நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், தனக்குக் கிடைத்த ஊராட்சிமன்றத் தலைவர் பதவியைக் கொண்டு சிறப்பாக மக்களுக்குச் சேவை செய்த தியாகி கே.ரத்தினசாமி போன்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். தியாகி கே.ரத்தினசாமியின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. இடுவாய் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன்பிருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர், ஊர்ப் பொது மக்கள் அணிவகுத்துச் சென்று தியாகி கே.ரத்தினசாமியின் நினைவிடத்தில் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் செங்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய என்.குணசேகரன் கூறுகையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் மக்கள் விரோத, மதவெறி அரசியலை அம்பலப்படுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவையும், அதனுடன் கூட்டு சேர்ந்திருக்கும் அதிமுகவையும் தோற்கடித்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள், திமுக அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக இடுவாய் கிராமத்தில் தனக்கு கிடைத்த ஊராட்சிமன்றத் தலைவர் என்ற குறைந்தபட்ச அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளைச் செய்தவர் ரத்தினசாமி. அவர் போன்ற மக்கள் ஊழியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் என்.குணசேகரன் கேட்டுக் கொண்டார். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பேசுகையில், அதிமுக வலிமையான கட்சி, பலமான கூட்டணி அமைத்துள்ளதால் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பேசி வருகிறார். அவர்கள் வலுவான கட்சி என்றால்,ஏன் மூன்றாண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டில் அதிமுக சிக்கி இருப்பதுடன், மக்களுக்கு விரோதமான காரியங்களைச்செய்து வருவதை சுட்டிக்காட்டிய கே.தங்கவேல் அதிமுக, பாஜக அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் த.உமாசங்கர், சீராணம்பாளையம் கட்சிக் கிளைச் செயலாளர் கே.ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர். இடுவாய் கட்சிக் கிளைச் செயலாளரும், தியாகி ரத்தினசாமியின் தம்பியுமான கே.கருப்பசாமி தலைமை ஏற்க, கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணேசன் வரவேற்றார். மேற்கு பகுதி கிளைச் செயலாளர் கே.குமரவேல் உள்பட கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தினர், ரத்தினசாமி குடும்பத்தார், ஊர் மக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.ராமமூர்த்தி நன்றி கூறினார்.