மும்பை,

டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் புதிய வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ”யோனோ கேஷ்” எனப்படும் இந்த வசதியை நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ-யின் 16,500 ஏடிஎம்களில் மேற்கொள்ள முடியும் என வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்தார்.

இதற்கென ”யோனோ” என்ற செயலியை வங்கி உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த செயலி மூலம் பணம் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கென வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் போனுக்கு 6 இலக்க எண் குறுஞ்செய்தியாக (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.

இதைப் பெற்றவுடன் 30 நிமிஷங்களுக்குள் அருகிலுள்ள ஏடிஎம்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். யோனோ கேஷ் பாயிண்ட்டில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைக்கான அங்கீகார எண் மற்றும் தங்களது பின் எண்ணை அழுத்தி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

டெபிட் கார்டுகளில் நிகழும் மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரஜ்னீஷ் குமார் தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து பரிவர்த்தனைகளையும் இதுபோன்ற யோனோ கேஷ் மூலம் செயல்படுத்த வங்கி திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.