அரசியல்

img

கொரோனா தாக்குதலும் சர்வதேச அரசியலும்... ஸ்ரீரசா

கொரோனா ஒரு சர்வதேசியவாதியாகத் தனது தாக்குதல் எல்லைகளை விரிவுபடுத்துகின்றது. ஆனால் அனைத்து நாட்டுத் தலைவர்களும் குறிப்பாக ஒன்றைச் சொல்கிறார்கள் தேசமாக எழுவோம் என்பதே அது... இல்லாவிட்டால் தங்கள் அடிப்படைகள் தகர்ந்து விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

சற்றும் எதிர்பாராத நிலையில், கண்டங்களை கடந்தவைரசின் தாக்குதலால் தற்போது மேற்குலகமே (ஐரோப்பா-அமெரிக்கா-ஆஸ்திரேலியா) அதிர்ந்து போயுள்ளது. நிலைகுலைந்து காணப் படுகின்றது.“தேசமாகத் திரள்வோம்” என அழைப்பு விடுத்த பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான், கண்ணுக்குப்புலப்படாத வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் யுத்தத்தில் உள்ளோம் என யுத்தப் பிரகடனத்தைச் செய்தார்.இந்த யுத்தத்தில் வெல்ல அனைவரையும் அர்ப்பணிப்போடு தேசமாகத் திரளுமாறு அழைத்தார்.

ஆனால் கியூபா சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத் தத்துவ அறத்தின் படி தன்னை, தன் தேசத்து மருத்துவர்களை,தன் தேசத்து மருந்துகளைச் சர்வ தேசத்துக்கும் வழங்குகிறது. சீனாவோடு இணைந்து கொரோனாவுக்கு எதிரான மருந்துத் தயாரிப்பை விரிவு படுத்துகிறது.தனது தேசத்தில் கொரோனாவை எதிர்கொண்ட சீனாதேசமாகத் திரண்டு, தனது அனைத்துக் கட்டுமானங்களையும் வைரஸ் தொற்றுக்கு எதிராகக் களமிறக்கி, மூன்றேமாதத்தில் அதனை வெற்றி கண்டு நிற்கின்றது. பாதிப்புக்குஉள்ளான மாகாணத்தில் பல கோடி மக்களைத் தனிமைப்படுத்தி, நோயாளிகளுக்கான மருத்துவ மனைகளைக் குறுகிய நாட்களில் நிறுவி, பொது நடமாட்டத்துக்குக் கட்டுப் பாடுகளை விதித்து, நவீன தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி, அனைத்துத் துறைசார் மனித வளங்களை அணிதிரட்டி தேசமாகச் சிந்தித்து, தேசமாக வைரசை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடி நிற்கின்றது.

“சீன வைரஸ்” எனச் சீன தேசத்தை ஏளனப்படுத்தி, சீனர்களுக்கு எதிரான வெறுப்புணர்வையெல்லாம் வெளிப்படுத்திய மேற்குலக அரசியல் பண்பாடும், சமூகப்பண்பாடும் தற்போது சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு ‘வைரஸ்” அவர்களைத் தள்ளியுள்ளது.இத்தாலிக்குள் புகுந்த வைரஸ் பல நூறு உயிர்களைப்பலிகொண்டு, பல ஆயிரம் பேரிடம் தொற்றி அத்தேசத்தையே தடுமாற வைத்துக் கொண்டிருக்கிற வேளையில், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகள் மருத்துவப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனைத் தடை செய்தன. இதற்குத் தமது உள்நாட்டுத் தேவையினைக் காரணங்காட்டின. அதே நேரம் தனது தேசத்தில் வைரஸ் தொற்றினைக் கட்டுக்குள் கொண்டுவந்த அனுபவத்தோடு, மருத்துவ உபகரணங்கள், மருத்துவக் குழுவோடு, சீனா இத்தாலியை வந்தடைந்தது. 

“நாம்
ஒரே கடலின் அலைகள்
ஒரே மரத்தின் இலைகள்
ஒரே தோட்டத்தின் மலர்கள்”

இத்தாலிக்குச் சீனா கொரோனா தடுப்பு மருந்து, உதவிப்பொருட்கள் அனுப்பியதில் மேற்கண்ட வரிகளையும் எழுதியிருந்தது. சீனாவின் அரசியல் கியூபாவைப் போலவே பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சீனாவின் இந்தக் கவிதை வரிகள் உலகுக்கு உணர்த்துகின்றன.ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் ஒரு தேசமாக இணைத்திருக்கின்ற இத்தாலி, தான் சந்தித்துக் கொண்டுள்ள இக்கட்டான சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியநாடுகள், தனக்கு என்ன உதவி செய்தன என்று யோசித்த நிலையில், தனக்கு உதவிய சீனாவுக்கு “நன்றி சீனா ! நன்றிசீனா !” என சீனாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இத்தாலிக்கு மட்டுமல்ல, ஆப்பிரிக்க நாடுகள், ஈரான், இராக், பெல்ஜியம், செர்பியா ஆகிய நாடுகளுக்கும் சீனா தோழமையோடு மருத்துவ உபகரணங்களை வாரி வழங்கி வருகின்றது.இத்தாலி, வைரஸ் தொற்றினால் நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருந்த வேளை, அதன் கொடூரத்தை உணராத பிரான்ஸ், மூன்று வாரங்களின் பின்னர் விழித்துக்கொண்ட போது, நோயாளிகளுக்கு, மருத்துவப் பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இருக்கவில்லை. சுவாசக்கவசங்கள் மருத்துவத் தாதிகளுக்கே இல்லாத நிலை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் வைரஸ் அல்ல, சிகிச்சையினை முழுமையாக வழங்குவதற்கான போதுமான மருத்துவ வசதிகள் அற்ற நிலையே காரணம் எனக் குற்றச்சாட்டுகள் முதலாளித்துவ தேசங்களின் உள்நாட்டில் எழத்தொடங்கியுள்ளன.பிரான்சின் நிலையினை உணர்ந்து கொண்ட நிலையில்தான், முதல் விமானத்தில் ஆக்சிஜன் உட்பட மருத்துவ உபகரணங்களையும், இரண்டாம் விமானத்தில் 10 லட்சம் சுவாசக் கவசங்களையும் சீனா அனுப்பி வைத்தது.சீனா, இன்று கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உதவிகளை எல்லாம் “மனிதநேயத் தோழமை” உதவிகள் எனக் குறிப்பிடும் அதேவேளை, சீனாவில் இருந்து ஐரோப்பா வரை நீண்ட அதனது பட்டுப்பாதை அரசியலின் ஒரு பகுதிச் செயல்பாடு எனவும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் சீனா தனது மனித நேய உதவியின் ஊடாக, தனது அரசியல் செல்வாக்கையும் வலுப்படுத்தி வருகின்றது. சீனாவின் இந்த உதவிகள் சீனா பற்றிய நல்ல எண்ணத்தை உலகப் பொதுமக்களிடத்தில் எழ வைத்துள்ளன. இது சீனாவின் அரசியலுக்குக் கிடைத்து வரும் வெற்றியாக நோக்கப் படுகின்றது.

கடும் விமர்சனத்துக்குள்ளாகும் அமெரிக்கா
மறுபுறம் கொரோனா வைரசை மையப்படுத்தி அமெரிக்காவின் அரசியல், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.குறிப்பாக கொரோனா வைரசின் தாக்கத்துக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக முகம் கொடுத்துள்ள நாடு ஈரான். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால், கொரோனா வைரசை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை சவால்களை எதிர்கொண்டு வருகின்றது ஈரான்.“அமெரிக்கா எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால், ஐரோப்பாவில் சிக்கித் தவிக்கும் ஈரானியர்களை விமானங்களில் அழைத்து வருவது கூடக் கடினமான விஷயமாகிவிட்டது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவ ஈரான் அரசு உருவாக்கிய கைபேசி செயலிகூட, கூகுளால் சென்சார் செய்யப்படுகின்றது. உடனடியாகப் பொருளாதாரத் தடையை விலக்கி மருத்துவக் கொள்முதலுக்கான வழியினை ஏற்படு வலியுறுத்த வேண்டும்.” என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டிரஸ்சுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவீத் ஜாரிப் எழுதிய கடிதத்தின் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு கொடிய வியாதியால் மட்டுமல்ல, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளும் ஈரானின் உயிர்கள் பலியாவதற்குக் காரணம் என்பது இந்தக் கடிதத்தின் ஊடாக வெளிப்படுகின்றது. இதே போன்றதொரு நிலைபாட்டையே வெனிசுலா விஷயத்திலும் அமெரிக்கா எடுத்துள்ளது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது.கொரோனா வைரசிற்கு எதிரான மருந்தை உருவாக்குவதற்கான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஜெர்மன் விஞ்ஞானிகளைத் தனது பக்கம் இழுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விலைபேசிய விஷயம், சர்வதேச ஊடகமொன்றின் வழியே வெளிச்சத்துக்கு வந்ததும், கொரோனா வைரஸ் மருந்திற்குத் தனியொரு நாடுஉரிமை கோரக்கூடாது என ஜி7 நாடுகளின் தலைவர் கூறியிருப்பதும், கொரோனாவிற்குப் பின்னால் உள்ள வர்த்தகப் போட்டியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இவ்வாறு நாணயத்தின் இரு பக்கங்கள் போல், உலகத்தை நோக்கிய மனிதநேயச் செயற்பாட்டின் ஊடாகத் தனது அரசியலை வலுப்படுத்தும் சீனாவும், மறுபக்கம் வணிகம், வெறுப்பரசியல் என்கிற மேற்குலகத்தின் பலவீனமான பக்கமும் வெளிப்படுகின்றன.முதலாளித்துவ தேசங்களால், அவற்றின் கட்டமைப்பால்இனியும் மக்கள் நல அரசுகளாக அவை வேஷம் தரித்திருக்க முடியாது. மேலும் கொரோனா என்கிற ஒரு சர்வதேசத்தாக்குதல் வந்தபின்புதான், முதலாளித்துவ தேசங்களின் கட்டமைப்புகள் எத்தனை மக்கள் விரோதத் தன்மையுடையவை என பல்வேறு நடைமுறைச் சித்திரங்கள் வெளிப் படுத்துகின்றன.பொது சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு, மருந்து உற்பத்தி போன்ற அனைத்தையும் தனியார் மயமாக்கி லாபங்களைக் குவிக்கும் சில ஆயிரம் முதலாளிகளின் பேராசைக்கான முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு, கொரோனா போன்ற தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றது.மாறாக, சின்னஞ்சிறு கியூப தேசத்தின் பொதுவுடமை அடிப்படையிலான கட்டமைப்பும், மார்க்சிய, பாட்டாளிவர்க்க சர்வதேசிய அடிப்படையிலான தொலைநோக்கும் மனித குலத்துக்குப் பெரும் பாடத்தை நடத்துகிறது.கியூபாவும், மக்கள் சீனமும் மார்க்சிய, சர்வதேசிய அரசியலின், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் அரசியலின் மகத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றுகின்றன.

===ஸ்ரீரசா===

;