த ராக்கெட்டானது நாசா, போயிங், வட அமெரிக்க ஏவியேஷன், டக்லஸ் ஏர்கிராப்ட்(பின்னாளில் லாக் ஹீடில் இணைந்தது)மற்றும் ஐ பி எம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.முன்னாள் நாஜி ஜெர்மனியை சேர்ந்த வெர்ன்ஹெர்வோன் பிரான்(Wernher von Braun) என்பவரது குழுவின் தலைமையில் இந்தக் கூட்டமைப்பு இயங்கியது. மூன்றுநிலை திரவ உந்து பொருளைக் கொண்ட இந்த ராக்கெட் அதிகன ஏவுகலம் என்று வகைப்படுத்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவும் அதிக பட்ச எடைப் பொருட்களையும் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கும் அதற்கு அப்பால் நிலவுக்கும்சுமந்து சென்றது. அப்போல்லோ 8 இலிருந்து விண்கலங்களை சாட்டன்V(SaturnV)செலுத்தியது. ஒவ்வொரு திட்டத்திலும் வெவ்வேறு அம்சங்கள் சோதனை செய்யப்பட்டன. முடிவில் நிலவில் இறங்கும் சாதனை உட்பட எல்லாவற்றையும் மிகக் குறுகிய காலத்தில் அதாவது ஒரே ஆண்டில் செய்தது.   பூமியின் தாழ் சுற்று வட்டப் பாதைக்கு 140டன் எடைப் பொருட்களையும் மூன்றாம் நிலையான நிலவு இறக்கத்திற்கு கட்டுப்பாட்டுக் கலம், இறங்கும் ஊர்தி, வீரர்கள், பொருட்கள் என 43 டன் எடைப் பொருட்களையும் செலுத்தியது. பாகுபலி என்றழைக்கப்படும் நமது சந்திரயான்-2 எடுத்து செல்லும் எடை 4தாங்கள்தான் என்பதை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவும் பலமுறை பூமியின் சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றி ஒவ்வொரு சுற்றிற்கு மேல் எழும்ப ஸ்லிங் ஷாட் எனப்படும் இயக்கங்களை செய்து ஒரு மாதத்திற்குப் பிறகுதான் நிலவை அடையும்.

இன்றைய தொழில்நுட்ப அளவுகளைவைத்துப் பார்க்கும்போது அன்று அமெரிக்க விண்கலக் கட்டுப்பாட்டு அறை,ராக்கெட்டின் ஆன்போர்ட் இயக்க முறைகள் அனைத்தும் மிகவும் ஆரம்ப நிலை சாதனங்கள். ஆளுடன் கூடிய முதல் விண்கலத்தின் பாதை முழுவதும் காத்தரின் ஜான்சன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரால் கணினி உதவியின்றி கணக்கீடு செய்யப்பட்டது.பின்னர் முழுவதும் ஆப்பரிக்க அமெரிக்க பெண்கள் கொண்ட குழு ஒன்றினால் புரோகிராம் செய்யப்பட ஐ பி எம் மெயின் பிரேம் கணினி அந்த வேலையை எடுத்துக்கொண்டது.இந்தப் பணிஅன்று இன ஒதுக்கீடு இருந்த வெர்ஜினீயாமாநிலத்தில்நடந்தது.அண்மையில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான ‘ஹிடன் பிகர்ஸ்’(Hidden Figures)இல் இந்த சம்பவங்கள் காலத்தால் அழியாத சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. அப்போல்லோ 11இன் ஆணைகள் பிறப்பிக்கும் இயந்திரத்தில் இருந்த கணினியிலும் இறங்கு சாதனமான ஈகிளிலும் தானியங்கி வழிகாட்டிகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன.ஒரு சிறிய அறை அளவு இருந்த மெயின் பிரேம் கணினியின் கீழ் அவை இயங்கின.இன்று இருக்கும் ஐ போனின் கணக்கிடும் திறனில் பத்து லட்சத்தில் ஒரு பங்கே அதற்கு இருந்தது. இவைதான் இன்று பிளை பை வயர் (fly-by-wire)என்று அழைக்கக்கூடிய விமானக் கட்டுப்பாட்டு கருவிகளின் முன்னோடி.அப்போல்லோ விண்கலங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகள் பெரும்பாலும் கம்பிகளும் கோல்களும் கொண்ட மனிதர்கள் இயக்கும்விதமாக இருந்தன.சாதாரண கார் சீட் போன்ற சிறிய இடத்தில் வீரர்கள் அமர்ந்திருந்தனர்.நிலவில் இறங்கும் கலமும் மீண்டும் நிலவிலிருந்து கட்டுப்பாட்டுக் கலத்தில் இணையும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருக்கவேண்டும்.எனவே அவை நமது சந்திராயனில் இருப்பதைவிட  விட  பெரியதாகவும் கனமானதாகவும் இருந்தன.  தேசிய பெருமிதத்தை ஊட்டுவது,வளங்களைக் கொள்ளை அடிப்பது, காலனிய மயமாக்குவது, நாடுகளை வெற்றி கொள்வது போன்ற பழமை வாத ஆசைகளும் இந்த சாதனைகளுடன் இணைந்திருப்பதும் மறுக்கமுடியாது.இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எவரெஸ்ட் சிகரத்திலும் நிலவிலும் இந்த வெற்றிகளைக் கொண்டாடும் விதமாக தங்கள் நாட்டுக் கொடிகளை நடுவது. அப்போல்லோ திட்டத்தின் பின்னால் இப்படிப்பட்ட தேசிய தத்துவார்த்த வெறி நிச்சயமாக இருக்கிறது. மக்கள் திரளின் உளவியல் வெளிப்படும் விதம் தெரிந்ததே.ஆனால் இப்படிப்பட்ட உந்துதலையும் அதற்காக செலவழிக்கப்படும் ஏராளமான தொகையையும் கண்டு கொள்ளாமலிருப்பது நமது பேரழிவுக்கே இட்டு செல்லும். நிலவை ஆய்வு செய்யும் இரண்டாவது தொடக்கங்களுக்கு இதுவே பெரும் உந்து சக்தியாக இருக்கிறது. 

நிலவு மீண்டும் அழைக்கிறது

நிலவு தன்னை நோக்கி மீண்டுமொரு முறை ஈர்க்கிறது.இரண்டாவது சுற்று ஆய்வுப் பயணங்கள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுவிட்டன.தேசிய பெருமித உணர்வும் கூடவே எழுகின்றது.எல்லாவற்றிலும் தனது பெரிய முத்திரையை பதிக்கவேண்டும் என்கிற சீனாவின் அவாவானது நிலவின் இருண்ட பகுதியில் அதன் விண்கலத்தை இறக்கியுள்ளது. சேங்4 என்ற அதன் திட்டத்தில் நிலவில் நீடித்து உணவு உற்பத்தி செய்ய முடியுமா என்ற கோணத்தில் செடிகளையும் விதைகளையும் கொண்ட உயிரியல் பகுதி ஒன்றையும் நிலவில் இறக்கியுள்ளது. 2035ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் வைத்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருக்கலாம் என்கிற ஊகத்தில் ஒரு நிரந்தர விண்வெளி நிலையத்தையும் அங்கு அது அமைக்கலாம். இந்தியாவின் சந்திரயான் 2 அங்குதான் இறங்கப்போகிறது 2029ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு ஆளுள்ள பயணங்களை செலுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் 6000 கிலோமீட்டர் செல்லக்கூடிய களம் ஒன்றை டோயோட்டாவுடன் இணைந்து கட்டமைத்துக்கொண்டிருக்கிறது.இஸ்ரேலின் ஸ்பேஸ்எல் பெரிஷீத்(SpaceIL’sBeresheet (genesis or beginning) நிலவில் இறங்க முயற்சி செய்தது;ஆனால் அது  நொறுங்கிவிட்டது. இது போல் பல வணிக நிறுவனங்களும் ஸ்டார்ட் அப்ஸ் நிறுவனங்களும் இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகளை - குறிப்பாக சீனாவின் முயற்சிகளை- கவனித்த அமெரிக்கா தான் 2024 ஆம் ஆண்டு மீண்டும் நிலவுக்கு செல்லவிருப்பதாகவும் இந்த முறை அங்கு தங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. நாசா பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நிலவை சுற்றும் விண்வெளி நிலையத்தை அமைத்து நிலவை சுற்றி பல இறங்கும் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளது.நிலவிலேயே ஒரு நிலையத்தையும் அமைக்க உள்ளது. நிலவை தளமாகக் கொண்டு  பல கிரகங்களை குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. ‘நிலவு அடித்தளம்; செவ்வாய் இலக்கு’ என்கிறார் நாசாவின் நிர்வாகியான பிரிடென்ஸ்டின்.2023ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் இறங்கலாம் என்றும் தெரிவித்தார்

தேசங்களுக்கிடையேயான போட்டி குறிப்பாக சர்வதேச ஒத்துழைப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படாதது கவலையளிக்கிறது.நிலவிலும் விண்வெளியிலுள்ள மற்ற கிரகங்களிலும் இருக்கக்கூடிய தாதுக்கள் மற்ற இயற்கை வளங்கள் மேல் உள்ள பேராசை இன்னொரு மோசமான விஷயம்.மனிதர்கள் வளங்களை தோண்டி எடுக்கும் செயல்பாடுகள் மூலம் பூமியை அதிகம் சேதப்படுத்திவிட்டார்கள். தேசிய மற்றும் வணிக போட்டிகள் இப்பொழுது ஆர்டிக் பகுதியை பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதலினால் அதன் பனிப்பாளங்கள் உருகி திறப்புகள் ஏற்படுகின்றன. இந்த நோயானது விண்வெளிக்கும் பரவாமல் எப்படி தடுப்பது? இந்த அனுபவங்களிருந்து இந்தியா பல விசயங்களை கற்றுக் கொள்ளலாம். மக்கள் திரள் இயக்கங்களும் அறிவியல் சமுதாயமும் இஸ்ரோவும் கவனமாக ஆய்வு செய்து வளர்ந்து வரும் இந்திய விண்வெளித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.மக்களின் ஆர்வத்திற்கு ஓரளவிற்கு மதிப்பளிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.ஆனால் தேசிய வெறிக்கும் அறிவியல் ஆய்விற்கும் இடையிலுள்ள மெல்லிய கோட்டை கண்காணிக்க வேண்டும்.வீண் கவுரவத் திட்டங்கள்,அதிகப் பொருட் செலவு ஆகியவை இல்லாமல் விண்வெளியில் மனிதர்களை  செலுத்தும் இஸ்ரோவின் திட்டங்கள்  அமைக்கப்பட வேண்டும். தேசத்தின் ஆர்வத்தை மிகையாகத் தூண்டாமல் கவனமாக இருக்கவேண்டும். அது கட்டுக்கடங்காமல் போய் பயனற்றதும் ஆபத்தானதுமான திட்டங்களில் இஸ்ரோவை செலுத்தக்கூடியது. சந்திரயான்2 ஏவுதலை இஸ்ரோ அதிகாரிகளின் உற்சாக வழிகாட்டுதலில் 5௦௦௦ மக்கள் ஆர்ப்பரித்துப் பார்த்ததும் பின் அது நிறுத்தப்பட்டதும் உரத்த கண்டனக் குரல்கள் எழுந்ததும் கவனத்தில் கொள்ளவேண்டும். தொழில் நுட்ப எச்சரிக்கைகளை மீறி ரொனால்ட் ரீகன் நிர்வாகம் சேலஞ்சர் விண்கலத்தை ஏவ அழுத்தம் கொடுத்ததையும் அது ஒரு சில நொடிகளில் வெடித்து சிதறியதையும் இஸ்ரோ நினைவுகூர வேண்டும்.அறிவியல் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான ரிச்சர்ட் ஃ பெயின்மேன் அதில் ஒரு பழுதான ஓ வளைய இணைப்பை சுட்டிக் காட்டினார். விசாரணைக் குழு நாசாவின் பணிக் கலாச்சாரத்தை குறை கூறியது. இப்பொழுதும் பத்திரிகை அறிக்கைகள் சந்திரயான் 2 உடனே ஏவப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இஸ்ரோவும் இந்தியாவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. 

;