அரசியல்

img

மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவது தேசத்துரோகமா?

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அதிர்ச்சி அடைகிறது.

இது குறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, திரையுலகக் கலைஞர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், மணிரத்னம், அபர்ணாசென், ரேவதி போன்றோர் தத்தம் துறைகளில் சாதனை படைத்தவர்கள். நாட்டில் மதவெறியும் சாதிவெறியும் தலைவிரித்தாடுவது  கண்டு துடித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். அதையொரு தேசவிரோதச் செயலாக ஒரு வழக்கறிஞர் புகார் செய்ய, அதன் மீது  வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேதனைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு எழுதாமல் வேறு யாருக்கு எழுதுவார்கள் பொறுப்பான குடிமக்கள்? அதுவும் கூடாது என்பது ஆணவத்தின் உச்சம், பச்சையான மிரட்டல். அதைத்தான் அந்த வழக்கறிஞர் செய்திருக்கிறார்.

இது ஏதோவொரு தனிநபரின் செயல் அல்ல என்பதை அந்த வழக்கறிஞரைப் புகழ்ந்து பாஜகவின் தேசியச் செயலர் எச் ராஜா பதிவு போட்டிருப்பது உறுதி செய்கிறது. மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வன்முறைச் செயல்கள் மத்திய ஆளுங்கட்சிக்கு தேச விரோதச் செயல்கள் அல்ல, அவற்றைக் கண்டிப்பதே தேசவிரோதச் செயல் என்பது வெளிப்பட்டுள்ளது. நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்கிறார்கள். 

இந்த பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் "ஜெய்ஸ்ரீராம்" சொல்லாதவர்கள் கும்பலால் கொலை செய்யப்பட்ட கொடூரத்தைச் சுட்டிக்காட்டி, இது ராமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல், எனவே அந்த குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இப்படி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியது எப்படி தேசவிரோதச் செயலாகும்? உண்மையில் இதுவே இன்றைக்குத் தேவையான தேச பக்தி.

எனவே 49 பிரபலங்கள் மீதான இந்த வழக்கை கைவிடுவதற்கு ஆவன செய்ய வேண்டும், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களின் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. இல்லையெனில் இதில் அதுவும் உடந்தை என்றே கருதப்படும் என்பதை மேடை சுட்டிக் காட்டுகிறது.

நமது அரசியல்சாசனம் வகுத்துள்ள மதச்சார்பற்ற அரசு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு மதவெறி சக்திகளால் பெரும் ஆபத்து எழுந்திருக்கிறது. அதை எதிர்த்து அனைத்து மனிதநேய சக்திகளும் வலுவாகக் குரல் எழுப்புமாறு மேடை அறைகூவி அழைக்கிறது என்று கூறியுள்ளனர்.

 

;