ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் கட்டணம் 300% அதிகரித்துள்ளது உயர்கல்வியின் மீதான தாக்குதல் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 5 ஆண்டு பா.ஜ.க_வின் ஆட்சியில் கல்வித்துறைக்கான நிதிகள் பெருமளவில் மாநிலங்களுக்கு அளிக்கப்படாமல் நாட்டின் கல்வி வளர்ச்சி என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அதன் தேர்வு கட்டணங்களையும், கல்வி கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தி உள்ளது.

அதன்படி, மூன்று பாடங்களுக்கு பொதுப்பிரிவினருக்கான நுழைவுத்தேர்வு கட்டணம் 1200 ரூபாயிலிருந்து 3 மடங்கு அதிகரித்து 3600 ஆகவும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நுழைவுத்தேர்வு கட்டணத்தை 900 ரூபாயிலிருந்து அதிகரித்து 2700 ஆகவும், பட்டியலின பிரிவினருக்கான நுழைவுத்தேர்வு கட்டணம் 600 ரூபாயிலிருந்து அதிகரித்து 1800 ஆகவும் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, மோடி அரசு அந்நிய செலாவணியை அதிகரிப்பதாகவும், வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வழிவகை செய்வதாகவும் கூறியது தற்போது கட்டண உயர்வின் மூலம் பொய்யாக மாறியுள்ளது. இவ்வாறு பதிவிட்டிருந்தார். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் இந்தாண்டு மாணவர்கள் சங்கத்தை ஆண்டு கல்வி பொதுக்கூட்டத்திற்கு அழைக்காமல் புறந்தள்ளி அங்கு இந்த முடிவை எடுத்துள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் சாய்பாலாஜி ஜே.என்.யூ பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள் பழமையை கொண்டாடும் நேரத்தில் துணைவேந்தர் ஜெகதீஸ் குமார் பல்கலைக்கழகத்தை உடைத்து கொண்டாட நினைக்கிறார் என முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வெளிநாட்டு படிப்புகளுக்கான பள்ளியின் செயலர் எய்சி கோஷ் இந்திய கலாச்சார அமைப்பில் பேசுகையில், விண்ணப்ப படிவத்தின் விலை உயர்வு என்பது ஏழை மக்களை பல்கலைக்கழகத்தினுள் வருவதை தடுப்பதற்காகவே செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார்.