அறிவியல்

img

அறிவியல் கதிர் - ரமணன்

1.விண்வெளியில் உணவு தயாரிப்பு 

சர்வ தேசிய விண்வெளி நிலையத்தில் செயற்கை முறையில்  இறைச்சி தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த தொடக்க நிலை நிறுவனம் அலெப் ஃபார்ம் அறிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தின் ரசியப் பகுதியில் செப்டம்பர் 26ஆம் தேதி இந்த சோதனை நடைபெற்றது. நுண் புவிஈர்ப்பு விசை சூழலில் சிறிய தசை திசுக்களைக் கோர்த்து 3டி உயிரியல் அச்சுப் பொறியில் இது தயாரிக்கப்பட்டதாம்.இந்தப் பரிசோதனையை இஸ்ரேலை சேர்ந்த அலெப் பார்ம்,ரசியாவை சேர்ந்த 3டி உயிரியல் அச்சு தீர்வகம்,அமெரிக்காவை சேர்ந்த மீல் சோர்ஸ் தொழிலகம் மற்றும் பின்லெஸ் புட்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. 

2. திசுக்களைப் பாதுகாக்கும் புது முறை 

திசுக்களைகெடாமல் வைத்திருக்கும் முறையை ஜப்பான் நாட்டு ரிகேன் பிடிஆர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.திசுக்கள்  உலர்ந்துபோய்விடாமலும் அதே சமயம் அதை வைத்திருக்கும் திரவத்தில் மூழ்கிவிடாமலும் இருக்கும் வகையில் நுண் திரவ கருவியைப் பயன்படுத்தி இதை வடிவமைத்திருக்கிறார்கள்.இந்தக் கருவியில் எலியின் மூளை திசுக்கள் 25 நாட்களுக்கு உயிருடன் இருந்ததாக அந்த ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். சுற்றி செயற்கை சவ்வும் பிடிஎம்எஸ் எனும் நுரை தடுப்பான் சுவர்களுக்கும் நடுவில் பகுதி ஊடுருவும் அறையும் பயன்படுத்தப்படுகிறது.

3 .குருத்தெலும்புகள் புத்துருவாக்கம்

சலமாண்டர்(Salamanders) எனும் ஈரிட வாழ் உயிரினம்(Amphibians) தன்னுடைய முக்கிய உறுப்புகளை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் சக்தி படைத்தவை. குறிப்பாக அவற்றின் இழந்த கால்கள் மீண்டும் வளருவதற்கு மேக்ரோபேஜஸ் எனும் நோய் எதிர்ப்பு செல்கள்தான் முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் மனித இனமும்  குருத்தெலும்புகள் மீண்டும் வளரும் திறன் படைத்தவை. மைக்ரோ ஆர்என்ஏ(microRNA) எனும் மூலக்கூறின் கட்டுப்பாட்டில் இது நடைபெறுகிறது என்று டியூக் ஹெல்த் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த மூலக்கூறின் செயல்பாட்டைப் பொறுத்து குருத்தெலும்பு புரதங்கள் குதிகாலில் இளமையாகவும் முழங்காலில் நடுத்தர வயதாகவும் இடுப்பில் வயதானாதாகவும் இருக்கிறது.மனித இனம் மைக்ரோ ஆர்என்ஏவை கைகால்கள் வளருவதற்கு பயன்படுத்துவதில்லை.ஆனால் அவை சேதமடைந்த குருத்தெலும்புகளை சீரமைக்க பயன்படுகின்றன.

4. மீண்டும் இயங்கும் சென்னை பிசிஜி ஆய்வகம்

தொற்று நோய்களை தடுப்பதற்கு அதை ஏற்படுத்தும் கிருமிகளை வலுவிழந்த நிலையிலோ இறந்த நிலையிலோ அல்லது அதன் புரதம் மற்றும் நச்சுப் பொருட்களை நம் உடலில் சிறிய அளவில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் முறையே வேக்சினேஷன் என்றழைக்கப்படுகிறது.இந்த முறையில் காச நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பி சி ஜிஎனும்வேக்ஸின் கொடுக்கப்படுகிறது. இதை தயாரிக்கும் அரசு நிறுவனம் சென்னையில் 1948இல் டென்மார்க் நாட்டு ஸ்டேட்ன்ஸ் சீரம் நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் துணையோடு தொடங்கப்பட்டு2008 வரை இயங்கியது. முறையான தயாரிப்பு நடைமுறைகள்(good manufacturing practices) இல்லை என்ற காரணத்திற்காக 2008ஆம் ஆண்டு சென்னை உட்பட மூன்று மத்திய ஆய்வங்களில் இந்த மருந்து தயாரிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை ஆய்வகம்  பழைய கட்டிடத்தில் மீண்டும் மருந்து தயாரிக்கும் முயற்சி செய்தது. ஆனால் தரக் கட்டுப்பாட்டு சோதனையில் தேற முடியவில்லை. 2013இல் ரூ64/ கோடி செலவில் புதிய ஆலையை நிறுவத் தொடங்கியது. மூன்று வருடங்கள் கழித்து மத்திய மருந்து தர நிறுவனம் சோதனை அளவில் மருந்து தயாரிக்க உரிமம் வழங்கியது.  ஒவ்வொருமருந்துத் தொகுதிகளும் மத்திய ஆய்வகத்தில் தொடர்ச்சியான தரப் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும்.மருந்தின் மாசில்லாத் தன்மை மற்றும் வினைபுரியும் தன்மை ஆகியவைகளை உள் சோதனைகள் செய்தோம்.ஏனெனில் ஒப்புதல் வழங்கும் நடைமுறை மிகவும் கண்டிப்பானது என்கிறார் ஆய்வக இயக்குனர் மரு.சேகர். புதிய அமைப்பில் அதிகபட்ச மாசற்றதும்(sterile) முற்றிலும் தானியங்கி முறையிலும் மருந்து நிரப்பும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.கண்ணாடிக் குழாய்களில் ஆன் லைன் கருவிகள் மூலம் நிரப்பப்படும் திரவ மருந்து உறை நிலையில் வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது.  தற்போது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிப்பு உரிமம் தரப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டுக்குள் 300லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படும்.விரைவில் அது 500லட்சமாக உயர்த்தப்படும் என்கிறார் மரு.சேகர்.’எல்லோருக்கும் தடுப்பு மருந்து திட்டம்’என்பதற்காக இது பயன்படும். (17/10/19 தேதியிட்டடைம்ஸ் ஆப் இந்தியாவில் புஷ்பா நாராயணன் கட்டுரையின் சுருக்கம்.)


 

;