தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் (வயது 49), மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 29 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

தீக்கதிர், செம்மலர் ஏடுகளின் துணை ஆசிரியராகவும்,கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளராகவும், மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவர், திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் ஊழியராக தீவிரமாக செயல்பட்டவர். திருப்பரங்குன்றம் கலை இலக்கிய இரவுகள் மூலமாகஅப்பகுதியின் மக்களை ஈர்த்தவர். இப்பகுதியில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற இந்துத்துவா மதவாத சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அவர், தற்போது மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார். 2011ம் ஆண்டு எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சித் தமிழ் – ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதிநாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை உட்பட16 நூல்கள் எழுதியுள்ளார்.

சமீபத்தில் ஆனந்த விகடன் வாரஇதழில் 111 வாரங்கள் வெளியான “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற நாவலின் ஆசிரியரும் ஆவார். தமிழ்மொழி தொடர்பான தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்வதில்முதன்மைப்பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறபல்வேறு போராட்டங்களை நடத்தியவர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். கட்சி நடத்திய பல்வேறுமக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருப்பவர். மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.