பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் எனக்கூறி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சிக்கண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து மிரட்டிபணம் பறித்து வந்த கும்பலைச்சேர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூக விரோத கும்பலால் 200க்கும் மேற்பட்டஇளம்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கும்பலுக்கு பின்னணியில் பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் இருப்பதாகஅதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாக முறையான விசாரணையை நடத்திட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதன்ஒருபகுதியாக, இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வியாழனன்று வகுப்புகளைப் புறக்கணித்துஉள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முகிலன்,மாவட்ட செயலாளர் சம்சீர் அகமதுஉள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.