வெலிங்டன்,
நியூசிலாந்தின் இரண்டு மசூதிக்குள்  இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பார்க் பகுதியில் உள்ள மசூதிக்குள் இன்று காலை நுழைந்த அடையாளம் தெரியாத நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இது போல்  இரண்டாவது துப்பாக்கிச்சூடு லின்வுட் புறநகர் பகுதியின் மசூதியில் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 9க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம், இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்கில் இருந்து  ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்ததாகவும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதல் குறித்து அறிந்த நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா ஆர்ட்ரன், “நியூசிலாந்து வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது. மசூதிக்குள் வழிபாடு நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.