அறிவியல்

img

அறிவியல் கதிர்

அறிவியலில் பூத்த ரோஜா மலர்

அமெரிக்க டெக்சாஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஒரு புதிய நீர் வடிகட்டியை வடிவமைத்திருக்கிறார்கள். ரோஜாவை ஒத்திருக்கும் இதன் ஒவ்வொரு வடிகட்டி தாள் தயாரிக்க 1.5 டாலருக்கும் குறைவாகவே செலவாகிறதாம். கறுப்பு தாள் சுருளின் மேல் விசேச பாலிமர் தடவப்பட்டு ரோஜா இதழ்கள் போல் சுருட்டப்பட்டிருக்கின்றன. சூரிய ஒளியில் நீர் ஆவியாகி அதிலிருந்து உப்பும் அசுத்தங்களும் பிரிக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்தில் ஒரு சதுர மீட்டர் பரப்பில் நான்கு லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த முடியுமாம். இதை தலைமை ஆய்வாளர் பான் எந்த வடிவத்தில் வடிகட்டியை செய்யலாம் என்று சிந்தித்தபோது தனது பள்ளிப் பருவத்தில் படித்த அலெக்சாண்டர் டுமாசின்  ‘ப்ளாக் துலிப்’ என்ற கதை நினைவுக்கு வந்ததாம். அதன் அடிப்படையில் இந்த புதிய வடிவத்தை அமைத்தார்களாம். 
 

காந்த சக்தியின் கரு

பூமியை சுற்றி காந்த மண்டலம் இருக்கிறது. இதுவே விண்வெளியிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களிலிருந்தும்  மின்னேற்ற துகள்களிலிருந்தும் பூமியை பாதுகாக்கிறது. பல விலங்குகள் இந்த காந்த மண்டலத்தைப் பயன்படுத்தி திசைகளை அறிந்துகொள்கின்றனவாம். பூமிக்குள் 6௦௦௦ கிலோமீட்டர் ஆழத்திலுள்ள அச்சும் பூமியின் மேற்பரப்புமே இந்த காந்த மண்டலத்தின் தோற்றுவாயாக இருக்கிறது. இதுவரை பூமியின் மேன்டில் எனும் பகுதி காந்த சக்தி இல்லாதது என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது ஹர்மடைட் எனும் இரும்புத் தாது பூமியின் மேன்டில் பகுதியில் 925 டிகிரி செல்சியஸ் வரை தன்னுடைய காந்த சக்தியை இழக்காமல் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேற்கு பசிபிக் கடலின் அடியிலுள்ள டெக்டானிக் தகடுகளில் இது நிகழ்கிறது.

பருவ நிலை பாதிப்புகள் 
2௦16இலிருந்து 2௦17 வரை ஆயிரக்கணக்கான paffin பறவைகள் வட பசிபிக் பிராந்தியத்திலுள்ள பெரிங் கடலில் இறந்து போயின. அந்த இறப்புகளுக்கு பருவ நிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.இந்தப் பறவைகள் பட்டினியால் இறந்துபோயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பருவநிலையின் காரணமாக அதன் இரைகள் குறைந்ததும் அல்லது இரைகள் பரந்து காணப்படாததும் அதனோடு பறவைகள் தங்கள் இறகுகளை உதிர்க்கும் காலமும் இணைந்து இந்த இறப்புகள் நடந்திருக்கலாம்.  

ஒளிரும் ஆய்வுகள் 
உயிருள்ள திசுக்களை ஆய்வு செய்யும் ஒளிர் நுண்நோக்கி(Fluorescence microscopy) ‘தூண்டப்பட்ட ஒளிர்வு’ எனும் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. சில புரோட்டீன்கள் லேசர் ஒளி பாய்ச்சப்படும்போது வெவ்வேறு அலைவரிசை ஒளிக் கற்றைகளை வெளிவிடுகின்றன. ஆய்வு செய்யவேண்டிய புரோட்டீன்களுடன் இப்படிப்பட்ட புரோட்டீன்களை இணைக்கும்போது அந்த புரோட்டீன்கள் நுண் நோக்கியில் தெளிவாகத் தெரிகின்றன. இந்த முறையானது அறிவியலில் மிகுந்த பயன்பாடு உடையது. இதைக் கண்டுபிடித்ததற்காக ஒரு நோபல் பரிசும் இந்த முறையின் துல்லியத் தன்மையை மேம்படுத்தியதற்காக இன்னொரு நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.இதுவரை பயன்படுத்தப்பட்ட புரோட்டீன்கள் பெரிதாகவும் வெப்பத்தில் அழியக்கூடியதாகவும் ஆக்சிஜன் இருந்தால்தான் ஒளிரும் தன்மை கொண்டதாகவும் இருந்தன. இந்தக் குறைபாடுகளை போக்கும் விதமாக ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு அறிவியலாளர்கள் புதிய புரோட்டீனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது அதிக வெப்பத்தில் சிதையாமலும் சிறியதாகவும் இருக்கிறது. புற ஊதாக்கதிர்களை பாய்ச்சும்போது இது ஒளிர்கிறது. வெப்பத்தை விரும்பும் செல்கள் கொண்ட நுண் உயிர் (bacterium) ஒன்றில் இத்தகைய புரோட்டீன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட டி.என்.ஏ.க்களை இன்னொரு நுண் உயிரில் செலுத்தி ஒளிரும் பிரிவை மட்டும் உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மழை விரும்பி பாம்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான பாம்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் செம்பழுப்பு நிற விரியன் பாம்பு(pit viper) வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளே மிசோரமில் விஷமற்ற தண்ணீர் பாம்பு வகை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. ஆறுமாதங்களுக்கு முன் அருணாச்சலப் பிரதேசத்தில் கிரையிங் கீல்பேக்(Crying Keelback) எனும் விஷமற்ற பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு வகை பாம்பு ஏழுபேர் கொண்ட ஈரிட வாழ்வியல் அறிஞர்களால் (herpetologist) 12 ஆண்டுகள் ஆவணப்படுத்தப்பட்டபின் புதிய இனமாக (genus and species) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலுக்குத்தான் இந்த வகை பாம்பு புதியது. அங்குள்ள மக்கள் பல காலமாக அறிந்த ஒன்றுதான். அவர்கள் அதை ‘ருஹலாவம்ருல்’ என்று அழைக்கிறார்கள். அதற்கு மிசோரம் மொழியில் மழை விரும்பி என்று பொருள். மழைக்காலத்திற்குப் பிறகு இவை காணப்படுவதால் இந்தப் பெயர் வந்தது.


 

;