===ஏ.ராதிகா===
‘அண்ணா, அடிக்காதீங்க. வலிக்குதுண்ணா ; கழட்டுறேன்’ என்றும் ; ‘உன்னை நம்பித்தானே வந்தேன்… ஏன்…இப்புடி பண்றே… நான் வீட்டுக்குப் போகணும்…ப்ளீஸ் என்னை விட்ரு’ என்றும் கண்ணீர் மல்க கதறும் அந்த அபலைகளின் காணொளிகள், காண்போர் நெஞ்சைப் பிழிகின்றன. அந்தப் பொள்ளாச்சி பகுதி மாணவியர், இளம்பெண்களின் கதறலைக் காணும்போது, நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற பய உணர்வும், பாதுகாப்பின்மையும் ஒரு கணம் நெஞ்சை அதிரச் செய்கிறது. என்ன செய்யப்போகிறோம் என்ற பதற்றமும், ஏதாவது செய்தாகவேண்டுமே என்ற துடிப்பும் தான், இப்போதைய தேவை.கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி, கல்லுாரி மாணவி ஒருவர் தன் அண்ணனுடன் வந்து பொள்ளாச்சி போலீசில் புகார் அளிக்கிறார். ஆனால் அடுத்தநாளே அந்த மாணவியின் அண்ணனை அ.தி.மு.க., பிரமுகர் நாகராஜ் உள்ளிட்ட நால்வர், வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி, அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆனால் அவர்கள் பிப்ரவரி 27-இல் தான், போலீசாரால் கைது செய்யப்பட்டு, அன்றிரவே ஒரே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர் தான் இப்போது அ.தி.மு.க., வின் முதல்வர் மற்றும் துணைமுதல்வரால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மார்ச் 11இல், அறிவிக்கப்பட்டுள்ள பார் நாகராஜன். இவர் நீக்கப்படும் முன்பு, பொள்ளாச்சி 34ஆவது வார்டு ஜெ.பேரவை செயலாளர். ‘பார்’ நாகராஜ் என்று அழைக்கப்படும் லோக்கல் தாதா!

மறைக்கும் முயற்சி
ஆனால், மாணவி அளித்த பாலியல் புகார் மீது பிப்ரவரி 24இல் தான் போலீசார் புகாரை பதிவு செய்கின்றனர். அதில், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சதீஷ், பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் ஆகியோரை கைது செய்கின்றனர். இவர்கள் நால்வரும் திருநாவுக்கரசு குடும்பத்திற்கு சொந்தமான ஊஞ்சவேலாம்பட்டி சின்னப்பம்பாளையம் பண்ணை வீட்டில், முகநூலில் நட்பாகும் மாணவிகள், இளம்பெண்களை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்து வந்து, தனியறையில் அடைத்து வைத்து, மீண்டும் மீண்டும், பாலியல் சித்ரவதைகள் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டியது அம்பலமானது.

கடந்த 7 ஆண்டுகளாக இதேபோன்ற பாலியல் பயங்கரத்தை இவர்களும், இன்னும் பலரும் சேர்ந்து நடத்தியிருக்கின்றனர். அதில், 200 க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்முறை போலீசார் கைப்பற்றியதே 7 மொபைல்போன்கள், அதில் 60க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்ததாக செய்திகள் வந்தன. லேப்–டாப்புகள், ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ்களை போலீசார் கைப்பற்றியிருந்தனர். இவை குறித்த முழுமையான தகவல்களை வெளியிடாமல் போலீசார் மறைக்கின்றனர். \

மாதர் சங்கம் தலையீடு!
இப்பிரச்சனைகளில் பொள்ளாச்சி பகுதி தி.மு.க.,வினர் தலையிட்டு பிப்ரவரி 28இல் தெருமுனை கூட்டங்களும், மார்ச் 2இல் சாலைமறியலும் செய்துள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, மார்ச் 4இல், அனைத்துக்கட்சியினர், சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மார்ச் 7இல், கோவை மாவட்ட எஸ்.பி.,யிடம் இந்த கொடூர சம்பவத்தை பெண் போலீஸ் அதிகாரியைக்கொண்டு விசாரிக்கவேண்டும். தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும். ‘அ.தி.மு.க., பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன் போலீசாரிடம் இவ்வழக்கை துரிதப்படுத்தவேண்டும்,’ என்று கேட்பதில் அரசியல் தொடர்பு இருக்கிறது என்று நேரடியாக எஸ்.பி.,யிடம் பேசினோம். நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுப்பதாக அப்போது கோவை எஸ்.பி., பாண்டியராஜன் உறுதியளித்தார். தொடர்ந்து மாநில மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அளித்தோம். இதையடுத்து மாநில மகளிர் ஆணையத்தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மாநில டி.ஜி.பி.,க்கு சம்பவம் தொடர்பாக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால், போலீஸ் விசாரணையின் போக்கில் கைதுசெய்யப்பட்ட 4 நபர்களுடன் பிரச்சனையை முடிக்க போலீசார் தீவிரம் காட்டுவதும், ஆளும் கட்சியின் அரசியல் தொடர்புகளும் அடுத்தடுத்து வெளியில் வந்தன. எனவே தான் இதில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் தற்கொலை செய்துகொண்ட கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெண்கள் குறித்த வழக்குகளை எல்லாம் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தினோம். இப்போது சாதாரண கட்சிப்பொறுப்பில் இருந்த ஒருவரை அ.தி.மு.க., தலைமையே ஒரு மாதம் கழித்து நீக்கியதால், அரசியல் தொடர்பு வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

எஸ்.பி., வக்காலத்து!
பிரச்சனை தீவிரமான பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த கோவை எஸ்.பி., பாண்டியராஜன், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும், குண்டர்சட்டத்தில் கைது செய்திருப்பதாகவும், இதில் அரசியல் தொடர்பு ஏதுமில்லை என்றும் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறினார். அதிமுக பிரமுகர் ‘பார்’ நாகராஜனுக்கு பாலியல் விவகாரங்களில் தொடர்பு இல்லை என்றார். இது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுப்போம் என்றும் மிரட்டல் விடுத்தார். இது பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உள்ள ஆளும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினரின் கூட்டணியை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.

புறக்கணிப்பும் – அலறலும் அவதூறும்
அதற்கு பின், நீதிகேட்டு தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு, பொள்ளாச்சி நகராட்சி முன்பு கூடிய ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ,மாணவியரை பலவந்தமாக போலீசார் தாக்கி விரட்டிய சம்பவங்கள் எல்லாம் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த மார்ச் 13இல், மாதர் சங்கத்தின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தையும் புறக்கணித்தன.

ஆனால், தமிழிசை உள்ளிட்டோர் அரசியல் தொடர்புகள் உள்ள இந்த பாலியல் பயங்கரத்தை அரசியல் ஆக்காதீர் என்று அலறுகின்றனர். அக்கூட்டணியின் ஆதரவாளர்கள் குறிப்பாக, பா.ஜ.க., உள்ளிட்ட இந்து அமைப்பினர், அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் அரங்கேற்றுகின்றனர். அதில், மாதர் சங்கம், தி.மு.க., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை இழிவு செய்கின்றனர். இவற்றை மீறித்தான் இந்திய மாணவர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தை கண்டித்து போராட்டங்களை தொடர்கின்றனர். ஆத்திரமுற்ற பொள்ளாச்சி பகுதி மக்கள் கோட்டூர் சாலையில் இருந்த ‘பார்’ நாகராஜனின் பாரை அடித்து நொறுக்கி, போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு, சாதாரண அடிதடி வழக்கில் நாகராஜனை கைது செய்ததை கண்டித்து முழங்கியுள்ளனர். அவரை கைது செய்து கடும் தண்டனை தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் கேட்டு சிரிக்கும் முதல்வர்
இந்த விவகாரத்தில், தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கும் தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தொடர்ந்து குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அ.தி.மு.க.,வின் அதிகார மட்டத்தலைவர்கள் அவர்களுக்கு உதவி செய்வதாகவும் பொதுவெளியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்குப் பின், பொள்ளாச்சி ஜெயராமனை அருகில் வைத்துக்கொண்டே ஆதாரங்களைத் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சிரிக்கிறார். ஆதாரங்களை திரட்டி, உரிய விசாரணை மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டிய பொறுப்பு அரசினுடையது என்பதை எஸ்.பி., தட்டிக்கழிக்கிறார். அரசியல் தொடர்பே இல்லை, 4 செல்போன், 4 வீடியோக்களுக்கு மேல் இல்லை என்று சாதிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து பாலியல் பயங்கரம் சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகிய வண்ணமே உள்ளன. எனவே, தமிழக அரசு இந்த விசயத்தில் அப்பட்டமாக அம்பலமாகி நிற்கிறது.

‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும்/ காவலன் காவல் இன்றெனில் இன்றால்’ என்பது தமிழ்ப் பெரும் புலவன் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் கூற்று. காவலன் காவான் எனில் நாடு வேலியில்லா விளைநிலம் ஆகும் என்று மன்னராட்சிக் காலத்தில் பாடிய பாடல் அது. ஆனால், மக்களாட்சிக் காலத்தில், பெண்களை ஒரு அரசு காப்பாற்றும் என்று நம்பியிருக்க முடியாது. எனவே மக்கள் எழுச்சியின் மூலம் தான் பெண்களுக்கான பாதுகாப்பை, அனைவருக்குமான சமத்துவ வாழ்வை உறுதி செய்யமுடியும். மேலும், இந்த சமூகத்தில், பெண்களுக்கு மட்டுமே புத்தி சொல்கிற, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக்கிற பத்தாம்பசலித்தனமான கருத்துக்களை அடித்து நொறுக்க வேண்டியதுள்ளது.

மனிதச்சங்கிலி!
எனவே, இந்தக் கொடூரமான பாலியல் பயங்கரத்தை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், மாணவியருக்கு நீதி கிடைக்கவும், தமிழகத்தில் தொடர்ந்து வரும் பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும் தொடர் போராட்டங்களை நடத்தி அரசுக்கு அழுத்தம் தரவேண்டியுள்ளது. முதலில் அரசு வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியது. அடுத்து சி.பி.ஐ.,விசாரணைக்கும் பரிந்துரைத்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ., விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

மேலும், இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். சிறப்பு தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவேண்டும். நீதிபதி ஜே.எஸ்.வர்மா பரிந்துரைகளை மத்திய- மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஊர்கூடி முழக்கமிடவேண்டியுள்ளது.

இன்று (மார்ச் 15) மெரினா முதல் பொள்ளாச்சி வரை தமிழகம் எங்கும் அனைத்து மாதர் கூட்டமைப்பினர் ஒன்று கூடி கண்டனம் முழங்குகின்றனர். பொள்ளாச்சியில் அனைத்து கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள் பெரும் மனிதச்சுவர் எழுப்பி, கரம் கோர்த்து நமது கண்டனங்களை அரசுக்கு தெரியப்படுத்தவும், சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வக்கிரங்களுக்கு முடிவு கட்டவும் கரம் கோர்ப்போம். மனிதம் கொண்டு மனித மதில் எழுப்புவோம்… வாரீர்!

கட்டுரையாளர் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.கோவை மாவட்டச் செயலாளர்.