அறிவியல்

img

அறிவியல் கதிர் - ரமணன்

ஹெச் ஐ வி ஒழிப்பு – புதிய தொடக்கம் 

ஹெச் ஐ வி நுண் கிருமி நமது உடலின் நோய் தடுப்பு சக்தியை தாக்கி பலவித அபாய நோய்களுக்கு இட்டு செல்கிறது. அமெரிக்காவிலுள்ள டெம்பிள் பல்கலைக்கழகமும்  நெபரஸ்கா மருத்துவ ஆய்வு மய்ய ஆய்வாளர்களும் இணைந்து  உயிருள்ள விலங்கின் ஜீனோமிலிருந்து ஹெச் ஐ வி கிருமியின் டி என் ஏவை வெளியேற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.இது ஒரு முதன்முறை  சாதனையாகும். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிகிச்சை உத்தியான லேசர் ஆர்ட்டையும்(long-acting slow-effective release (LASER) ART) ஜீன் திருத்த முறையையும்(gene editing) இணைத்து இதை செய்துள்ளனர்.ஹெச் ஐ வி பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு எலியில் ஹெச் ஐ வி –1-டி என் ஏ முழுவதும் வெளியேற்றப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

சாகா வரம் பெற்ற கரப்பான்கள் 
ஜெர்மனியிலுள்ள கரப்பான் பூச்சிகள் பல்வேறு பூச்சி மருந்துகளின் கலவைகளுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதால் அவைகளை ஒழிப்பது மிகவும் கடினமாகி வருகிறதாம். அங்குள்ள பர்ட் பல்கலைக்கழக ஆய்வொன்றில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.குறிப்பிட்ட வகை பூச்சி மருந்து அடித்தபின் பிழைத்துக்கொண்ட கரப்பானும் அதன் வாரிசுகளும் அந்த மருந்துக்கு மட்டுமல்ல மற்ற வகை மருந்துகளுக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடுகிறதாம்.இதுவரைஎதிர்கொள்ளாத ஒரு சவால் இது என்கிறார்கள் அந்த ஆய்வின் தலைமை அறிவியலாளர்கள்.

கருவுற்றிருக்கும் காலத்தில் நார்ச்சத்து 

ப்ரீஎக்லாம்ப்ஸியா(Preeclampsia) எனும் கோளாறு கருவுற்றிருக்கும் பெண்களில் 10சதவீதம் பேருக்கு  ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தம், சிறுநீரில் புரோட்டீன் கலந்திருப்பது, பெரும் வீக்கம் ஆகியவை இதன் குணாம்சங்கள். கருவில்உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வளர்வதையும் இது பாதிக்கிறது. குழந்தையின் பிற்காலத்தில் ஒவ்வாமை, தற்காப்பு நோய்கள் (autoimmune disease) ஆகியவற்றுடன் இதற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. கருவின் தற்காப்பிற்கு முக்கிய உறுப்பான தைமஸ் இந்த கோளாறினால் பாதிக்கப்படுகிறது. நார் சத்துகள் அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவை கருவுற்றிருக்கும் காலத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கலாம். தாவர நார்ச்சத்து குடலில் உள்ள பேக்டீரியாக்களால் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் காரணிகளாக மாற்றப்படுகிறது என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துளளார்கள்.  அதிக அளவு பதப்படுத்தப்பட்ட மேற்கத்திய உணவு வகைகளில் நார் சத்து குறைவாக உள்ளது. ஒவ்வாமை நோய் மற்றும் தற்காப்பு நோய்கள் வேகமாக வளருவதற்கு கருவுற்றிருக்கும்போது ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாதது ஒரு  காரணம் என்று தெரிகிறது.

ஒளிச் சிதறலும் புற்று நோய் கண்டறிதலும் 

சென்னை  ஐ.ஐ.டியின் உதய்கன்கோஜே ஆய்வாளர் குழு மைக்ரோ வேவ்ஸ் அல்லது ரேடியோ பிரீக்வென்ஸி  (radio frequency) என்று அழைக்கப்படும் அலைகளைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயை கண்டறியும் முறையில் ஈடுபட்டுள்ளார்கள். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல ஆய்வுக் குழுக்கள் இந்த முறையில் ஆய்வுகள் நடத்தி வேலை செய்யும் நிலைக் கருவிகளைக் கூட உண்டாக்கியிருந்தாலும்,சென்னை குழு ‘டீப் லேர்னிங்’ (“deep learning”) எனும் முறையை பயன்படுத்துகிறார்கள். புற்று நோய் திசுக்களின் ஒளிமுறிவுக்கும் மற்ற சாதாரண திசுக்களின் ஒளிமுறிவுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த முறை பயன்படுத்துகிறது. புற்று நோயை கண்டறிய நடைமுறையில் உள்ள எக்ஸ்ரே, எம் ஆர் ஐ ஸ்கேன் ஆகியவற்றைவிட பாதுகாப்பானதும் செலவு குறைவானதும் எங்கும் எடுத்து செல்லக்கூடியதாகவும் இந்த முறை உள்ளது.  இந்த முறையில் நோயாளியை சுற்றி ரேடியோ பிரீக்வென்ஸியை வெளிவிடும் மற்றும் உள்வாங்கும் கருவிகளைப் பொருத்துகிறார்கள். நோயாளியின் திசுக்களில் மோதி வெளிவரும் அலைகளை ஆய்வு செய்கிறார்கள். இதிலிருந்து அந்த திசுக்களின் தன்மையை கட்டமைக்கிறார்கள். இது‘தலை கீழ் சிதறல்’ (inverse scattering )என்பதன் ஒரு செவ்வியல் எடுத்துக்காட்டு. பூமியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பது, பூமியில் புதையுண்டிருக்கும் தொல்லியல் சின்னங்களைக் கண்டறிவது ஆகியவை இந்த தத்துவத்தின் மற்ற எடுத்துக்காட்டுகள்.

சுபஸ்ரீ தேசிகன் கட்டுரையிலிருந்து -14/07/2019 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளிதழ்

ஒளியின் நடனம்

ஒளி மற்றும் அது போன்ற மின் காந்த கதிர் வீச்சுக்களை ஃபோட்டான் (photons) என்ற அலகுகளால் அழைக்கிறார்கள்.அவற்றின் சக்தியானது கதிர்வீச்சின் அலைவரிசையைப் பொறுத்தது. இயக்கத்தில் இல்லாதபோது அதன் எடை பூஜ்யம். முதன்தான் முதலாக இரண்டு ஃபோட்டான்கள் ஒன்றுக்கொன்று வினை புரிவதையும் ஒரு கணம் திட நிலையில் இருப்பதையும் கிளாஸ்கோ பல்கலைகழக இயற்பியலாளர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். இதை குவாண்டம் என்டான்கிள்மென்ட் அல்லது பெல்என்டான்கிள்மென்ட் என்று அழைக்கிறார்கள். லேசர் ஒளிக்கற்றையிலிருந்து இரண்டுஃபோட்டான்கள் பாய்ச்சப்பட்டு பின் இரண்டு பாதைகளில் பிரித்து விடப்பட்டன. இதை ஒரு விசேச கேமிராவால் படம் பிடித்தார்கள். இந்த பிம்பத்தில் இரண்டும் ஒன்றுக்கொன்று ஆடி பிம்பமாக ஒருவளையம்போல் காட்சியளிக்கின்றன.


 

;