அறிவியல்

img

அறிவியலென்னும் அகதி - ஈ.கோலை

தகவல் அறிவோம்

தேசிய அறிவியல் தினத்துக்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் பிப்ரவரி 28 கடந்திருக்கிறது. இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு ஒருத்தர்தான் ஆராய்ச்சி செய்யத் தகுதியானவர் என்ற புள்ளி விவரத்தைக் கூடத் துணுக்குகளில் லென்ஸ் வைத்துத் தேடினாலும் கிடைப்பதில்லை. பேசாமடந்து (ஆண், பெண் என்றால் தானே பேசா மடந்தை, மடந்தன்) ஊடகங்கள் நிர்மலா தேவியின் பின்னால் ஓடியதேயன்றி அதே மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை மோந்துகூடப் பார்க்கவில்லை. 
மூலக்கூறு உயிரியல் துறையின் இணைப் பேராசிரியர் சுப்பையா ராமசாமி அவர்களின் வழிகாட்டுதலால் முனைவர் பட்ட ஆய்வாளர் ரேகா (இன்று உலக மகளிர் தினம்) மற்றும் ஆய்வுக் குழுவினர் உருப்படியான ஆராய்ச்சியைச்  செய்திருக்கின்றனர். அன்றாடம் நம் கண்ணுக்குத் தென்படும் கலர் கலரான கோலா குளிர்பானங்கள் குறித்த இத்தகைய ஆய்வையும் கூடவே அதிர்ச்சியான தகவலை மிகவும் புகழ்பெற்ற Nature Scientific Reports சஞ்சிகை 19/11/2018 அன்று வெளியிட்டது. 

ஏற்கனவே இருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் உறிஞ்சிக் குடித்த இத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள், நுகர்வோர்களுக்கு வாழ்க்கையையே விட்டுச் செல்லக்கூடிய பலவித அபாயகரமான நோய்களையும் இலவசமாக இறக்குமதி செய்கின்றனர். இக்கட்டுரையின் முக்கிய வேதிப்பொருளான 4-Methyl Imidazole(4MEI) –லானது உடலுக்குள் நடக்கும் வளர்ச்சிதை மாற்றங்களால் உருவாக்கப்படுகிறது. இதில் NAD+ மூலகூறைத் திரும்பக் கொடுக்கும் நொதித்தல் நிகழ்ச்சியும் அடங்கும். 

இதை சர்வதேச புற்றுநோய் ஆய்வியல் நிறுவனம் குரூப்-IIB என்று வகைப்படுத்தியுள்ளது. அதாவது புற்றுநோயை உண்டாக்குவதற்கான வாய்ப்பு, இவைகளுக்குச் சுகபோகமாக இருக்கிறது என்பதன் நோய்  மறைக்  குறியீடே அதுவாகும். வெறும் எலிகளில் மட்டுமில்லாமல் மனிதர்களில் சோதனை செய்ததில், அதிகமாக வண்ணமயமான குளிர்பானங்களை மடக்கு மடக்கென்று அன்றாடம் குடித்தவர்களுக்கு தாறுமாறான குளுக்கோஸ் அளவும் இன்சுலினும் உற்பத்தியாகி உள்ளது. 

அதனால் கணையத்தின் செல்கள் கடுமையைப் போராடி, நொந்து, வீங்கி, அடிபட்ட நிலைக்குத் தள்ளப்படுவதும் தெரியவந்துள்ளது. இதனை அனாப்லாசியா என்ற டெரர் வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். இது புற்றுநோய்க்கு  முந்தைய நிலையாகும். மேலும் இத்தகைய ஆய்வு சொல்லாத ஒன்றை “குறிப்பாக இத்தகைய ஆய்வுக்கு உற்படுத்தப்பட்ட ஆண் எலிகள் விரைவிலேயே புற்றுநோய் வந்து இறந்துபோயின” என்று இணைப் பேராசிரியர் சுப்பையா ராமசாமி நேரிடையாக நம்மிடையே சொல்லியுள்ளார். மிகப்பெரிய இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் அவைகள் டீ, காபியிலும் இருக்கின்றனவாம். வண்ணமயமான, கண்களைக் கவரும் குளிர்பானங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தருணமிது. கலரா கலரா கலரானால்  கூல்டிரிங்ஸ் பெயரே மரண வாசம்.
Reference:

1.Chronic uptake of 4-MEI induces Hyperinsulinemia and Hypoglycemia via pancreatic cell Hyperplasia and glucose dyshomeostatis/ Nature Scientific Reports.
2.யாருடைய எலிகள் நாம்? - சமஸ், பக்கம்-121

;