திங்கள், செப்டம்பர் 16, 2019

அறிவியல்

img

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழும் பூமியை போல் வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

நாசாவின் கெப்ளர் விண்கலன் கடந்த 2015-ஆம் ஆண்டு சூரிய மண்டலத்திற்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தைக் கண்டுபிடித்தது. இந்த கே2-18பி கிரகம் பூமியைக் காட்டிலும் அடர்த்தியில் 8 மடங்கு பெரியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  கே 2-18 பி   என்ற  நட்சத்திரத்தில்  நீர் திரவ வடிவத்தில் இருக்க முடியும் என நேச்சர் ஆஸ்ட்ரானமி இதழில்  கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய பூமியில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் கிரகம் அமைந்துள்ளது. ஒரு ஒளி ஆண்டின் தொலைவு என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் (hubble space telescope) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தரவுகளுடன்  சியாராஸ் மற்றும் அவரது குழுவினர் திறந்த மூல வழிமுறைகளைப் பயன்படுத்தி கே2-18பி-யின் வளிமண்டலத்தின் மூலம் வடிகட்டப்பட்ட நட்சத்திர ஒளியை பகுப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில், நீர் மற்றும் நீராவியின் தெளிவற்ற அறிகுறியை கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ”பூமியுடன் ஒப்பிடுகையில், பூமியின் வளிமண்டலத்தில் நீராவியின் சதவீதம் துருவங்களுக்கு மேலே 0.2 சதவீதத்திற்கும், வெப்பமண்டலத்தில் நான்கு சதவீதம் வரை வேறுபடுகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கும் சான்றுகள் இருந்தன. நைட்ரஜன், மீத்தேன் போன்றவையும் இருக்கலாம் என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. வளிமண்டலத்தில் மேகங்கள் எந்த அளவுக்கு உள்ளன மற்றும் நீரின் அளவு போன்ற விவரங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட உள்ளது.ஆனால் பூமியைக் காட்டிலும் அதிகமான அளவு கதிர்வீச்சை உமிழும் தன்மை கொண்டதாக இருக்கலாம. மேலும், சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கும் கோள்களில் முதல் முறையாகத் தண்ணீரும், வெப்பநிலையும் பூமியில் இருப்பதைப் போன்று இருப்பது வியப்புக்குரியது. மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றனவா என்பது அடுத்தகட்ட ஆய்வில் அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 

;