அரசியல்

img

சட்டமன்றத் துளிகள்...

புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்

தமிழக சட்டப்பேரவை கூட்ட நடவடிக்கைகளை திமுக உறுப்பினர்கள் திங்களன்று(மார்ச்23) முழுமையாக புறக்கணித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் கொறடா சக்ரபாணி,“தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. ஆனால், மாநில அரசு தவறான தகவலை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தை பிடிவாதமாக நடத்தி வருகிறது” என்றார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக அரசு மீண்டும் மீண்டும் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாகவும் தெரிவித்த அவர், இதனால் சட்டமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் அரசு செவிசாய்க்காததால் இந்த கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை முழுவதையும் புறக்கணிப்பதாகவும் கூறினார். திமுகவைத் தொடர்ந்து மற்ற எதிர் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தொடரை புறக்கணித்தனர்.

ராஜேந்திரபாலாஜி வரவில்லை

தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை யான கருத்துக்களை அவ்வப்போது கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கமாகும். குறிப்பாக, ஜெ.  மறைவுக்கு பிறகு ‘மோடி எங்களது டாடி’ என்று கூறினார்.  ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு அடிங்கடா, உதைங்கடா, வெட்டுங்க, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் பேசினார். பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். சிஏஏ  விவகாரத்தில் சிறுபான்மை மக்களை கடுமையாக விமர்சித்தார். இந்த வழிபாடுகளை கிண்டல் செய்தவர்க ளுக்கு ஒரு பாடம் கொரோனா என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். 

இத்தகைய பின்னணியில், அவர் விகித்து வந்த விருது நகர் மாவட்டச் செயலாளர் பதவியை கட்சித் தலைமை  அதிரடியாக பறித்தது. இந்த, நிலையில் திங்களன்று (மார்ச் 23) சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்காமல் புறக்கணித்தார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் காலியாகலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

காலி மைதானம்....

சட்டமன்ற கூட்டத்தை திமுக, காங்கிரஸ்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சி உறுப்பினர்களுடன் ஆளும் கட்சி சார்பில் வெற்றி பெற்ற தமிமுன்அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால், காலி மைதானமாக காட்சியளித்த எதிர் வரிசை இருக்கைகளை பார்த்து அமைச்சர் உரையாற்றினார்.


 

;