அரசியல்

img

சட்டமன்ற துளிகள்...

கொரோனா எதிரொலி:  சிறப்பு பணிக்குழு அமைப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறுகையில்,“கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைக ளையும் எடுக்கவும், அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது”என்றார்.

கூச்சல்-குழப்பம்

கேள்வி நேரத்தின்போது பேசிய முக்குலத்தோர் புலிப்படைகள் கட்சியின் தலைவர் கருணாஸ், தெரிவித்த ஒரு கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் பெரும் அமளி ஏற்பட்டது. கருணாஸ்-க்கு ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் ஒருமையில் பேசிக்கொண்டனர். பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்கள் முன் வரிசைக்கு ஓடிவந்தனர்.  பேரவைத் தலைவர் தொடர்ந்து அமைதிப்படுத்தியும் நிலைமை சீராகவில்லை. ஒரு கட்டத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி ஆகியோர் அவையில் இல்லை. 

எங்கள் கட்சியின் பெயரை தெரிவித்து கருணாஸ் கூறிய அந்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். “கருணாஸ் குற்றச்சாட்டாக கூறவில்லை. பாராட்டுத்தான்  தெரிவித்தார் என பேவைத் தலைவர் அளித்த விளக்கத்தை  ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டி லிருந்து பின்வாங்கவில்லை”. அதனைத் தொடர்ந்து தலை யிட்ட அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், கேள்வி நேரத்தில்  எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கக்கூடாது. இதை மீறும்போதும், தேவையற்றதை பேசும்போதும் அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, கருணாஸ் பேசியதை நீக்க வேண்டும்” என்றார். அதை நீக்க பேரவைத் தலைவரும் ஒப்புக்கொண்டதையடுத்து அமைதி திரும்பியது.

குடியாத்தத்தில் நெசவாளர் பூங்கா அமைக்கப்படுமா?

கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், “குடியாத்தம் தொகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி. இந்தியா சுதந்திரம்  பெற்ற போது செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய  கொடியை நெய்தது அத்தொகுதியை சேர்ந்த நெசவாளர்கள்.  வரலாற்று சிறப்பு வாய்ந்த அத்தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து, அதற்கான பங்கீட்டு தொகையை அரசே செலுத்துமா?” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “ஜவுளி கொள்கை மற்றும் விதியில் ஏற்கனவே உள்ள நடை முறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. பங்கீட்டு தொகையை நெசவாளர்கள் செலுத்தினால் அவர்கள் லாபம் பெறுவார்கள். ஜவுளி பூங்காவிற்கு தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட உட்கட்ட மைப்பு  வசதிகளை அரசு செய்து தர தயாராக உள்ளது” என்றார்.

சட்டப்பேரவையில் இன்று

தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 18) நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
 

;