அறிவியல்

img

அறிவியல் கதிர் - ரமணன்

1 . பச்சோந்தியிடமிருந்து ஒரு படிப்பினை  


சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப நிறம் மாறும் சிறப்பு தோல் ஒன்றை எமோரி பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.பச்சோந்தியின் நிறம் மாறும் காணொலியை ஆய்வு செய்ததன் அடிப்படையில்  நெகிழ்வுத்தன்மை கொண்ட நீர் நிரம்பிய பாலிமரில் ஒளிவினை புரியும் படிகங்களை பதித்து இந்த தோல் வடிவமைக்கப்பட்டது. இதிலுள்ள ஹைட்ரோ ஜெல்லை விரித்தும் சுருக்கியும் படிகக்கற்றைகளுக்கிடையிலுள்ள இடைவெளியை மாற்றும்போது அவை பிரதிபலிக்கும் நிறங்களும் மாறுகின்றன. பச்சோந்தி தனது நிறத்தை மாற்றுவதைக் கவனித்ததால் இந்த கருத்து தனக்கு வந்ததாக இந்த ஆய்வின் ஆசிரியர் ஒய்.டாங்(Yixiao Dong) கூறுகிறார். பச்சோந்தியின் தோலில் உள்ள ஒளிவினை படிகங்கள் சுற்றுப்புறத்திற்கேற்ப அதன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள உதவுகின்றன.சில காலமாக விஞ்ஞானிகள் இதைப் போன்ற ஒளிவினைப் படிகங்களை உண்டாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மறைப்பு நடவடிக்கை(camouflage) ,வேதியியல் உணர்தல்(chemical sensing),கள்ள நோட்டு தடுப்பு ஆகிய பரந்துபட்ட துறைகளில் இது பயன்படும் என்கிறார்  இதன் முதுநிலை ஆய்வு ஆசிரியரும் எமோரி பல்கலைக் கழகத்துன் வேதியியல் பேராசிரியருமான காலித் சாலிட்டா (Khalid Salaita).

2. காச நோய் சிகிச்சையில் புதிய கருவிகள்

காச நோய் சிகிச்சையில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் விதமாக மூன்று உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சளியை ஆய்வு செய்யும் நுண்ணோக்கி மேம்பாடு,உயிரியல் காப்பு பெட்டிகள் இல்லாமலே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாதிரிகளை எடுத்து செல்லுதல்,மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள கிருமிகளின் டிஎன்ஏக்களை பிரித்தெடுத்தல் ஆகியவற்றில் இவை பயன்படும்.விலை குறைவான இதை பல்நிறுவனக் குழுவொன்று கட்டமைத்துள்ளது.. ஒவ்வொரு மாதிரியையும் நுண்நோக்கி (LED fluorescence microscopy)மூலம் சோதித்தல்,செறிவூட்டி எடுத்து செல்லுதல் மற்றும் டிஎன்ஏக்களை பிரித்தெடுத்தல் ஆகிய ஒவ்வொன்றிற்கும் சுமார் ரூ 100/ மட்டுமே செலவாகுமாம்.  பிசுபிசுப்பான சளியை திரவ நிலைக்கு மாற்றி விசேசமான வடிகட்டி தாள் மூலம் பேக்டீரியா மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.இதனால் ஒரு சென்டிமீட்டர் பரப்பளவில் பேக்டீரியா செறிவாக இருப்பதால் நுண்நோக்கி மூலம் கண்டறிவது மேம்படுகிறது. என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் வடிகட்டி சவ்வை வடிவமைத்த நிறுவனமான மைக்ரோ டிவைசஸ் சேர்ந்தவருமான நளினி காந்த் குப்தா 

இப்பொழுதுள்ள முறைகளில் ஒரு மிலி(ML) சளியில் பத்தாயிரம் கிருமிகள் இருந்தால்தான் கண்டுபிடிக்க முடிகிறது.இந்தப் புதிய முறையில் ஆயிரம் கிருமிகள் இருந்தால்கூட கண்டுபிடிக்க முடியும்.பழைய முறையில் கிருமிகளைக் கண்டறிய 3இலிருந்து 5 நிமிடங்கள் வரை  தேவைப்பட்டது.இதில் ஒரே நிமிடத்தில் அதை செய்துவிடலாம்.   இரண்டாவது கருவி கிருமிகளை இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்ல உதவுகிறது.மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள கிருமிகளை மத்திய சோதனை சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்ய முடியும்.எனவே அவற்றை ஒரு கிருமிநாசினி மூலம் இறக்கவைத்து சீலிட்ட கவர்களில் எடுத்து செல்ல முடிகிறது.அதற்காக தனியாக குறைந்த வெப்ப ஏற்பாடுகள் தேவை இல்லை.கல்ச்சர் எனும் முறைக்கு கிருமிகள் உயிருடன் இருக்கவேண்டும்.ஆனால் டிஎன்ஏ ஆய்வு செய்ய அது தேவையில்லை.எனவே அவை இறப்பதனால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் பேராசிரியர் தியாகி. மூன்றாவது கருவியில் வடிகட்டி தாளிலுள்ள கிருமிகளை செல் சிதைவு திரவத்தில் வைத்து 90 டிகிரி சென்டிகிரேடில் சூடாக்கும்போது செல்லிலுள்ள டிஎன்ஏக்கள் வெளித்தள்ளப்படுகின்றன.அதை சுத்தம் செய்து ஆய்வு செய்யப்படுகிறது என்று விளக்கினார் இந்த ஆய்வின் இன்னொரு ஆசிரியரும் THSTI நிறுவனத்தை சேர்ந்தவருமான முனைவர் சங்காரிகா ஹல்டார் .இதன் முடிவுகள் இப்பொழுதுள்ள முறைகளின் முடிவுகளோடு 89-92%  ஒத்துப்போகின்றன. நடைமுறை சாத்தியப்பாடுகளுக்கும் கள நிலைகளில் செயல்படுவதற்கும் இந்தக் கருவிகளை சோதித்துப் பார்க்கவேண்டியதிருக்கிறது.பின் அவைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்கிறார் பேராசிரியர் தியாகி.   

(தி இந்து ஆங்கில நாளிதழ் 31/08/19- ஆர்.பிரசாத் கட்டுரையின் சுருக்கம்)

3. எக்சோ பிளானெட்டில் தண்ணீர் 

சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன.இதேபோல் வேறு நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்களை எக்சோ பிளானெட்(EXOPLANET) என அழைக்கின்றனர்.K2-18b என்ற எக்சோ பிளானெட்டில் நீராவி இருப்பதற்கான ஆதாரம் இருப்பதை நாசா வானவியலாளர்கள் கண்டுள்ளார்கள்.இதை ஹப்பிள் விண் தொலைநோக்கியின் உதவியோடு செய்துள்ளார்கள்..பூமியிலிருந்து 110ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தட்ப வெப்பம் மிகுந்த வெப்பமாகவோ மிகுந்த குளிர்ச்சியாகவோ இல்லாமல் இருப்பதால் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது சாத்தியமாக இருக்கலாம்.ஆனால் இதன் வளிமண்டலம் மிகுந்த அழுத்தம் கொண்டதாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். 

4.நிறம் மாறும் செருப்புகள் 

புற ஊதாக்கதிர்கள் படும்போது நிறம் மாறும் மை ஒன்றை எம்ஐடி(MIT) ஆய்வாளர்கள் உண்டாக்கியுள்ளார்கள்.அதற்கேற்ற மென்பொருள் நிரல் ஒன்று இதனுள்ளுள் வைக்கப்படுகிறது.’போட்டோகுரோமிலியான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இதனுள் ஒளிவினை புரியும் சாயங்கள் கலக்கப்பட்டிருக்கிறது.இதை செருப்பு,கார்,செல்போன் கவர் போன்ற எந்தப் பொருள் மீதும் அடிக்கலாம்.பல்வேறு விருப்பங்களுக்கேற்ப தனிப்பட்ட வடிவமைக்கும் விதத்தில்(customization) உற்பத்தியை மேம்படுத்த இந்த சிறப்பு சாயத்தினால் முடிகிறது. பயனாளர்கள் ஒவ்வொருநாளும் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களின் தோற்றத்தை விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.இதனால் செருப்பு போன்ற பொருளை பல எண்ணிக்கைகளில் வாங்குவது தேவையில்லை.


 

;